Published:Updated:

`வாதிடுவதற்குச் சேமித்து வையுங்கள்!'- 12 கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் தலைமை நீதிபதி

ஜெனிஃபர்.ம.ஆ

கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் 12 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகக் குற்றம்சாட்டி, அவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Ranjan Gogoi
Ranjan Gogoi

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை கவிழ்க்க, பி.ஜே.பி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகச் சொல்லப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ-க்கள், ஜூலை 6-ம் தேதி, திடீரென அம்மாநில சட்டமன்றச் செயலரிடம் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

Kumarasamy
Kumarasamy

இதற்கு, ``கர்நாடகாவில் நடைபெறும் கூட்டணி ஆட்சி, மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. எம்.எல்.ஏ-க்களின் செயல்பாட்டிலும் நம்பிக்கையில்லாமல் அரசு எங்களை அதிகளவில் காயப்படுத்திவிட்டது. அதனால்தான், நாங்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளோம்” என்று எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது.

ராஜினாமா கடிதம் குறித்துப் பேசிய சபாநாயகர், தனக்கு வேறு வேலை இருப்பதாகவும், அது தொடர்பாக திங்கள் அல்லது அதற்குமேல் பேசிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இதனிடையே பதவியை ராஜினாமா செய்த அனைத்து எம்.எல்.ஏ-க்களும் மும்பை சென்றுவிட்டனர்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

ராஜினாமா கடிதம் கொடுத்து, ஐந்து நாள்கள் ஆன நிலையில், சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை இன்னமும் ஏற்கவில்லை. பி.ஜே.பி, காங்கிரஸ், ம.ஜ.த என அனைத்துத் தரப்பில் இருந்தும் பதவி விலகல் கடிதம் அளித்துள்ள 12 பேருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி, மும்பை சென்று 12 எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவரைச் சந்திக்க தங்களுக்கு விருப்பமில்லை என்றும், தங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்றும் மும்பை போலீஸாரிடம் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ க்கள் தங்கியிருக்கும் மும்பை ஹோட்டல்!
எம்.எல்.ஏ க்கள் தங்கியிருக்கும் மும்பை ஹோட்டல்!
ANI

மேலும், 12 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகக் குற்றம்சாட்டி, அவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, அதற்கான மனுவைத் தாக்கல் செய்து வாதிட்டார். அவர், ``இந்தப் பிரச்னையின் தீவிரம் கருதி, தாமதம் இல்லாமல் உடனடியாக இந்த மனுவை விசாரிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

அதற்குத் தலைமை நீதிபதி, ``உங்களுக்கு இந்த வழக்கை எப்போது விசாரிக்க வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர், ``இன்று அல்லது நாளை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்" என கேட்டுக்கொண்டார். ரஞ்சன் கோகோய், ``நிச்சயம் இன்று முடியாது, நாளை பார்க்கலாம்" என்றார்.

Supreme Court
Supreme Court

வழக்கறிஞர் தொடர்ந்து பேச முற்பட்டார். ``சில வாதங்களை நாளை வாதிடுவதற்குச் சேமித்து வையுங்கள்" என்றார் தலைமை நீதிபதி. இதனால், இந்த வழக்கு நாளை விசாரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.