கர்நாடகாவில் வரும், 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டுமென, கங்கணம் கட்டிக்கொண்டு பிரசாரம் செய்துவருகின்றனர்.
கடந்த, 3.5 ஆண்டுகளாக தேர்தல் தொடர்பான கூட்டங்கள், பிரசாரங்களுக்கு வராமலிருந்த சோனியா காந்தி, கர்நாடகா தேர்தலுக்கான களத்தில் இறங்கி வாக்குச் சேகரித்துவருகிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கர்நாடகா முழுவதிலும் அனைத்து மண்டலங்களிலும் தேர்தல் பிரசாரம் செய்துவருகின்றனர்.

‘ஜோடா‘ யாத்திரைக்குப் பிறகு, தேர்தலுக்காக கர்நாடகத்தில் முகாமிட்டிருக்கும் ராகுல் காந்தி, பல வகைகளில் மக்களிடம் வாக்குச் சேகரித்து வருகிறார். பிரசாரம் செய்யும் இடங்களில் மக்களைச் சந்திப்பது, அவர்களின் வீடுகளுக்குச் செல்வது, ரோட்டோர டீக்கடைகளில் டீ குடிப்பதென பலவற்றைச் செய்துவருகிறார்.

இப்படியான நிலையில், பெங்களூரில் வாக்குச் சேகரித்த ராகுல் காந்தி, நகரின் மையப்பகுதியிலுள்ள ஐகோனிக் ஏர்லைன் ஹோட்டலில், ‘ஸ்விக்கி, ஸோமேட்டோ, பிலிங்கிட், டன்ஸோ’ உட்பட பல புட் டெலிவரி நிறுவனங்களின் புட் டெலிவரி ஊழியர்களைச் சந்தித்து, அவர்களுடன் ‘பிரேக்ஃபாஸ்ட்’ சாப்பிட்டிருக்கிறார். மேலும், ‘பிலிங்கிட்’ டெலிவரி நபரின் ஸ்கூட்டியில் பயணித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்திருக்கிறார். இன்று, பெங்களூரு நகரின் அரசு பஸ்சில் பயணித்து, பெண்களைச் சந்தித்து, ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டம் அமல்படுத்தப்படும்’ எனக் கூறி, வாக்குச் சேகரித்திருக்கிறார்.
ராகுலின் பெங்களூரு பயணங்கள் குறித்து, காங்கிரஸ் தனது ட்விட்டரில், ‘‘பெங்களூரு நகரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உணவு, மருந்து எனப் பலவகைப் பொருள்களை டெலிவரி செய்யும் பணி செய்துவருகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், டெலிவரி செய்யும் நபர்களின் நலனுக்காக தனியாக, ‘டெலிவரி பணியாளர்கள் நலவாரியம்‘ அமைக்கப்படும்’’ என அறிவித்திருக்கிறது.

இதேபோல், மங்களூரு பகுதியில் வாக்குச் சேகரித்த பிரியங்கா காந்தி, அங்குள்ள பழைமையான மைலாரி ஹோட்டலில், தோசை சுட்டிருக்கிறார்.
மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி, வாக்குச் சேகரிப்பின்போது, பழங்குடியின மக்களின் இசைக்கருவிகளை இசைப்பது, கன்னடத்தில் வாழ்த்து சொல்வது, அந்தப் பகுதி முதியவர்கள், பழங்குடியினரிடம் ஆசி பெறுவதென பலவற்றைச் செய்திருக்கிறார்.