Published:Updated:

ஸ்டாலின் கையில் தமிழக காங்கிரஸ்!

போட்டுத்தாக்கும் ‘கராத்தே’ தியாகராஜன்

பிரீமியம் ஸ்டோரி

‘யாரை யார் தூக்கிச் சுமக்கிறார்கள்’ என்று பட்டிமன்ற ரேஞ்சுக்கு தி.மு.க-வும் காங்கிரஸும் உரசிக்கொண்ட பிரச்னையில், காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவரான ‘கராத்தே’ தியாகராஜன் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ‘என்னதான் நடக்கிறது’ என்று கராத்தே தியாகராஜனிடமே கேட்டோம்.

“கட்சி நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டியதாகக் காவல்துறையில் உங்கள் மீது புகார் அளித்துள்ளார்களே?”

‘‘கட்சியிலிருந்து என்னை இடைநீக்கம் செய்துவிட்டதாக இன்றைய தேதி வரை எனக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. கே.எஸ்.அழகிரியும் இதுகுறித்து உறுதியான பதிலை சொல்லவில்லை. நிர்வாகிகள் கூட்டத்தை நான் கூட்டவில்லை. காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு என்னையும் அழைத்தார்கள். கலந்துகொண்டேன்.’’

‘‘கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால்தான் கட்சித் தலைவர்களை எல்லாம் ஒருமையில் பேசிவருகிறீர்கள் என்கிறார்களே?’’

‘‘என் மனதுக்குச் சரி என்று படுவதைப் பேசுகிறேன். ‘வருகிற உள்ளாட்சித் தேர்தலில், நாம் தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்று கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது? அப்போதுகூட என் பேச்சை ஆமோதித்துப் பாராட்டியவர்தானே கே.எஸ்.அழகிரி. விடுதலைப்புலிகள் ஆதரவாளர் பீட்டர் அல்போன்ஸ், ‘கருணாநிதி தமிழர் இல்லை’ என்று பேசிய குஷ்பூ... இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே?’’

ஸ்டாலின் கையில் தமிழக காங்கிரஸ்!

‘‘எந்த ஆதாரத்தின் அடிப்படையில், ‘தி.மு.க கொடுத்த அழுத்தத்தால்தான் இடைநீக்கம் செய்யப்பட்டேன்’ என்று கூறுகிறீர்கள்?’’

‘‘தி.மு.க-வைச் சேர்ந்த பொன்முடி, டி.வி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘கராத்தே தியாகராஜன், ரஜினி ஆதரவாளர். அப்படித்தான் பேசுவார்’ என்றார். கட்சிக் கூட்டத்தில் நான் பேசிய விஷயம் அறிவாலயத்தின் காதுகளுக்குப் போனது எப்படி? கோபண்ணாவும் பீட்டர் அல்போன்ஸும்தானே காரணம்!

2006-ல் நான் அ.தி.மு.க-விலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தபோதுகூட, அப்போதைய தலைவர் கிருஷ்ணசாமி, என்னை உடனடியாகக் கட்சியில் சேர்க்கவில்லை. மு.க.ஸ்டாலினிடம் அனுமதி வாங்கிய பிறகே கட்சியில் சேர்த்துக்கொண்டார்கள். இப்போதுகூட ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது’ என்று கே.எஸ்.அழகிரி சொல்கிறார். இதுகூட தி.மு.க-வின் குரல்தான். அவராகச் சுயமாகச் சொல்லவில்லை.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘கோபண்ணா, ‘காங்கிரஸில் கலகம் செய்துவிட்டு, ரஜினி கட்சி ஆரம்பித்ததும் அதில் இணைந்துவிடுவதுதான் உங்கள் திட்டம்’ என்கிறாரே?’’

‘‘டெல்லித் தலைமையிடம், ‘மூட்டு வலியால் அவதிப்படும் அழகிரியையெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக்க வேண்டாம்’ என்று போட்டுக்கொடுத்தவர்கள்தான் கோபண்ணாவும் பீட்டர் அல்போன்ஸும். இதை என்னிடமே வருத்தப்பட்டுக் கூறியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. ஆனால், இப்போது இவர்களுடன்தான் நெருக்கமாக இருக்கிறார். விட்டுத்தள்ளுங்கள்... இன்னும் நான்கு அமாவாசைக்குள் கே.எஸ்.அழகிரியே தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டுவிடுவார். அப்புறம் நானேகூட தலைவர் ஆகலாம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு