Election bannerElection banner
Published:Updated:

மணக்குடி பாலத்துக்குப் பெயர்; காமராஜர் கேபினெட்டின் ஒரே பெண் அமைச்சர்! யார் இந்த லூர்தம்மாள் சைமன்?

லூர்தம்மாள் சைமன்
லூர்தம்மாள் சைமன்

கன்னியாகுமரி அருகேயுள்ள மணக்குடி இணைப்புப் பாலத்துக்கு காமராஜர் அமைச்சரவையில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பெயரைச் சூட்டுவதாக அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது குமரி மாவட்ட மீனவர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.

கன்னியாகுமரி அருகே அமைந்திருக்கிறது மணக்குடி கிராமம். இந்த கிராமத்தின் நடுவே பழையாறு கடலில் கலக்கும் பொழிமுகம் அமைந்துள்ளது. பழையாறு ஓடுவதால் மேலமணக்குடி, கீழ மணக்குடி என இரண்டாகப் பிரிந்துவிட்டது மணக்குடி கிராமம். இதனால் நூறடி தூரத்திலுள்ள மறுகரைக்குச் செல்ல பல கிலோமீட்டர் சுற்றி பறக்கைப் பகுதி வழியாகச் செல்லும் நிலை ஏற்பட்டது. பொதுமக்களின் பல ஆண்டுகால கோரிக்கையின் பலனாக மேல மணக்குடி - கீழ மணக்குடியை இணைக்கும் இணைப்பு பாலம் அமைக்கப்பட்டது. அந்தப் பாலம் 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமியில் தகர்ந்துபோனது. இதையடுத்து ராணுவத்தினர் தற்காலிகமாக இரும்புப் பாலம் அமைத்தனர். பின்னர் தகர்ந்துபோன பழைய இணைப்புப் பாலத்திலிருந்து 50 மீட்டர் வடக்குப் பக்கமாக புதிய இணைப்புப் பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலத்துக்குத்தான் லூர்தம்மாள் சைமன் பெயரை சூட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மணக்குடி பாலம்
மணக்குடி பாலம்

முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த ஊர் மணக்குடி என்பதால், மணக்குடி பாலத்துக்கு அவர் பெயரைச் சூட்டியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. லூர்தம்மாள் சைமன் 26.09.1912-ம் ஆண்டு மணக்குடி மீனவ கிராமத்தில் பிறந்தவர். குளச்சலைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மேனுவேல் சைமன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சைமன், சிலோனுக்கு கருவாடு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தான் பெற்றெடுத்த ஐந்து குழந்தைகளை வளர்த்தெடுப்பதிலும், கணவனுடைய தொழிலை மேம்படுத்துவதிலும், கணவனின் சமூகப் பணிகளில் ஒத்தாசையாகவும் இருந்தார் லூர்தம்மாள். பெண்களுக்கு மாதர் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் வழியாகத் தையல் பயிற்சி, எம்பிராய்டரி, வலைபின்னுதல் போன்ற பயிற்சிகளை வழங்கினார்.

`கப்பலில் காலியாக இருந்த 90 பெட்டுகள்' -குமரி மீனவர் தகவலால் வெடிக்கும் இரான் சம்பவம்

பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க வேண்டும் எனக் கூறப்பட்ட அந்தக் காலத்தில் மீனவர் குலத்திலிருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் லூர்தம்மாள் சைமன். 1957-ல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக குளச்சல் சட்டசபைத் தொகுதியில் லூர்தம்மாள் சைமன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்றைய முதல்வர் காமராஜரின் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். காமராஜர் அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமன். இவர் எல்லா மீனவ கிராங்களிலும் மீனவர் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கப் பாடுபட்டார். அதிலும் குமரி மாவட்டத்திலுள்ள எல்லா மீனவ கிராமங்களிலும் சங்கங்கள் அமைத்து மிக வலுவான மீனவர் அரசியல் தளமாக அவற்றை மாற்றினார்.

எழுத்தாளர் குறும்பனை பெர்லின்
எழுத்தாளர் குறும்பனை பெர்லின்

அந்தக் காலத்தில் மீனவர்கள் பஞ்சு நூல் வலைகளைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். அந்த வலைகள் காற்றுக்கும் மழைக்கும் தாக்குப் பிடிக்காமல் மிகச் சீக்கிரமாக இற்றுப்போயின. கடல் பாறைகளால் கிழிக்கப்படுதல், மழைக்காலங்களில் உலர்த்த முடியாத நிலை போன்றவற்றால் மீனவர்கள் பெரும் அவதிப்பட்டனர். இதற்கு தீர்வு ஏற்படுத்தும்விதமாக ஜப்பான் நாட்டில் கிளாஸ்கோவிலிருந்து டெரிலீன் (Terylene) வலைகளை மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்தார். இந்த வலைகளை 25 சதவிகித மானியத்தில் மீனவர்களுக்கு வழங்கினார். மீனவர்கள் வளர்ச்சிக்காகப் பல திட்டங்களைக் கொண்டு வந்த லூர்தம்மாள் சைமனை குமரி மாவட்ட மீனவர்கள் ரோல்மாடலாகக் கொண்டாடுகிறார்கள்.

மணக்குடி பாலத்துக்கு லுர்தம்மாள் சைமன் பெயர் சூட்டப்பட்டது குறித்து நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் கூறுகையில், ``மணக்குடி பாலத்துக்கு முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பெயரை வைக்கணும்னு 2011-ல இருந்தே கோரிக்கைவெச்சிக்கிட்டிருக்கோம். இப்பத்தான் நிறைவேறி இருக்கு. இதுமட்டுமில்லாம குளச்சல்ல அவங்களுக்கு ஆளுயர வெண்கலச் சிலைவெக்கணும். நாவலர் நெடுஞ்செழியன் பிறந்தநாள் விழாவை அரசு விழாவா கொண்டாடணும்னு அறிவுப்பு வந்த நாள்ல இருந்தே, லூர்தம்மாள் சைமன் பிறந்த நாளையும் அரசு விழாவாக் கொண்டாடணும், நாகர்கோவில்லயும், சென்னையிலயும் அவங்களுக்கு மணிமண்டபம் அமைக்கணும்னும் கோரிக்கைவெச்சோம். ஆனா, இந்தக் கோரிக்கைகள முன்னெடுத்துட்டு போக மீனவர்கள் தரப்பில எம்.எல்.ஏ-வோ, எம்.பி-யோ, அமைச்சரோ இல்லாததுனால இன்னும் நிறைவேறாம இருக்கு" என்றார். பல்வேறு கோரிக்கைகள் மீனவர் தரப்பிலிருந்து எழுந்த நிலையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீனவர்களைக் கவரவே மணக்குடி பாலத்துக்கு லூர்தம்மாள் சைமன் பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் கருத்து எழுந்திருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு