Published:Updated:

நான்காவது முறையும் நிறைவேறாத கனவு!

எடியூரப்பா
பிரீமியம் ஸ்டோரி
எடியூரப்பா

எடியூரப்பா ஒன்றும் லேசுப்பட்டவரல்ல. தலைமையின் அழுத்தம் இல்லாமல் அவர் பதவி விலக வாய்ப்பே இல்லை.

நான்காவது முறையும் நிறைவேறாத கனவு!

எடியூரப்பா ஒன்றும் லேசுப்பட்டவரல்ல. தலைமையின் அழுத்தம் இல்லாமல் அவர் பதவி விலக வாய்ப்பே இல்லை.

Published:Updated:
எடியூரப்பா
பிரீமியம் ஸ்டோரி
எடியூரப்பா

முதன்முறை கர்நாடகாவின் முதல்வராகப் பதவியேற்றபோது எட்டு நாள்கள்... அடுத்த முறை மூன்று ஆண்டுகள், இரண்டு மாதங்கள்... மூன்றாம் முறை வெறும் மூன்றே நாள்கள். இப்படி முதல்வராக மூன்று முறையும் தன் பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யாத எடியூரப்பா, நான்காம் முறையும் பதவிக்காலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்திருக்கிறார். 2019-ம் ஆண்டு ஜூலை 26-ல் முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பா, மிகச்சரியாக இரண்டாண்டுகள் கழித்து ஜூலை 26 அன்று ராஜினாமா செய்திருக்கிறார்.

எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஜூலை 26-ம் தேதி பெங்களூரில் கர்நாடக அரசு சார்பில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பேசிய அவர், ‘‘முதல்வர் பதவியிலிருந்து விலக முடிவுசெய்திருக்கிறேன். இன்று பிற்பகல் ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கவிருக்கிறேன்’’ என்று உடைந்த குரலில், கண்ணீருடன் தெரிவித்து சில மாதங்களாகவே கர்நாடகாவில் களைகட்டிய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து, ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் கொடுத்தார். ஆளுநர் தவார் சந்த் கெலாட்டும் அதை ஏற்று, அமைச்சரவையைக் கலைக்க உத்தரவிட்டார். புதிய முதல்வர் பொறுப்பேற்கும்வரை காபந்து முதல்வராக எடியூரப்பா நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

‘‘78 வயதாகிவிட்டது, நிர்வாகம் சரியில்லை, ஆட்சியில் குடும்ப ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. அதனால், முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா விலக வேண்டும்’’ என தன் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களாலேயே கடுமையான நெருக்கடிக்கு ஆளான எடியூரப்பா, கடந்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்துவிட்டு வந்தார். அப்போதே, டெல்லி மேலிடம் அவரைப் பதவி விலகச் சொல்லிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, கர்நாடகா அரசியலில் செல்வாக்கு செலுத்தும் லிங்காயத்து மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகள் எடியூரப்பாவைச் சந்தித்து, தங்கள் ஆதரவைத் தெரிவித்துவந்தனர். லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த மதச் சார்பற்ற ஜனதாதள நிர்வாகிகளும், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும்கூட, ‘‘லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த எடியூரப்பாவை கண்ணியமாக நடத்த வேண்டும்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்கள். சுப்பிரமணியன் சுவாமியின் ஆதரவும் எடியூரப்பாவுக்கு இருந்தது.

நான்காவது முறையும் நிறைவேறாத கனவு!

தொடர்ந்து, எடியூரப்பாவின் ஆதரவாளர்களும் போராட்டங்களில் இறங்கினர். ‘‘கட்சிக்கு அவமரியாதை மற்றும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது’’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், திரைமறைவில் தலைமைக்கு அழுத்தம் தரும் வேலையில் அவர் தொடர்ந்து ஈடுபட்டார் என்று ஒரு பேச்சு உலவியது.

‘‘எடியூரப்பா ஒன்றும் லேசுப்பட்டவரல்ல. தலைமையின் அழுத்தம் இல்லாமல் அவர் பதவி விலக வாய்ப்பே இல்லை. அவரின் மகன் விஜயேந்திராவை துணை முதல்வராக்கும் திட்டமும் அவரிடம் இருக்கிறது. அந்த உடன்பாட்டுடன்தான் அவர் ராஜினாமா செய்திருப்பார்’’ என்கிறார்கள் கர்நாடகா அரசியல் வட்டாரத்தில்.

எடியூரப்பாவின் எக்ஸிட்டுக்குப் பிறகு, அடுத்த முதல்வருக்கான ரேஸ் சூடுபிடித்துள்ளது. புதிய முதல்வருக்கான ரேஸில் தேசிய பொதுச்செயலாளர்கள் பி.எல்.சந்தோஷ், சி.டி.ரவி, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, கர்நாடக அமைச்சர் முருகேஷ் நிரானி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

பா.ஜ.க-வின் முதல்வர் மியூசிக்கல் சேர் விளையாட்டு, கர்நாடகாவையும் விட்டுவைக்கவில்லை!