Published:Updated:

`தொடர் மீம்ஸ் யுத்தத்தில் குமரி தி.மு.க-பா.ஜ.க..!’ -காவல் நிலையம் வரை சென்ற சமூக வலைதள மோதல்

பா.ஜ.க - தி.மு.க
பா.ஜ.க - தி.மு.க

`கட்சித் தொண்டர்கள் தங்களுக்குள் மீம்ஸ் போட்டு உணர்வை வெளிப்படுத்துவது வேறு. முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் பதிவு போடுவது வேறு'

கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க மற்றும் தி.மு.க கட்சிகளுக்கு ஐ.டி விங்க் வலுவாக உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பா.ஜ.க மற்றும் தி.மு.க-வினர் மாறிமாறி மீம்ஸ்களை வெளியிட்டு அது காவல் நிலையத்தில் புகார் ஆகி வழக்கு பதிவு வரை சென்றிருக்கிறது.

`கொரோனா vs மோடி' என்ற தலைப்பில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான மனோ தங்கராஜ் ஒரு பதிவைப் போட்டார். இதனால் கோபமான பா.ஜ.க-வினர் மனோ தங்கராஜ் மீது கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மனோதங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

இந்த நிலையில் பி.ஜே.பி-யினர், மனோ தங்கராஜ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பேசும் ஆடியோவை பதிவேற்றம் செய்து, `விதவைப் பெண்ணிடம் தவறாகப் பேசும் எம்.எல்.ஏ' என வலைதளங்களில் பரப்பினர். இது குறித்து தி.மு.க-வினர் கொடுத்த புகாரின்பேரில் பா.ஜ.க மாநில இளைஞரணிச் செயலாளர் சிவபாலன் மீது கருங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இரண்டு தரப்பும் வெவ்வேறு காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார்களைக் கொடுத்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க மனோ தங்கராஜ் குறித்த ஆடியோவை தி.மு.க-வில் அவரது எதிரணியினரே ஷேர் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மனோதங்கராஜிடம் பேசினோம், ``சமூக வலைதளங்களில் கருணாநிதி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், உதயதிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்களை பா.ஜ.க-வினர் மோசமாக சித்திரித்து மீம்ஸ் வெளியிட்டனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பிரதமர் மோடி குறித்து மீம்ஸ் வெளியிட்டார் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி. அவர் மீது வழக்கு பாய்ந்தது.

மேலும், தமிழகத்தின் கொரோனா தி.மு.க என்றும், எங்கள் தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாகவும் பா.ஜ.க-வினர் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். அதனால்தான் கொரோனா vs மோடி என்ற மீம்ஸை நான் வெளியிட்டேன். அதற்காக என்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒன்றுமே இல்லாத எனது பழைய தொலைபேசி உரையாடலை எடுத்து நான் விதவைப் பெண்ணிடம் தவறாகப் பேசியதாக வலைதளங்களில் பதிந்தார்கள். அதற்காக எங்கள் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எங்கள் கட்சித் தலைவரை மோசமாக விமர்சித்ததைக் கண்டிக்காமல், நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். பா.ஜ.க-வினர் வேண்டும் என்றே ஐ.டி விங்க் மூலம் தி.மு.க-வை விமர்சித்து வருகின்றனர்" என்றார்.

பா.ஜ.க குமரி மாவட்டத் தலைவர் தர்மராஜ்
பா.ஜ.க குமரி மாவட்டத் தலைவர் தர்மராஜ்

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ் கூறுகையில், ``எங்கள் கட்சியின் இளைஞர்கள் தங்கள் தலைவர் மீதுகொண்ட பாசத்தால் எதிர்க்கட்சியினரை விமர்சித்து மீம்ஸ் போடுகிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் குறித்து மீம்ஸ்கள் வருகின்றன. ஆனால், அவர்கள் யாரும் பதிலுக்கு மீம்ஸ் போடுவதில்லை. ஆனால், தி.மு.க மாவட்டச் செயலாளராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் பிரதமரைப் பற்றி மீம்ஸ் போட்டது தவறு. கட்சித் தொண்டர்கள் தங்களுக்குள் மீம்ஸ் போட்டு உணர்வை வெளிப்படுத்துவது வேறு. முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கீழ்த்தரமாகப் பதிவு போடுவது வேறு. எனவே, எம்.எல்.ஏ-வாக இருக்கும் மனோ தங்கராஜ் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு