
காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் இதுவரை கட்சியைவிட்டு வெளியேறவில்லை. இது பா.ஜ.க-வுக்குப் பாதகமாகவும், காங்கிரஸுக்குச் சாதகமாகவும் மாறியிருக்கிறது
கர்நாடக அரசியலில், பா.ஜ.க தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியைத் தேடிப் படையெடுத்துவருவது பா.ஜ.க மேலிடத்துக்கு, தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது!
தென்னிந்தியாவில் பா.ஜ.க ஆட்சியிலிருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகா, வருகிற மே 10-ம் தேதி தேர்தலைச் சந்திக்கிறது. தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளும், உளவுத்துறை ரிப்போர்ட்டுகளும், ‘காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றிபெறும்’ என்றே சொல்கின்றன.


இந்த நிலையில், பா.ஜ.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான என்.ஒய்.கோபாலகிருஷ்ணா, கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதேபோல், ஹிரகேரூர் தொகுதியில் இரு முறை எம்.எல்.ஏ–வாக இருந்த யூ.பி.பங்கார், பா.ஜ.க-வை உதறிவிட்டு, காங்கிரஸில் இணைந்துவிட்டார். இவரைப்போலவே, பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ-க்களான வி.எஸ்.பட்டீல், ஜி.என்.நஞ்சுண்டசுவாமி, எம்.எல்.சி-க்களான பாபுராவ், புட்டண்ணா, மோகன் லிம்பிகாய் மற்றும் சில தலைவர்களும் காங்கிரஸில் இணைந்திருக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில், சுமார் 50-க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான லட்சுமண் சவதி பா.ஜ.க-விலிருந்து விலகிவிட்டார். முன்னாள் முதல்வரும், தொடர்ந்து ஆறாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருப்பவருமான ஜெகதீஷ் ஷெட்டரும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இருப்பதால், பா.ஜ.க-வில் உட்கட்சிப்பூசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்துப் பேசுகிற அரசியல் விமர்சகர்கள், ‘‘பா.ஜ.க-விலிருந்து இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வெளியேறியுள்ளனர். அதேபோல், மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து சிட்டிங் எம்.எல்.ஏ சிவலிங்க கவுடா, மூன்று முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் இதுவரை கட்சியைவிட்டு வெளியேறவில்லை. இது பா.ஜ.க-வுக்குப் பாதகமாகவும், காங்கிரஸுக்குச் சாதகமாகவும் மாறியிருக்கிறது’’ என்கின்றனர்.


கர்நாடக தேர்தல்இந்த நிலையில், கர்நாடகா மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கணேஷ் கார்னிக்கிடம் ‘பா.ஜ.க பலத்தை இழந்துவருகிறதா?’ என்ற கேள்வியைக் கேட்டபோது, ‘‘பா.ஜ.க-வில் இத்தனை ஆண்டுகளாக எம்.எல்.ஏ-க்களாகவும், எம்.எல்.சி-க்களாகவும் இருந்தவர்கள், வரும் தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் கட்சியைவிட்டு வெளியேறியிருக்கின்றனர். ‘தேர்தலில் சீட் கிடைக்கவில்லை’ என்ற ஒற்றைக் காரணத்துக்காக சிலர் வெளியேறியதால், பா.ஜ.க வலுவிழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. நாங்கள் கடந்த தேர்தலைவிட இப்போது வலுவாகவே இருக்கிறோம்’’ என்றார் சமாளிப்பாக.
கர்நாடக அரசியலில் அரங்கேறிவரும் இந்த ‘உள்ளே வெளியே’ ஆட்டங்களையெல்லாம் பார்த்தபடியே, ஒரு கணக்கோடு தேர்தலுக்குக் காத்திருக்கிறார்கள் மக்கள்!