Published:Updated:

`எனக்குப் பதவி வேண்டாம்; ஆனால், பா.ஜ.க-வின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்!' - குமாரசாமி உருக்கமான கடிதம்

சத்யா கோபாலன்

கர்நாடகாவில் நடக்கும் அரசியல் பரபரப்புகளுக்கு இடையே அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் குமாரசாமி.

குமாரசாமி
குமாரசாமி

கர்நாடகாவில் காங்கிரஸ், ம.ஜ.த ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ-க்கள் சமீபத்தில் ராஜினாமா செய்ததால் அந்த மாநிலத்தில் பெரும் அரசியல் சர்ச்சை நடைபெற்று வருகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியே தீரவேண்டும் என்ற முனைப்பில் உள்ளது பா.ஜ.க. ஆனால், ஆளும் கூட்டணிக்குத் தேவையான ஆதரவு இல்லாததால் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார்கள்.

கர்நாடக சட்டமன்றம்
கர்நாடக சட்டமன்றம்
Twitter/@INCKarnataka

இந்த நிலையில், இன்று முதல்வர் குமாரசாமி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, ஆளும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-க்களும் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என முதல்வர் குமாரசாமி அழைப்புவிடுத்து உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``கர்நாடக அரசியல் சூழ்நிலையை பா.ஜ.க மிகவும் தாழ்வான நிலைக்குக் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், நாட்டில் ஒழுக்கக் கேடான அரசியலுக்கு ஒரு அளவுகோலையும் அமைத்துள்ளது மிகுந்த வேதனையாக உள்ளது. இது வெறுப்பையும் தருகிறது. ஆளும் கூட்டணியில் உள்ள பல எம்.எல்.ஏ-க்களை பலவந்தமாக தாங்கள் இழுப்பதன் மூலம் பா.ஜ.க ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது. பா.ஜ.க தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுடன் கர்நாடக ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் சிறப்பு விமானத்தில் மும்பைக்குப் பயணித்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள்
கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள்
Twitter/@INCKarnataka

ஒழுக்கக்கேடான மற்றும் சட்டவிரோத வழிகள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை லட்சியமாகக் கொண்டுள்ள பா.ஜ.க, என்னை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறது. மேலும், நம்பிக்கைத் தீர்மானத்தை உடனடியாக நடத்தியே தீரவேண்டும் என ராஜ்பவன் மூலம் அழுத்தம் தருகிறது. நான் அதிகார பதவியில் ஒட்டியிருக்க முயலவில்லை என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அறநெறிகளைப் பற்றிப் பேசும் பா.ஜ.க, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் கொள்கைகளை எவ்வாறு தகர்த்தெறிய முயல்கிறது என்பதை, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்துவதே எனது ஒரே நோக்கம்.

கவிழுமா குமாரசாமி ஆட்சி?...பி.ஜே.பி - யின் 'Operation Lotus'!

எனவே, எங்கள் கூட்டணியிலிருந்து விலகிச் சென்ற எம்.எல்.ஏ-க்கள் தயவுசெய்து சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன். எங்கள் எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க பலவந்தமாக எப்படி இழுத்துச் சென்றது, அது ஜனநாயக மாளிகையை நாசப்படுத்தி அதன் புனிதத்தை எவ்வாறு சிதைத்தது போன்ற அனைத்தையும் எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
Twitter/@INCKarnataka

கர்நாடக ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என இரண்டு முறை கெடு அளித்தும் அம்மாநில சபாநாயகரும், முதல்வரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவில்லை. எனவே, இன்று ஆளுநர் என்ன முடிவெடுப்பார், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் மொத்த கர்நாடகாவும் அரசியல் தலைவர்களும் காத்திருக்கின்றனர்.