Published:Updated:

`ஹெச்.ராஜாவைப் பார்த்து மாநிலத் தலைமை பயப்படுகிறது!’ - கொதிக்கும் முன்னாள் பா.ஜ.க நிர்வாகி

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

``ஹெச்.ராஜாவைக் கண்டு மாநிலத் தலைமையே பயப்படுகிறது. ஹெச்.ராஜா இருக்கும் வரை பா.ஜ.க உருப்படாது'' - கொதிக்கும் முன்னாள் பா.ஜ.க நிர்வாகி! - கட்சியில் ஹெச்.ராஜாவுக்கு இருக்கும் செல்வாக்கின் பின்னணி என்ன?!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா. தேர்தல் முடிவுகள் வெளியான சில நாள்களில், `என் தோல்விக்குக் கட்சி நிர்வாகிகள்தான் காரணம்' என அவர் குற்றம்சாட்ட, பா.ஜ.க நிர்வாகிகள் ஆத்திரமடைந்தனர்.

இதையடுத்து, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சிலர் தங்களது கட்சி நிர்வாகப் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர். அதோடு, `ஹெச்.ராஜா தேர்தலுக்காகக் கட்சி மேலிடம் கொடுத்த பணத்தைச் சுருட்டிவிட்டதாகவும், 4 கோடி ரூபாயில் காரைக்குடியில் அவர் வீடு கட்டிவருவதாகவும்' குற்றம்சாட்டினர். மேலும், ``தேர்தலுக்காக மாவட்ட நிர்வாகிகள்தான் செலவழித்தோம். ஹெச்.ராஜா பூத் கமிட்டிக்குக்கூட செலவு செய்யவில்லை. கட்சி மேலிடம் கொடுத்த பெருந்தொகையை அவர் சுருட்டிவிட்டார்'' என்று குற்றம்சாட்டிப் பரபரப்பைக் கிளப்பினர் பா.ஜ.க நிர்வாகிகள்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
`4 கோடி ரூபாயில் வீடு; தேர்தல் பணம்?!’ - ஹெச்.ராஜா மீது பாயும் காரைக்குடி நகர பா.ஜ.க தலைவர்!

இது குறித்து தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் எல்.முருகன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில், ``தேர்தல் கமிஷன் வரையறுத்திருக்கும் தொகையை மட்டுமே செலவு செய்து பிரசாரம் செய்திருக்கிறார் ஹெச்.ராஜா. மற்றபடி எங்கள் கட்சி யாருக்கும், எந்தவிதக் காசும் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால்தானே குற்றச்சாட்டு எழும்!'' என்றவரிடம், ``இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் புகார் கொடுத்து, ராஜினாமா செய்திருக்கிறார்களே?'' என்ற கேள்வியையும் முன்வைத்தது ஜூனியர் விகடன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்.

ஹெச்.ராஜா, பா.ஜ.க-வின் மூத்த தலைவர். அப்படிப்பட்ட ஒருவர்மீது போகிற போக்கில் யாரும் குற்றம் சுமத்திவிட முடியாது. அதேசமயம், பா.ஜ.க என்பது ஒரு ஜனநாயகக் கட்சி. எனவே, கட்சி நிர்வாகிகள் இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிற சூழலில், இது குறித்து விசாரிக்கத் தலைமைக் கழகத்திலிருந்து ஒரு குழு சிவகங்கை சென்றிருக்கிறது.
எல்.முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர்

இந்தநிலையில், நேற்று ஹெச்.ராஜா மீது குற்றம் சுமத்திய சிவகங்கை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். காரைக்குடி பெருநகர பா.ஜ.க தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டல தலைவர் பிரபு ஆகியோரை கட்சிப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு பா.ஜ.க.

நெட்டிசன்கள் சிலர், ``பா.ஜ.க ஜனநாயகக் கட்சி. எங்கள் மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுப்போம் எனச் சொல்லிவிட்டு, புகார் அளித்தவர்களையே கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது பா.ஜ.க. இதுதான் உங்கள் ஜனநாயகமா... ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கு என்ன காரணம்... ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வான ஹெச்.ராஜாவுக்குக் கட்சியில் ஏன் இவ்வளவு செல்வாக்கு?'' என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பிவருகின்றனர்.

இது தொடர்பாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் காரைக்குடியைச் சேர்ந்த சந்திரனிடம் பேசினோம். ``ஹெச்.ராஜா மீது புகாரளித்ததும், இந்தப் புகார் தொடர்பாக பத்திரிகைகளில் பேட்டியளித்ததும் கட்சி விதிமீறல் என்று சொல்லி எங்களைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். ஹெச்.ராஜா மீது நாங்கள் வைத்த குற்றச்சாட்டை விசாரிக்க மாநிலக்குழு இங்கே வந்தது. வந்தவர்கள் எங்களைத்தான் முதலில் கூப்பிட்டு என்ன பிரச்னை என்று விசாரித்திருக்க வேண்டும். ஆனால், எங்கள் பக்கமே அவர்கள் வரவில்லை. விசாரணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஹெச்.ராஜாவை மட்டுமே சந்தித்துப் பேசினார்கள். பின்னர், ஹெச்.ராஜாவின் காரிலேயே விசாரணைக்காக வந்தவர்கள் ஏறிச் சென்றுவிட்டனர். எங்களிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை. விசாரணைக்காகக் கட்சி அலுவலகத்துக்கும் வரச் சொல்லவில்லை. அப்போதே இது ஒருதலைபட்சமாகத்தான் நடக்கும் என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது.

எல்.முருகன், ஹெச்.ராஜா
எல்.முருகன், ஹெச்.ராஜா

ஹெச்.ராஜாவின் தூண்டுதலால், மாவட்டத் தலைவர் எங்களை ராஜினாமா செய்யச் சொன்னார். அதன் காரணமாகத்தான் நாங்கள் ராஜினாமா செய்தோம். இப்போது ஹெச்.ராஜா கொடுத்த அழுத்தம் காரணமாகக் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறோம். பா.ஜ.க-வின் வளர்ச்சிக்காக நிர்வாகிகள் எவ்வளவோ செலவு செய்திருக்கிறோம். நான் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தைவைத்து காரைக்குடியில் தொழில் தொடங்கி நல்ல நிலைமையிலிருந்தேன். இப்போது காய்கறி விற்றுக்கொண்டிருக்கிறேன். நான் இந்த நிலைமைக்கு வந்ததற்குக் காரணம் இந்தக் கட்சிதான்.

பிரதமர் மோடி மதுரைக்கு வந்தபோது 17 பேருந்துகளை வாடகைக்கு எடுத்து 1,256 பேரை அந்தப் பொதுக்கூட்டத்துக்கு என் சொந்தச் செலவில் அழைத்துச் சென்றேன். என்னைப் போன்று எத்தனையோ நிர்வாகிகள் கட்சி வளர்ச்சிக்காக உழைத்திருக்கின்றனர், செலவு செய்திருக்கின்றனர். ஆனால், இன்று கட்சிக்காக உழைத்த எங்களையே கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள் என்றால், கட்சி அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஹெச்.ராஜா கட்சியிலிருக்கும் வரை சிவகங்கை மாவட்ட பா.ஜ.க உருப்படப்போவதில்லை. அதேபோல இப்போது இருக்கும் மாநில கமிட்டி, தொண்டர்களைக் கைவிட்டுவிட்டு ஹெச்.ராஜாவுக்கு சாதகமாக நடக்கிறது என்பதால், மாநில பா.ஜ.க-வும் வளர்ச்சியடையப்போவதில்லை. அகில இந்தியத் தலைமை தலையிட்டு, மாநில கமிட்டியை மாற்றியமைத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் பா.ஜ.க முன்னேறும்'' என்றார்.

``கட்சி விதிமீறல் என்றால் நீங்கள் பத்திரிகைகளில் பேட்டியளித்தபோதே கட்சியைவிட்டு நீக்கியிருக்கலாமே... இப்போது ஏன் திடீரென்று நீக்கப்பட்டிருக்கிறீர்கள்?'' என்ற கேள்வியைச் சந்திரனிடம் முன்வைத்தோம்.

அதற்கு, ``கட்சி விதிமீறல் என்றாலும்கூட எங்களை அழைத்து அது குறித்து விசாரணை நடத்தி, எங்கள்மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம். கட்சியைவிட்டு நீக்கியிருக்கக் கூடாது. 30.6.2021 அன்று, கட்சிக்காக நான் செய்த பணிகளைப் பட்டியலிட்டு, மாநில தலைவர் எல்.முருகனுக்குக் கடிதம் அனுப்பினேன். அதில், `மாவட்டத் தலைவர் சொன்னபடி நான் ராஜினாமா செய்தேன். என்னை ராஜினாமா செய்யச் சொன்னதற்கு என்ன காரணம் என்பது குறித்துப் பல முறை மாவட்டத் தலைவரிடம் விளக்கம் கேட்டும் பதில் கிடைக்கவில்லை' என்றும் குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கடிதம் 1.7.2021 அன்று காலை மாநிலத் தலைவர் கைக்குக் கிடைத்திருக்கும். அதன் பிறகு மாலையில் எங்களைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்'' என்றார்.

சந்திரனின் கடிதம்
சந்திரனின் கடிதம்
ஹெச்.ராஜா, மூத்த தலைவர்... ஆனாலும் விசாரணை செய்வோம்! - எல். முருகன் அதிரடி

``மாவட்ட பொறுப்பிலோ, மாநில பொறுப்பிலோ இல்லாத ஹெச்.ராஜா, எப்படி அழுத்தம் கொடுத்து உங்களைக் கட்சியிலிருந்து நீக்கக் காரணமாக இருந்திருப்பார்?'' என்று கேட்டோம்.

அதற்கு, ``முன்பு வகித்துவந்த தேசியச் செயலாளர் பொறுப்பு உட்பட எந்தப் பொறுப்பிலும் ஹெச்.ராஜா இப்போது இல்லை. இருந்தும், மாநில பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உட்பட மாநிலப் பொறுப்பிலிருக்கும் அனைவரும் புதியவர்கள். ஆகையால், மூத்த தலைவரான ஹெச்.ராஜாவைப் பார்த்து பயப்படுகிறது மாநிலத் தலைமை. அந்த பயம்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கும், எங்களைக் கட்சியிலிருந்து நீக்கியதற்கும் காரணமாக இருக்க வேண்டும்'' என்றார் சந்திரன்.

பா.ஜ.க வட்டாரங்களிடம் இது குறித்து விசாரித்தபோது, ``ஹெச்.ராஜா பா.ஜ.க-வில் இணைவதற்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ்-ஸில் பங்காற்றியதால், கட்சியில் அதிக முக்கியத்துவம் பெறுகிறார். 40 ஆண்டுகளாகக் கட்சியிலிருக்கும் ஹெச்.ராஜாவுக்கு டெல்லி வரையிலும் செல்வாக்கு இருப்பதால்தான் அவர்மீது எந்த நடவடிக்கையும் பாய்வதில்லை'' என்கிறார்கள்.
அடுத்த கட்டுரைக்கு