Published:Updated:

` என்னை துன்புறுத்துவதுதான் அவர்கள் ஆசை!' - சிதம்பரத்தைத் தொடர்ந்து கைதாகும் டி.கே.சிவக்குமார்?

எம்.வடிவேல்

தமிகழத்தில் சிதம்பரத்தைத் தொடர்ந்து, கர்நாடகாவில் டி.கே.சிவக்குமாரை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

D.k.Sivakumar
D.k.Sivakumar

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தமிழகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான சிதம்பரத்தைக் கைது செய்துள்ள சிபிஐ, அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. கர்நாடகாவில் பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் முக்கிய தலைவரான டி.கே.சிவக்குமாரைக் குறிவைத்து அமலாக்கத்துறை காய்களை நகர்த்தி வருவதால், காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sivakumar
sivakumar

2017-ல், டிகே.சிவக்குமார் மற்றும் அவரின் உறவினர்கள், நண்பர்கள் வீடு, நிறுவனங்கள் என 84 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது சிவக்குமாருக்குச் சொந்தமான வீட்டில் இருந்து ரூ.8.59 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியது. அப்போது டி.கே.சிவக்குமாரின் உதவியாளர்கள், `இது காங்கிரஸ் மேலிடத்துக்குக் கொடுப்பதற்காக சிவக்குமார் அனுப்பிய ஹவாலா பணம்' என்று கூறியதாகத் தகவல் வெளியானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த பிப்ரவரியில் சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைக் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால், இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

`காஃபி டே பங்குகளை மடைமாற்ற முயற்சி!' - சித்தார்த்தா மரண சர்ச்சையில் டி.கே.சிவக்குமார்

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டி.கே.சிவக்குமார் அளித்துள்ள பேட்டியில், `` இது ஒரு சாதாரண பிரச்னை. இதில் ஏற்கெனவே வருமான வரியைத் தாக்கல் செய்துவிட்டேன். இதில் பண மோசடி தடுப்பு சட்டத்துக்கு இடமில்லை. இன்று பகல் 1 மணிக்கு டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுத்துள்ளனர். நான் சட்டத்தை மதித்து ஆஜராக இருக்கிறேன்" என்றவர்,

`` கடந்த இரண்டு வருடங்களாக, எனது 83 வயது தாயாரின் சொத்துகள் வரை விசாரணைக்கு உட்படுத்திவிட்டனர். எங்களின் பூர்வீக சொத்துகளைக்கூட பினாமி சொத்துகளாக்கி, என்னையும் பினாமி ஆக்கிவிட்டனர். நான் சட்டவிரோதமான எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. ஆனால், ஆதாரங்கள் உள்ளதாக பா.ஜ.க தலைவர்கள் கூறி வருகிறார்கள். என்னைத் துன்புறுத்திப் பார்க்க வேண்டும் என்பது அவர்கள் ஆசை, அதுதான் அவர்களுக்குச் சந்தோஷம் என்றால் அனுபவித்துவிட்டுப் போகட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சிதம்பரத்தை சி.பி.ஐ எப்படிக் கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்ததோ, அதே பாணியில் டி.கே.சிவக்குமாரைக் கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரம் காட்டிவருகிறது.