Election bannerElection banner
Published:Updated:

``ஆயிரங்களிலிருந்து லட்சத்துக்கு விற்பனை... மோடி செய்த நல்லவை..!" - `காரப்பன் சில்க்ஸ்' காரப்பன்

காரப்பன்
காரப்பன் ( தி.விஜய் )

``பட்டுப்புடவை தயாரிப்பில் காஞ்சிபுரம், ஆரணிக்கு அடுத்து சிறுமுகை மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த விஷயத்துக்குப் பிறகு சிறுமுகை முதல் இடத்துக்கு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை."

தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ள துணிக்கடைகள், விளம்பரங்களை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தாலும், கோவை மாவட்டம், சிறுமுகையில் உள்ள காரப்பன் சில்க்ஸ்தான் தீபாவளி ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

காரப்பன்
காரப்பன்

சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் நிறுவனரும், தேசிய கைத்தறி நெசவு பயிற்சியாளருமான காரப்பன், கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு கருத்தரங்கில் இந்துக் கடவுள்கள் குறித்து பேசிய கருத்து சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவியது.

`இந்துக் கடவுளை எப்படி விமர்சிக்கலாம்?' என்று இந்து அமைப்புகள் காரப்பனுக்கு போர்க்கொடி எழுப்பியுள்ளனர். காரப்பன் மீது போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, காரப்பன் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால், பி.ஜே.பி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, `காரப்பன் சில்க்ஸை புறக்கணிப்போம்' என்று சமூக வலைதளத்தில் பதிவு போட்டார்.

ஹெச்.ராஜா பதிவு
ஹெச்.ராஜா பதிவு

அந்த பதிவுக்குப் பிறகு விஷயம் வெறித்தனமாக பரவத்தொடங்கியது. `காரப்பன் சில்க்ஸ்' சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது. சில கேள்விகளுடன் காரப்பனை சந்தித்தோம்.

``என்ன சார் ஆச்சு?"

``நான் கைத்தறி நெசவாளன். பொள்ளாச்சி முதல் சத்தியமங்கலம் வரை லட்சக்கணக்கான தறிகள் உள்ளன. தனியாரிடம் 98 சதவிகிதமும், அரசிடம் 2 சதவிகித தறிகளும் உள்ளன. ஆனால், அரசு ஒதுக்கும் நிதி எல்லாமே அந்த 2 சதவிகிதத்தினருக்குத்தான் செல்கிறது. தனியார் தொடங்கும் துணிக்கடைகள் முன்னேற்றப் பாதையில் செல்ல, அரசிடம் இருக்கும் கோ- ஆப்டெக்ஸ் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.

பத்து ஆண்டு முயற்சிக்குப் பிறகு நான் ஒரு தறி கண்டுபிடித்தேன். அந்தத் தறியை இயக்க, நெசவு தெரிய வேண்டாம். ஒரு காலில், குழந்தைகள் கூட அந்தத் தறியை இயக்கலாம். விஞ்ஞானியை உருவாக்குவதைவிட, நெசவாளியை உருவாக்குவது கடினம். கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன.

இதை அடுத்தத் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளேன். கைத்தறி நெசவுக்காக இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளேன். ஆனால், யாரும் இந்தத் துறையைக் கண்டுகொள்வதில்லை. நெசவைத் தொலைத்துவிட்டு, நிர்வாணமாக நிற்கப் போகிறோமா என்ற ஆதங்கத்தில்தான் அப்படி பேசினேன். நான் பேசியதை முழுவதும் கேட்டிருந்தாலே எனது ஆதங்கம் தெரிந்திருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்து, பரப்புவது மிகுந்த மனக் கஷ்டத்தைத் தருகிறது. இது என்ன தீண்டத்தகாத தொழிலா? எனது தொழிலை உயர்த்திப் பேசுவதில் நான் பெருமை கொள்கிறேன்."

``இந்து அமைப்புகளின் விமர்சனம் குறித்து?"

``பட்டுப்புடவை தயாரிப்பில் காஞ்சிபுரம், ஆரணிக்கு அடுத்து சிறுமுகை மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த விஷயத்துக்குப் பிறகு...

Posted by Vikatan EMagazine on Wednesday, October 23, 2019

``நான் எந்தக் கட்சிக்கோ, சாதிக்கோ சொந்தக்காரன் அல்ல. எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்தது பி.ஜே.பி அரசுதான். எனது புத்தகத்தை கமலாலயம் சென்று கொடுத்திருக்கிறேன். பா.ஜ.க-வைச் சேர்ந்த கேசவவிநாயகம் ரூ 25,000 டொனேஷன் கொடுத்தார். மோடியை ஒருவகையில் பெரியாராகத்தான் பார்க்கிறேன். `களிப்பறை’ தேவையா, கழிவறை தேவையா என்பதற்கு கழிவறைதான் தேவை என்று ஓர் இடத்தில் அவர் சொன்னார். அந்த விஷயத்தில் மோடியை நான் பெரியாரின் இன்னொரு உருவமாகத்தான் பார்க்கிறேன்.

தேசிய கைத்தறி தினம் கொண்டுவந்தது பி.ஜே.பிதான். நெசவுக்கு ஒரு தினம் இல்லை என்று என் புத்தகத்தில் எழுதியிருந்தேன். அதை மோடியின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். தேசிய கைத்தறி தினம் கொண்டுவந்தது கூட மோடி அரசாங்கம்தான்.

இதில் போட்டி, பொறாமை எல்லாம் இல்லை. என் குடும்பத்தினரே கடவுள் பக்தி கொண்டவர்கள்தான். அது அவர்கள் உரிமை. அதில் நான் தலையிடுவதில்லை."

``நீங்கள் ஒரு பெரியாரிஸ்ட். ஆனால், உங்கள் இயக்கத்திலேயே கைத்தறி குறித்துப் பேசுவதில்லை என்று வருத்தப்பட்டிருந்தீர்களே?"

காரப்பன்
காரப்பன்
Vikatan / T.Vijay

``கைத்தறி குறித்து யாருமே கண்டுகொள்வதில்லை என்பதுதான் எனது வருத்தமே. கைத்தறிக்காக தனிப்பிரிவு இருக்கிறது. ஆனால், அந்தப் பிரிவு அவர்களை மட்டுமே பாதுகாத்துக் கொள்கிறது. பொன்னாடையை போர்த்தி நெசவாளர்களுக்கு அங்கீகாரத்தைக் கொடுத்தது பெரியார்தான். திருக்குறளிலேயே, நெசவுக்காக ஒரு குறள்கூட இல்லை. நெசவாளியைப் பொன்னாடையை போர்த்தி மரியாதை செய்யாவிடினும், அவனுக்கான சரியான அங்கீகாரத்தைக் கொடுப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்னை?"

``உங்களுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?"

`` `எங்களுக்கு நெசவு தெரியாது. ஆனால், அவருக்கு நெசவு தெரியும். அவரைப் பாதுகாப்பது அவசியம்’ என்று நீலகிரி எம்.பி ராசா எனக்காக ஆதரவு தெரிவித்துள்ளார். அறிமுகம் இல்லாதவர்கள் கூட எனக்கு ஆதரவு தெரிவிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது."

காரப்பன்
காரப்பன்

``ஹெச்.ராஜாவின் கருத்து குறித்து?"

"என்ன சொல்வது.... ஆயிரங்களில் நடந்துகொண்டிருந்த வியாபாரம், இப்போது லட்சங்களில் சென்றுகொண்டிருக்கிறது. ஆன்லைனில் அதிகளவு 5 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துக் கொண்டிருக்கிறது. எங்களது கடைக்கு மட்டுமல்ல, சிறுமுகையில் உள்ள அனைத்துக் கடைகளுக்குமே ஜாக்பாட்தான். பட்டுப்புடவை தயாரிப்பில் காஞ்சிபுரம், ஆரணிக்கு அடுத்து சிறுமுகை மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த விஷயத்துக்குப் பிறகு சிறுமுகை முதல் இடத்துக்கு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை."

``நெசவுத் தொழிலுக்காக மக்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?"

``70 கோடி பேருக்கு இதில் வேலைவாய்ப்பு உள்ளது. படிக்காதவர்கள் முதலாளியாக இருக்கும்போது, படித்தவர்கள் ஏன் இந்தத் துறைக்கு வரக்கூடாது. இளைஞர்கள் இந்தத் துறைக்கு அதிகளவில் வர வேண்டும். ஏழை நெசவாளி என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் தூசியில் தயாரிக்கும் பொருள், ஏ.சிக்கு வந்துவிட்டது. எனக்கு வயது 70. இன்னும் எத்தனை காலம் இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. இன்னும் நிறைய இளைஞர்கள் இந்த நல்ல தொழிலில் பல்வேறு பிரிவுகளில் வந்து தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும்.”

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு