Published:Updated:

தயங்கியபடியே கோரிக்கை வைத்த டீன்! - 5 நிமிடங்களில் 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கிய கனிமொழி

மருத்துவ உபகரணம் வழங்கிய கனிமொழி
மருத்துவ உபகரணம் வழங்கிய கனிமொழி

`கொரோனா சிறப்பு அவசர சிகிச்சை வார்டு கட்டமைப்பு தேவைக்குக் கூடுதலா நிதி வேணும் மேடம்' என்றார் டீன். அடுத்த 5 நிமிடங்களிலேயே ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி அதற்கான கடிதத்தை ஆட்சியரிடம் கொடுத்தார் கனிமொழி.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தனி சிகிச்சை வார்டில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு வந்தார் எம்.பி கனிமொழி. ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் விமானப் போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டதால், நேற்று மதியம் சுமார் 3 மணிக்கு காரில் கிளம்பி இரவு 9 மணிக்குள் தூத்துக்குடி வந்துவிட்டார்.

ஆய்வு மேற்கொண்ட கனிமொழி
ஆய்வு மேற்கொண்ட கனிமொழி

`` தொகுதிக்கு நானே தனியா போய்ட்டு வர்றேன். என்னுடன் யாரும் வர வேண்டாம்' எனக் கூறிவிட்டு காரில் தனியாகவே பயணித்து வந்துள்ளார். காரின் பின்சீட்டில் 100 பேருக்குத் தேவையான முகக் கவசங்கள், கையுறை, கண்ணாடி உள்ளிட்ட உபகரணங்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு வந்தார். இன்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு சிகிச்சை பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணியிடம் வழங்கினார்.

அத்துடன், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துப்பொருள் இருப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். அப்போது, டீன் திருவாசகமணி, “ மேடம்.. கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வார்டின் உட்கட்டமைப்புப் பணிகள், எலிவேட்டர் உள்ளிட்ட சில பணிகளுக்காகக் கூடுதலாக நிதி தேவைப்படுகிறது” எனத் தயங்கியபடியே கேட்டார். “நிச்சயமா நிதி ஒதுக்கீடு செய்கிறேன்” எனச் சிரித்தபடியே சொன்னவர், அடுத்த 5 நிமிடங்களில் காரில் அமர்ந்தபடியே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான கடிதத்தை தயார் செய்தார்.

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்த கடிதம்
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்த கடிதம்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமையில் ஏற்கெனவே நடந்து கொண்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ததற்கான கடிதத்தை வழங்கினார். இதையடுத்து மருத்துவமனை அருகேயுள்ள அம்மா உணவகத்திற்குச் சென்று உணவுகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். உணவு அருந்த வந்த சிலரிடம் “முகத்துல மாஸ்க் போடுங்க. மாஸ்க் போடாம வெளியே வரக்கூடாது” என அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரிவிற்கு மின்தூக்கி வசதி அமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதிக மக்கள் நெருக்கடி உள்ள பகுதிகளில், மாநகராட்சி சார்பில் கூடுதலாக கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஊரடங்கு காலத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மீனவர்கள் உள்ளிட்ட பலருக்கு இந்த உதவித்தொகை போதுமானது கிடையாது. இதை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனிமொழி
கனிமொழி

கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மக்கள் அனைவரும் அரசுக்கும் காவல்துறைக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவின் தீவிரம் அதன் தடுப்பு நடவடிக்கையின் முக்கியத்துவம் அறியாமையால் நியாயவிலைக் கடைகள், மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மக்கள் கூடுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு