சென்னை தி.நகர் துணை கமிஷனராக இருந்த ஹரி கிரண் பிரசாத் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த 26-ம் தேதி பதவி ஏற்றார். ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த ஹரிகிரண் பிரசாத் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐஐடி-யில் படித்தவர், 2016-ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்றார். திருச்சியில் பயிற்சி ஏ.எஸ்.பி-யாகவும், வள்ளியூரில் ஏ.எஸ்.பி-யாகவும் சென்னை தி.நகர் துணை கமிஷனராக பதவிவகித்தார். முதன்முதலாக மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டிருப்பதால் நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அவரின் தந்தை நரசிம்மலு, தாய் கஸ்தூரி ஆகியோரை அழைத்து வந்ததுடன், பதவியேற்புக்கு முன்னதாக தாய் தந்தையருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.

பெற்றோருக்கு மரியாதை செய்து பதவியேற்றதன் மூலம் குமரி மாவட்ட மக்கள் மனதில் இடம்பிடித்தார் எஸ்.பி ஹரிகிரண் பிரசாத். இந்த நிலையில், நாகர்கோவிலில் உள்ள கவிமணி அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பில் படிக்க தன் மகன் நிஸ்விக்கை சேர்த்ததன் மூலம் மீண்டும் கவனம்பெற்றுள்ளார் எஸ்.பி ஹரிகிரண் பிரசாத். வழக்கமாக அரசு ஊழியர்களும், அரசுப் பள்ளில் ஆசிரியர்களாக இருக்கும் பலரும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் நிலை உள்ளது. இந்த நிலையில், எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் தன் மகனை அரசுப் பள்ளியில் சேர்த்திருப்பது பெருமிதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கமலா கூறுகையில், "இந்தப் பள்ளியில் 542 குழந்தைகள் பயின்றுவருகின்றனர். அவர்களுக்குப் பள்ளி சார்பில் சிறந்த கல்வி அளிக்கப்பட்டுவருகிறது. பள்ளிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன் குழந்தையை இந்தப் பள்ளியில் சேர்த்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு அரசுப் பள்ளி குறித்து நல்ல விழிப்புணர்வு சென்றடையும்" என்றார்.