Published:Updated:

அதிரடிகாட்டும் கபில் சிபல்; மீண்டும் தலைதூக்கும் `ஜி-23’... சமாளிக்குமா காங்கிரஸ்?

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்,`காங்கிரஸ் கட்சியில் யார் தலைவர், யார் முடிவெடுக்கிறார் என்பதே தெரியவில்லை’ என விமர்சன அம்பை எய்திருக்கிறார். மேலும், `ஆமாம் சாமி போட்டு, நடப்பவர்கள் நாங்களல்ல! நாங்கள் ஜி-23 குழுவைச் சேர்ந்தவர்கள்’ எனவும் அதிரடிகாட்டியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பஞ்சாப் மாநில காங்கிரஸை மையமாகவைத்தே, புகைந்துகொண்டிருக்கிறது தேசிய காங்கிரஸ். பஞ்சாப் காங். முதல்வர் அமரீந்தர் சிங் பதவி விலகல், கட்சித் தலைவர் சித்துவின் ராஜினாமா கடிதம், அடுத்தகட்ட தலைவர்களும் பதவி விலகும் அதிருப்தி, அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கும் நிலை என பஞ்சாப் விவகாரத்தை அடியொற்றியே காங்கிரஸ் தலைமைக்கு அடுத்தடுத்தடுத்த அடி விழுந்துகொண்டிருக்கிறது.

தர்ணாவில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
தர்ணாவில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
@capt_amarinder

இந்தநிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும்விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ``காங்கிரஸ் கட்சியில் யார் தலைவர், யார் முடிவெடுக்கிறார் என்பதே தெரியவில்லை!" என தலைமைமீது விமர்சன அம்பை எய்திருக்கிறார். மேலும், ``எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டு, கீழ்படிந்து நடப்பவர்கள் நாங்களல்ல! நாங்கள் ஜி-23 குழுவை சேர்ந்தவர்கள்" எனப் போகிறபோக்கில் மீண்டும் பழைய கடிதக்கட்டுகளை தூசு தட்டியிருக்கிறார். இது காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

கபில் சிபல்
கபில் சிபல்

காங்கிரஸ் தலைமைக்கு வெற்றிடம்:

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது தேசிய காங்கிரஸ். தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைய, தோல்விக்குப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும், ராகுலும் பிரியங்காவும் இணைந்து கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க முயன்றாலும், இறுதி முடிவெடுக்கும் வலிமையான தலைமையில்லா கட்சியாகவே காங்கிரஸ் விமர்சிக்கப்பட்டுவருகிறது. மேலும், சோனியா காந்தியின் மௌனமும் காங்கிரஸுக்கு பெரும் பலவீனமானது.

சோனியா, ராகுல், பிரியங்கா
சோனியா, ராகுல், பிரியங்கா

ராகுல், தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தது முதல் இன்று வரையிலும் கட்சிக்கு அதிகாரபூர்வமான, முறையான ஒரு தலைவர் அறிவிக்கப்படாமல் காங்கிரஸ் தவித்துவருகிறது.

ஜி-23 குழு:

2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பிறகு, கட்சியில் சரியான சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்களான கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள், காங்கிரஸ் தலைமைக்குக் கடிதம் எழுதினர். மேலும், அந்தக் கடிதத்தில் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களைச் சந்தித்து, மீண்டும் அவர்களைக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும், அப்போதுதான் கட்சியை பலப்படுத்த முடியும் என்ற கோரிக்கையையும் ஒருசேர வைத்திருந்தனர்.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

ஆனால், அந்த 23 தலைவர்களின் கோரிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சி செவிசாய்க்கவில்லை. அதோடு கட்சி செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து கடிதம் எழுதிய தலைவர்களையும் கண்டுகொள்ளாமல்விட்டது காங்கிரஸ் தலைமை.

பஞ்சாப் கோஷ்டிப்பூசல்:

`காங்கிரஸ் கட்சியில் கடைசித் தொண்டன் இருக்கும் வரை, கோஷ்ப்பூசல் இருந்துகொண்டுதான் இருக்கும்’ என்ற விமர்சனத்துக்குப் பொருத்தமாகவே செயல்பட்டுவருகிறது தேசிய காங்கிரஸ். இதே உட்கட்சி கோஷ்டிப்பூசல்களால் கர்நாடகா, மத்தியப்பிரதேசம் எனப் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக ஆட்சியை இழந்திருக்கிறது. இப்போது, பஞ்சாப் மாநிலத்திலும் அதேநிலைமையில்தான் காங்கிரஸ் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

பஞ்சாப் காங்கிரஸ் - அமரீந்தர், சித்து
பஞ்சாப் காங்கிரஸ் - அமரீந்தர், சித்து

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத்சிங் சித்து தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஏற்கெனவே சித்துவுடன் கடும் முரண்பாட்டில் இருந்த முதல்வர் அமரீந்தர் சிங் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து புதிய முதல்வராகப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித்சிங் சன்னி தேர்வுசெய்யப்பட்டார். இந்த அதிருப்தியால் கட்சித் தலைவரான சித்துவும் தனது ராஜினாமா கடிதத்தைத் தலைமைக்குக் கொடுத்திருக்கிறார். அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில், பற்றியெறிந்துகொண்டிருக்கும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் விவகாரத்தால் ஏற்கெனவே தலைமைக்கு நெருக்கடி அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடங்கும் கபில் சிபல் ஆட்டம்:

இந்தநிலையில், டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கபில் சிபல் காங்கிரஸ் தலைமையைக் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். அதாவது, `` காங்கிரஸ் கட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற ஒருவரே தற்போது இல்லை. இங்கு முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லை. பாரம்பர்யமிக்க காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு தலைவர்கள் வெளியேறிவருகின்றனர். அது நம்முடைய தவறாகக்கூட இருக்கலாம். அதை கவனத்தில்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

 கபில் சிபல்
கபில் சிபல்

அதேசமயம் ``எங்களைப் போன்றவர்கள் அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து விலகி, மாற்றுகட்சிக்கு செல்பவர்கள் அல்ல; ஆனால், அப்படி விலகிச் செல்பவர்கள் பெரும்பாலும் கட்சித் தலைமையுடன் நெருக்கமாக இருந்தவர்களே! நாங்கள் எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டு கீழ்படிந்து நடப்பவர்கள் அல்ல. நாங்கள் ஜி-23 குழுவை சேர்ந்தவர்கள். எனவே கேள்வி எழுப்பிக்கொண்டுதான் இருப்போம்!" என்று பேசினார்.

இறுதியாக, காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியை (Congress Working Committee) உடனடியாகக் கூட்ட வேண்டும். அப்போதுதான் எல்லாவற்றையும் கலந்தாலோசிக்க முடியும்" எனத் திட்டவட்டமாகக் கூறி முடித்தார். கபில் சிபலைத் தொடர்ந்து, மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தும் தற்போது அதே கோரிக்கையை முன்வைத்து சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

கபில் சிபலின் இந்தப் பேச்சால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், அவர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், தான் சொல்லிய கருத்தில் உறுதியாக இருப்பதாக கபில் சிபல் பதிலடிகொடுத்திருக்கிறார். மேலும், கபில் சிபலுக்கு ஆதரவாக குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சசி தரூர் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவளித்துவருகின்றனர்.

கட்சிக்குள் நடக்கும் இத்தனை இடர்பாடுகளையும் காங்கிரஸ் தலைமை சமாளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு