Published:Updated:

ஜல்லிக்கட்டுக்குச் சாதகமாகத் தீர்ப்பு: கவனம் பெற்ற கபில் சிபலின் வாதங்கள் - ஒரு பார்வை!

உச்ச நீதிமன்றம்

"ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லும். அது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை. எனவே, போட்டி நடத்தத் தடையில்லை" என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 18-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

Published:Updated:

ஜல்லிக்கட்டுக்குச் சாதகமாகத் தீர்ப்பு: கவனம் பெற்ற கபில் சிபலின் வாதங்கள் - ஒரு பார்வை!

"ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லும். அது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை. எனவே, போட்டி நடத்தத் தடையில்லை" என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 18-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதற்கிடையில், மத்திய அரசு காளை மாடுகளைக் காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்கியது. இதையடுத்து, `தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்' என விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடைவிதித்து 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தன. குறிப்பாக மெரினாவில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. பின்னர் தமிழக அரசு 2017-ம் ஆண்டு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியது. பின்னர் இதை எதிர்த்து பீட்டா, பல்வேறு விலங்குகள் நலவாரிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த மனுக்கள் மீதான விசாரணையைக் கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தொடங்கியது. அப்போது தமிழ்நாடு அரசு உட்பட எதிர்மனுதாரர்கள் தரப்பு வாதத்தில், ‘‘தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி கலாசாரம் மற்றும் பாரம்பர்யத்தைப் பாதுகாக்கவும், நாட்டு மாடு இனம், காளை இனம் காக்கவும்தான் நடத்தப்படுகிறது.

ஜல்லிக்கட்டுப் போராட்டம்
ஜல்லிக்கட்டுப் போராட்டம்

மேலும் காளைகளின் உயிர், நல்வாழ்வை உறுதிசெய்யும் விதமாக அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தமிழகத்தில் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு அல்ல, அது திருவிழா. அது கோயிலோடு தொடர்புடையது. காளை என்பது எங்களது குடும்ப உறுப்பினர். அவ்வாறு இருக்க எப்படி ஒரு குடும்ப உறுப்பினரை நாங்கள் துன்புறுத்துவோம்... ஜல்லிக்கட்டுக்கு இரு நாள்களுக்கு முன் ஊரே கோயிலில் கூடி காளைக்காகச் சிறப்பு பிரார்த்தனை செய்வோம்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

மேலும், அந்தக் காளைகளைத் தெய்வமாகப் பாவித்து வணங்குகிறோம். சுமார் 5,000 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் காளைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. எனவே கலாசாரம், பண்பாடு, மதம், பாரம்பர்யம் என அனைத்தையும் ஒன்றிணைத்த பொதுத் திருவிழா ஜல்லிக்கட்டு. அதனால் தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிரான அனைத்து ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. "ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பொருத்தமட்டில் எந்த விதிமீறலும் கிடையாது. இதில் சட்ட விதிகள் மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாகச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தை ஆய்வுசெய்த நிபுணர் குழுகூட அதில் எந்த விதிமீறல்களும் இல்லை எனத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது.

'பீட்டா'!
'பீட்டா'!

மேலும், இது மாநில அரசின் கொள்கை சார்ந்த விவகாரம். அதற்குத் தடை விதிக்க முடியாது’’ எனத் தெரிவித்தார். பீட்டா, விலங்குகள் நல அமைப்புகள், ‘‘ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஏற்கெனவே இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் இந்தப் பழக்கத்தைக் காட்டுமிராண்டித்தனம் என அறிவித்துவிட்டதால், அதை மீண்டும் இந்த நீதிமன்றம் மாற்றி அமைக்கக் கூடாது.

மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மனித உரிமை மீறல்கள், பாரம்பர்ய காளை இனங்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என்பதைக் கண்டிப்பாக ஒருபோதும் ஏற்க முடியாது. இது காளைகளுக்கு இழைக்கப்படும் கொடூரமாக இருக்கிறது’’ எனத் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவுசெய்துகொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி ஒத்திவைத்தது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹெச்.ராய், சி.டி.ரவிக்குமார் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில், ‘‘ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல்செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் உச்ச நீதிமன்றத்துக்குத் திருப்தியளிக்கும் விதமாக இருக்கிறது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். குறிப்பாக இந்திய அரசியல் சாசனப் பிரிவின் 14, 21-ன்படி அடிப்படை உரிமைகள் எதுவும் தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் பாதிக்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

அதனால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தம் செல்லும். ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டின் கலாசாரத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம். கலாசாரம் என்ற வகையில் ஜல்லிக்கட்டு இருந்தாலும்கூட அதில் துன்புறுத்தல் என்று வரும்போது அதைத் தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லும். அது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எங்களுக்கு அனுப்பப்பட்ட ஐந்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே போட்டி நடத்தத் தடையில்லை’’ எனத் தீர்ப்பு வழங்கினர். மேலும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட அனைத்து ரிட் மனுக்களையும் தள்ளுபடிசெய்து வழக்கை முடித்துவைத்தனர்.

கபில் சிபல்
கபில் சிபல்

முன்னதாக இந்த வழக்கில் வழக்கறிஞர் கபில் சிபலின் வாதம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவர், "ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சில மரணங்கள் நடந்திருக்கிறது உண்மைதான். ஆனால், இதைத் தடுக்கத்தான் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்தில் விதிகள் இருக்கின்றன. இதனால் மரணங்கள் தடுக்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு காரணமாகவே நாட்டுக் காளைகளின் அங்கீகாரம், மதிப்பு, விலையும் அதிகரிக்கும். நாட்டுக் காளைகளைக் காக்க இது உதவும். மற்ற விலங்குகளை வைத்துப் போட்டிகள் நடப்பது இல்லையா... பல விலங்குகளைவைத்து வேலைகளைச் செய்கிறார்களே... அது தவறு இல்லையா... இதில் காளைகளின் வீரத்தைக் காட்டுகிறார்கள். காளைகள் ஏன் முக்கியம் என்பதைக் காட்டுகிறது.

ஜல்லிக்கட்டுக் காளை
ஜல்லிக்கட்டுக் காளை

குதிரைகளை மட்டும் போட்டிகளில் பயன்படுத்துகிறார்களே... அதில் என்ன தவறு இருக்கிறது. குதிரைகளைப் பயன்படுத்துவதை இவர்கள் ஏன் எதிர்ப்பது இல்லை... ஜல்லிக்கட்டு காரணமாகவே நாட்டுக் காளைகள் உயிர் வாழ்கின்றன. சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. இல்லையென்றால் வெளிநாட்டுக் காளைகள் அந்த இடத்தைப் பிடித்துவிடும்" என்ற முக்கியமான கருத்துகளை தனது வாதத்தில் வைத்தார். இது சம்பந்தப்பட்ட வழக்கில் ஜல்லிக்கட்டுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்க வித்திட்டது.