Published:Updated:

அத்திவரதர் ஆலயத்தில் அன்பில், வேலூரில் சபரீசன், கனிமொழி மிஸ்ஸிங்...! - விறுவிறு வேலூர் தேர்தல்

அ.சையது அபுதாஹிர்

வேலூருக்குத் தேர்தல் பிரசாரத்துக்கு உதயநிதி சென்றபோது அவருக்குச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள் அவரின் ஆதரவாளர்கள். அதே வேலூரில் கனிமொழி ஆதரவாளர்கள் அப்பட்டமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டாலின் பிரசாரம்
ஸ்டாலின் பிரசாரம்

தி.மு.க இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு உதயநிதி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் என்பதால் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய பிரசாரத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நாளை மாலையுடன் பிரசாரம் முடிவடையவுள்ள நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து இரண்டு நாள்களாக தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

புதன்கிழமையோடு தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிவிட்டார், உதயநிதி ஸ்டாலின். தி.மு.க மகளிரணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இரண்டு நாள்கள் வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்வார் என்று `முரசொலி'யில் அறிவிப்பு வந்தது. ஆனால், அவர் பிரசாரத்துக்கு வரவேயில்லை. ``அவரிடம் ஒப்புதல் கேட்காமலேயே தலைமை, பிரசார தேதியை அறிவித்துவிட்டது. அதைக்கூட அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாவட்டச் செயலாளரோ, களத்தில் நிற்கும் வேட்பாளரோ ஒருவர்கூட நேரடியாக அவரைப் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை. இதனால் மனவேதனையில் வேலூர் பிரசாரத்துக்கு வரும் திட்டமே இல்லாமல் இருந்துவிட்டார், கனிமொழி” என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

இந்த நிலையில், உதயநிதியோடு சென்னை திரும்பிய அன்பில் மகேஷ் மற்றும் டி.ஆர்.ராஜா ஆகியோர் இன்று காஞ்சிபுரம் அத்திரவரதரை தரிசிக்கச் சென்றிருக்கிறார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் பல தி.மு.க புள்ளிகளும் அத்திவரதரை சந்திக்கச்சென்றிருந்த நிலையில், அன்பில் மகேஷ் மற்றும் டி.ஆர்.பி ராஜா ஆகிய இருவரும் குடும்பத்தினருடன் அங்கு சென்றுள்ளனர்.

``வேலூர் தேர்தல் இறுதிக்கட்டத்தில் இருக்கும்போது இவர்கள் காஞ்சிபுரத்தில் இருப்பது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தாதா... தேர்தல் முடிந்த பிறகு கோயிலுக்குச் சென்றிருக்கலாமே?” என்று சில மூத்த நிர்வாகிகள் வேலூர் தேர்தல் களத்தில் புலம்பியிருக்கிறார்கள்.

காஞ்சிபுரத்தில் அன்பில் மகேஷ்
காஞ்சிபுரத்தில் அன்பில் மகேஷ்

ஆனால், `பிரசாரத்தை முடித்துவிட்டுத் தொகுதிக்குச்சென்று அங்கு சில பணிகளை முடித்துவிட்டுத்தான் அவர் அத்திவரதரைத் தரிசிக்க குடும்பத்துடன் காஞ்சிபுரம் சென்றார்” என்கிறார்கள், அன்பில் ஆதரவாளர்கள். அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா இருவருமே உதயநிதிக்கு நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி வேலூரில் இருந்தவரை அவருடைய பிரசாரத்தை முன்னின்று நடத்தியவர்கள் அவர்கள்தான்.

நாளை பிரசாரம் நிறைவுபெறும் நிலையில் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இன்று வேலூருக்குத் திடீர் விசிட் அடித்துள்ளார். வேலூரில் உள்ள நட்சத்திர விடுதியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப்பேசிய அவர், கடைசிக்கட்ட கள நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். ஆனால், ``வேலூர் தேர்தலுக்காக அவர் வரவில்லை. அவர் பெங்களூரு செல்லும் திட்டம் இருந்தது. வரும் வழியில் வேலூரில் தங்கினார்.

வேலூரில் சபரீசன்
வேலூரில் சபரீசன்

அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகளுடன் பேசினார்" என்கிறார்கள், சபரீசனுக்கு நெருக்கமானவர்கள். ஏற்கெனவே தி.மு.க-வில் உதயநிதி ஆதரவாளர்கள் பரவலாக உருவாகி விட்டநிலையில், அவருடைய பிரசாரத்துக்குப் பிரமாண்டமான ஏற்பாடுகளும் கனிமொழி பிரசாரத்துக்கு முறையான அழைப்பே இல்லாமலும் இருப்பது கனிமொழியின் ஆதரவாளர்களைக் கடும் அதிருப்தியடைய வைத்துள்ளது. பிரசாரத்துக்கு கனிமொழி வராதது தி.மு.க-வை ஆதரிக்கும் பெண்கள் மத்தியிலும் விமர்சனத்தைக் கிளப்பியிருக்கிறது.