Election bannerElection banner
Published:Updated:

`கன்னியாகுமரி துறைமுக டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது' - தளவாய் சுந்தரம் தகவல்!

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

'கன்னியாகுமரி துறைமுகம் தூத்துக்குடிக்கு போய்விட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி அவருக்குத்தான் தெரியும். டெண்டர் அறிவிப்பை ரத்துச் செய்ய நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதை ரத்து செய்துவிட்டார்கள்' என்றார் தளவாய் சுந்தரம்.

`சரக்குப் பெட்டக மாற்று முனைய துறைமுகம் வருமா, வராதா...’ என்ற பிரசாரம் கன்னியாகுமரி தேர்தல் களத்தில் தீவிரமடைந்துவருகிறது. இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. அ.தி.மு.க கூட்டணி இந்தத் துறைமுகம் வராது என்கிறது. தி.மு.க கூட்டணியோ, அ.தி.மு.க-வினர் நாடகமாடுவதாகக் கூறுகின்றனர். இந்தநிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளருமான தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

துறைமுக டெண்டர் ரத்தானது குறித்த அறிவிப்பைக் காட்டும் தளவாய்சுந்தரம்
துறைமுக டெண்டர் ரத்தானது குறித்த அறிவிப்பைக் காட்டும் தளவாய்சுந்தரம்

அப்போது பேசிய அவர்``கன்னியாகுமரி துறைமுகத் திட்டத்துக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், இந்நாள் முதல்வர் எடப்பாடியும் தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து, சரக்குப் பெட்டக துறைமுகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. முதல்வர், மத்திய அமைச்சரிடம் பேசியதால், அந்தத் துறைமுகத் திட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் வந்துள்ளது.

மக்களுக்கு விரோதமான திட்டங்களுக்கு எதிராக நாங்கள் மத்திய அரசிடம் குரல் கொடுப்போம். மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மூலம் தூத்துக்குடி சீஃப் இன்ஜினீயர் கொடுத்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டார்கள். எனவே சரக்குப் பெட்டக துறைமுகம் வராது. குமரி மீனவ மக்களை பாதிக்கும் திட்டங்களைக் கொண்டுவர மாட்டோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மீனவ மக்களை பாதிக்கும் வகையில் எந்தத் திட்டமும் கொண்டுவர மாட்டோம். டெண்டர் குறித்த தூத்துக்குடி போர்ட் சேர்மன் அறிவிப்பையும் ரத்துசெய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் தளவாய் சுந்தரம்
செய்தியாளர் சந்திப்பில் தளவாய் சுந்தரம்

கன்னியாகுமரி துறைமுகம் தூத்துக்குடிக்குப் போய்விட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி அவருக்குத்தான் தெரியும். டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதை ரத்து செய்துவிட்டார்கள். டெண்டர் அறிவிப்பு வந்தது போர்ட் ட்ரஸ்ட்டின் நடைமுறை. இதை அரசியலாக்கக் கூடாது. அந்தத் திட்டத்துக்கு மாநில அரசு என்.ஓ.சி கொடுக்கவில்லை. மக்களுக்கு விரோதமான திட்டத்தைக் கொண்டுவர மாட்டேன் என முதல்வர் கூறியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு