Published:Updated:

தீர்ப்புக்குப் பின் சந்திப்பு; தயக்கம் காட்டிய தலைமை!- பா.ஜ.க-வில் கர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்கள்

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் பலரும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் இன்று பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர்.

தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்கள்
தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்கள்

கர்நாடகாவில் நடைபெற்று வந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சி 10 மாதங்களில் கவிழ்க்கப்பட்டது. இந்த இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் அம்மாநிலம் பல்வேறு அரசியல் பிரச்னைகளை சந்தித்தது.

காங்கிரஸ் - ஜே.டி.எஸ்
காங்கிரஸ் - ஜே.டி.எஸ்

இறுதியில் கர்நாடகாவில் முதல்வராகச் செயல்பட்டு வந்த ஜே.டி.எஸ்-ஸின் குமாரசாமி சட்டமன்றத்தில் தன் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் காங்கிரஸ் - ஜே.டி.எஸ் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அதிக பெரும்பான்மை கொண்ட பா.ஜ.க-வின் எடியூரப்பா கர்நாடகாவின் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.

இதற்கிடையில், எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்பது, கட்சி தாவலுக்குச் சமம் என்றும் அவர்கள் கொறடாவின் உத்தரவை மீறிவிட்டார்கள் எனத் தெரிவித்தும், 17 எம்.எல்.ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் கர்நாடகாவின் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார். மேலும், அவர்கள் அனைவரும் வரும் 2023-ம் ஆண்டுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என அறிவித்தார்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பின்னர் தங்களின் தகுதி நீக்கம் செல்லாது என அறிவிக்குமாறு அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து, கர்நாடகாவில் உள்ள 17 தொகுதிகளும் காலியாக உள்ளதாக கூறி, அங்கு வரும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

`தகுதிநீக்கம் செல்லும்; ஆனால், போட்டியிடலாம்!'- கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணையில் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், `17 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும். ஆனால், அவர்கள் வரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம்’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்கள்
தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்கள்

இந்தத் தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் டெல்லியில் பா.ஜ.க-வின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். கர்நாடகாவின் துணை முதல்வர் அஷ்வந்த் நாராயணன்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அனைவரையும் டெல்லி அழைத்துச் சென்றுள்ளார்.

சந்திப்பு முடிந்த பிறகு 17 பேரும் பா.ஜ.க-வில் இணையவுள்ளதாக அஷ்வந்த் அறிவித்தார். இவர்களின் சந்திப்பு மற்றும் இணைப்பு பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் மேற்பார்வையில் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் ரோஷன் பெய்க்கை தவிர மற்ற அனைவரும், கர்நாடக முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர்.

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள்
தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள்

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏவான ரோஷன் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவரை கட்சியில் இணைக்க பா.ஜ.க தலைமை தயக்கம் காட்டியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பா.ஜ.க-வில் இணைந்துள்ள அனைவருக்கும் வரும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.