10 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலக் கட்சியாகத் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி, இன்று தேசியக் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. தேசியக் கட்சி அந்தஸ்துடன் முதன்முறையாக, வரும் மே 10-ம் தேதி கர்நாடகத்தில் நடக்கவிருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்கிறது.
கர்நாடகத்தில், 2018-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 28 இடங்களில் களம்கண்ட ஆம் ஆத்மி வரும் தேர்தலில், மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இதுவரை, இந்த மாநிலத்தில், பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், ஆம் ஆத்மியும் தேர்தலில் முழுமையாகக் களமிறங்கியிருப்பது அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்திருக்கிறது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி உதயமாகும் முன்பே, அன்னா ஹசாரே, கெஜ்ரிவாலுடன் நெருங்கிய நட்பில் இருந்தவரும், தற்போது, ஆம் ஆத்மி கர்நாடகா மாநில ஒருங்கிணைப்பாளருமான பிரித்வி ரெட்டியைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். தேர்தலுக்கு ஆம் ஆத்மி வகுத்திருக்கும் வியூகம் குறித்து அவர் நமக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.
``கர்நாடகா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகள் என்னென்னெ?"
``0 சதவிகித ஊழல், 100 சதவிகிதம் மக்கள் நலனுக்கான வேலை, இலவச மருத்துவம், சிறப்பான கல்வி, நல்ல கட்டமைப்புகள் மற்றும் மேம்பாட்டுக்கான திட்டங்கள்."
``ஊழலற்ற ஆட்சி எனக் கூறுகிறீர்கள்... ஆனால், ‘ஆம் ஆத்மி பஞ்சாப், டெல்லியில் பல ஊழல்களில் ஈடுபடுகிறது‘ என காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்களே?"
டெல்லியில் இதுவரை, 56 எம்.எல்.ஏ-க்கள்மீது ஊழல் வழக்கு தொடுத்திருக்கும் எதிர்க்கட்சிகள், இதுவரை ஒருவர்மீதுகூட ஊழலை நிரூபிக்க முடியவில்லை. இதில், 38 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் டெல்லி போலீஸாரிடம், ‘இது போன்ற வழக்குகள் தொடுத்து நேரத்தை வீணாக்குவதைவிட, வளர்ச்சிக்காக வேலை செய்யுங்கள்’ எனப் பொய் வழக்கு போடுவோருக்கு குட்டுவைத்திருக்கிறது."
``கர்நாடகாவில், ‘பா.ஜ.க 40 சதவிகிதம் கமிஷன் பெறுகிறது’ என காங்கிரஸ் கட்சியினரும், ‘காங்கிரஸ் ஆட்சியில், 20 சதவிகிதம் ஊழல் நடந்தது’ என பா.ஜ.க–வினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொள்கின்றனரே?
``இந்த இரண்டு கட்சியினரும் மாறி மாறி எவ்வளவு சதவிகிதம் கமிஷன் பெற்றனர் எனக் குற்றம்சாட்டிக்கொள்கிறார்களே தவிர, ஊழல் செய்யவில்லை என இரு தரப்பினருமே ஒப்புக்கொள்ளவில்லையே... அவர்கள் ஊழல் செய்தார்கள் என அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். கர்நாடகாவைப் பொறுத்தவரை காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றுமே ஊழல் கட்சிகள்தான்."

`` `பா.ஜ.க–வின் ‘B Team’ தான் ஆம் ஆத்மி’ என, காங்கிரஸ் உங்கள்மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறதே?"
``நாங்கள் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின், ‘B Team’ அல்ல... நாங்கள் எப்போதும் மக்கள் நலனுக்காகச் செயல்படும் மக்களுக்கான ‘A Team’ தான்."
``இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து குறித்து ஆம் ஆத்மியின் நிலைப்பாடு?"
``கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை, வகுப்பறைகளுக்குக் காவி நிறம், இஸ்லாமிய மக்களுக்கெதிரான பிரச்னைகள், தற்போது, இட ஒதுக்கீடு ரத்து எனச் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரச்னைகள் வாயிலாக, பா.ஜ.க இந்துக்களின் ஓட்டுகளைப் பெற முயல்கிறது.
கர்நாடகாவிலுள்ள, 64 சதவிகிதம் பள்ளிகளில் பயன்படுத்த லாயக்கற்ற கழிப்பிடங்கள்தான் இருக்கின்றன; அனைத்துச் சமூகத்தினரும்தான் இதைப் பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். டெல்லியிலும் பஞ்சாப்பிலும் நாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், இது போன்ற மதப் பிரச்னைகள் எழுவது இல்லையே... நாங்கள் அனைவரும் சமம் என மதச்சார்பற்ற அரசை நிறுவியிருக்கிறோம்."
``மதச்சாற்பற்ற ஆட்சி என்கிறீர்கள்... ‘அரவிந்த் கெஜ்ரிவால் ரூபாய் நோட்டுகளில் இந்துக் கடவுள்களின் படத்தை அச்சிட வேண்டும்’ எனக் கூறியது, இந்துக்களின் ஓட்டுகளைப் பெறுவதற்கான முயற்சியா?"
``டெல்லியில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து மதத்தைச் சேர்ந்த, மூத்த குடிமக்களை அவர்களின் புனிதத்தலங்களுக்கு இலவசமாக அனுப்பிவைக்கிறோம். இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களை நாங்கள் புறக்கணித்துவிட்டு, இந்துக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவதில்லையே... மதச்சார்பற்ற முறையில் செயல்படுகிறோம்."
``சமீபத்தில் நடந்த கர்நாடகா – மகாராஷ்டிரா மாநில எல்லைப் பிரச்னை, தேர்தலுக்கான பா.ஜ.க-வின் ‘ஸ்டன்ட்டா’?"
மாநில எல்லைப் பிரச்னை பல ஆண்டுகளாக இருக்கிறது. தேர்தலின்போது மட்டுமே இதைக் கிளப்பி பா.ஜ.க ஓட்டுகளைக் கவர முயல்கிறது. மக்கள் சிந்தித்தால் நமக்கு எதிராகக் கேள்வி எழுப்புவார்கள் என்ற பயத்தில், ‘கேப்’ விடாமல் ஏதாவதொரு பிரச்னையைக் கிளப்பி, மக்களைச் சிந்திக்கவே விடுவதில்லை. இதைத் தங்களது ‘ஸ்ட்ராட்டஜி’யாக வைத்திருக்கிறது பா.ஜ.க."
``தமிழகத்தில் தி.மு.க ‘திராவிட மாடல்’, கேரளாவில் ‘கம்யூனிசம்’ எனப் பல மாடல்களை தலைவர்கள் முன்னிறுத்துகின்றனர். கர்நாடகாவில் ஆம் ஆத்மியின் மாடல் என்ன?"
``நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை, ஐடியாக்களை டெல்லி, பஞ்சாப்பில் வெற்றிகரமாகச் செயல்படுத்திவிட்டோம். ‘டெல்லி’தான் எங்கள் மாடல். கர்நாடகாவில் இதை அமல்படுத்த முயல்கிறோம்."
``வரும் தேர்தலில் ஆம் ஆத்மியின் பலம், பலவீனம் என்னென்ன?"
``இந்தத் தேர்தலில் எங்கள் பலம் என்பது, 100 சதவிகிதம் மக்களுக்காக வேலை செய்யும் கொள்கை, ஊழலற்ற ஆட்சி; ஒவ்வொரு துறையிலும் ஆளுமைமிக்க ஓர் ஊழல் குற்றச்சாட்டுகூட இல்லாத, மக்கள் நலனுக்காகச் செயல்பட்டுவரும் வேட்பாளர்கள், இவைதான் எங்கள் பலம். இதைவைத்து வரும் தேர்தலில் மாற்றத்தைக் கொண்டுவருவோம்.

நாங்கள் புதிய கட்சி... எங்களிடம் மற்றவர்கள்போலச் செலவு செய்ய பணம் இல்லை. பண பலம், பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற ‘குண்டர்’ பலம் இல்லை. இவையெல்லாம் பலவீனமாக இருந்தாலும், அதிக இடங்களைப் பிடித்து வெற்றிபெறுவோம்."
இவ்வாறு பதில்களைக் கூறி பேட்டியை நிறைவுசெய்தார்.
வியூகம் மாற்றத்தை ஏற்படுத்துமா?
ஆம் ஆத்மி கட்சி, போட்டியிடும் மாநிலங்களிலெல்லாம் பா.ஜ.க., காங்கிரஸ் குறித்தான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ‘நெகடிவ் போலிங்’ ஓட்டுகளைக் கவர்ந்துவருகிறது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியை ‘டார்கெட்’ செய்து அவர்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை முன்வைத்து, பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் வகையில் காய்நகர்த்திவருகிறது. இந்தச் செயல்களால், காங்கிரஸுக்கு நெருக்கடியும், பா.ஜ.க-வுக்கு தலைவலியையும் கொடுத்துவருகிறது ஆம் ஆத்மி. தற்போது, கர்நாடகா முழுவதிலும் அதிதீவிரமாக ஆம் ஆத்மி பிரசாரம் செய்துவருகிறது.
ஆம் ஆத்மியின் ‘டெல்லி மாடல்’, ‘நெகடிவ் போலிங்’ வியூகம், ஊழல் புகாரற்ற பிரபலமான வேட்பாளர்கள் போன்றவை, கர்நாடகத் தேர்தல் களத்தில் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..!