Published:Updated:

`ஆட்சி செய்யத் தெரியாதவர்களின் பேச்சு அது!' - குமாரசாமி மீது பாயும் சித்தராமையா

கலிலுல்லா.ச

`குமாரசாமி என்னை எதிரியாகத்தான் பார்த்தார். ஆட்சிக் கவிழ அதுதான் காரணம்’ என்று சித்தராமையா கூறியுள்ளார்.

Siddaramaiah
Siddaramaiah

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியில் முதல்வராக இருந்தவர் குமாரசாமி. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ-க்கள் திடீரென ராஜினாமா செய்ததால் ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ.க-வின் எடியூரப்பா மீண்டும் முதல்வரானார். இதையடுத்து காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே வார்த்தைப்போர் நீடித்து வருகிறது.

Kumaraswamy
Kumaraswamy

இதுதொடர்பாகப் பேட்டியளித்த தேவகவுடா, ``கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்ததற்கு முக்கிய காரணம் சித்தராமையாதான். எடியூரப்பாவை முதல்வராக்கி, தான் எதிர்க்கட்சித்தலைவராக அமர வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம்” என்று குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி, ``நான் ஆட்சியிலிருந்த 14 மாதங்களும் காங்கிரஸ் என்ன ஒரு`கிளார்க்’ போலத்தான் நடத்தியது. காங்கிரஸ் என்னை எப்படி நடத்தியது என்று எனக்குத்தான் தெரியும். எத்தனை நாள்கள் அடிமையாக இருப்பது?’ என்று கொதித்திருந்தார்.

இந்த வார்த்தைப் போர்கள், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகப் பேட்டியளித்திருக்கிறார் சித்தராமையா. மைசூரில் ஊடகங்களிடம் பேசியவர், ``குமாரசாமி என்னை எதிரிபோலத்தான் பார்த்தார். இதுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். நான் எப்படி அவர்களுக்கு எதிரியாக இருப்பேன். ஆட்சி செய்யத் தெரியாதவர்கள் இதுபோலப் பேசுகின்றனர்.

Kumaraswamy
Kumaraswamy

மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து குமாரசாமியை முதல்வராக்கியது நாங்கள்தான். பா.ஜ.க-வின் பக்கம் ஆட்சி செல்லக் கூடாது என்பதற்காக ராகுல்காந்தியுடன் பேசியே, இத்தகைய முடிவை எடுத்தோம். அப்படிப்பட்ட நிலையில், குமராசாமி என்னைத் தலைவராக, ஏன் நண்பராகக்கூட பார்க்கவில்லை. காங்கிரஸாரின் குறைகள், கோரிக்கைகளை அவர் கேட்கவில்லை. கூட்டணி ஆட்சி கவிழ நாங்கள் காரணம் அல்ல” என்று பதிலளித்துள்ளார்.