Published:Updated:

எம்.பி-க்கும் எம்.எல்.ஏ-வுக்கும் மோதல்!

குமுறும் குமரி காங்கிரஸ் நிர்வாகிகள்

பிரீமியம் ஸ்டோரி

‘‘கன்னியாகுமரி தொகுதி எம்.பி-யான வசந்தகுமாருக்கு எதிராக குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ-வான பிரின்ஸ் உள்ளடி வேலைகளைச் செய்துவருகிறார். இருவருக்கும் நடக்கும் பனிப்போர் பஞ்சாயத்து, டெல்லி வரை சென்றுவிட்டது’’ என்று புலம்புகிறார்கள் குமரி காங்கிரஸ் நிர்வாகிகள்.

இதுபற்றி அறிந்த கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸில், எம்.எல்.ஏ என்ற முறையில் பிரின்ஸுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவந்தது. அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பிரின்ஸ்தான் சிறப்பு அழைப்பாளராக இருந்துவந்தார். கன்னியாகுமரி எம்.பி-யாக வசந்தகுமார் வெற்றிபெற்றதும் பிரின்ஸின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. வசந்தகுமார்தான் எல்லா இடங்களுக்கும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுகிறார். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பிரின்ஸ், வசந்தகுமாருக்கு எதிராக ஓர் அணியை உருவாக்கத் தொடங்கிவிட்டார்.

வசந்தகுமார்
வசந்தகுமார்

உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக நாகர்கோவிலில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வசந்தகுமார் சீட் வழங்கியுள்ளார்’ என்று விமர்சித்தார் மாநில மீனவரணி தலைவர் சபீன். மேடையிலிருந்து இறங்கிய அவரை, வசந்தகுமார் ஆதரவாளர்கள் தாக்கினர். மண்டை உடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சபீனை, முதல் ஆளாகச் சென்று சந்தித்தார் பிரின்ஸ். போலீஸில் புகார் கொடுக்கவும் ஐடியா கொடுத்தார்.

மேல்மட்ட நிர்வாகிகள் தலையிட்ட பிறகே அந்தப் புகாரை சபீன் வாபஸ் வாங்கினார். பிறகு, சபீனிடமிருந்து மாநில மீனவரணித் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. சபீனை டெல்லிக்கு அழைத்துச் சென்ற பிரின்ஸ், அவருக்கு மீண்டும் அதே பதவியை வாங்கிக் கொடுத்தார். வசந்தகுமாருக்கும் பிரின்ஸுக்குமான போட்டி இப்படியே தொடர்ந்தால் கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி பலவீனமாகிவிடும் என்ற பயம் தொண்டர்களுக்கு வந்துவிட்டது’’ என்றனர் வேதனையுடன்.

பிரின்ஸ் எம்.எல்.ஏ-விடம் பேசினோம். ‘‘தன் கருத்தைச் சொன்ன சபீனைத் தாக்கியது மிகவும் தவறானது. அதை வசந்தகுமாரிடமும் மேல்மட்ட தலைவர் களிடமும் சொல்லி விட்டேன். தாக்குதல் தொடர்பாக, கட்சி மேலிடம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். இந்த விஷயத்தில் யாரும் கோபப்பட வேண்டிய அவசியமில்லை. நான் காங்கிரஸ் கட்சியிலேயே வளர்ந்தவன். கட்சியை கண்ணியமாக நடத்துவதுதான் என் வேலை. வசந்தகுமாரைப் பற்றி நான் குறை சொன்னதில்லை; அவருக்கு எதிராகவும் செயல்படவில்லை. நியாயத்தின் பக்கம் நிற்கிறேன்’’ என்றார்.

பிரின்ஸ்
பிரின்ஸ்

வசந்தகுமார் எம்.பி-யிடம் பேசினோம். ‘‘கட்சி வளர்ச்சிக்கான பணிகளை மட்டும்தான் நான் செய்கிறேன். டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியால் மனம் சோர்ந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தி, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குத் தயார்படுத்தும் பணிகளில் இருக்கிறேன். நான் யாரையும் வேண்டியவர், வேண்டாதவர் என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு