Published:Updated:

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றியும் பிரசாந்த் கிஷோர் அறிக்கையும்... ஓர் அலசல்!

பிரசாந்த் கிஷோர் - ராகுல் காந்தி

``சட்டமன்றத் தேர்தல் முடிவைத் தவறாகப் புரிந்துகொள்ளாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தொண்டர்களை எச்சரிக்க விரும்புகிறேன்” - பிரசாத் கிஷோர்

Published:Updated:

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றியும் பிரசாந்த் கிஷோர் அறிக்கையும்... ஓர் அலசல்!

``சட்டமன்றத் தேர்தல் முடிவைத் தவறாகப் புரிந்துகொள்ளாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தொண்டர்களை எச்சரிக்க விரும்புகிறேன்” - பிரசாத் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் - ராகுல் காந்தி

பிரபல தேர்தல் யுக்தி வகுப்பாளரான பிரசாத் கிஷோர் கர்நாடகத் தேர்தல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், மக்களவைத் தேர்தலில் என்ன காத்திருக்கிறது... சட்டமன்ற தேர்தல் முடிவைத் தவறாகப் புரிந்துகொள்ளாமல் இருக்க, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தொண்டர்களை எச்சரிக்க விரும்புகிறேன். 2013-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. 2012-ல் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது நினைவிருக்கலாம்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமிருக்கும் 80 இடங்களில் 73 இடங்களைக் கைப்பற்றியது. 2018 சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. இந்த மாநிலங்களில் சில மாதங்களுக்குப் பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

குஜராத் மாநிலத் தேர்தலில் நரேந்திர மோடியின் வெற்றிகரமான பிரசாரத்துக்கு வியூக நிபுணராகப் பணியாற்றியபோது பிரசாத் கிஷோர் முக்கியத்துவம் பெற்றார். பின்னர் 2014 தேசிய தேர்தலில் மோடியின் வெற்றிக்கு அவர் முக்கியப் பங்குவகித்தார். அதன் பின்னர் நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், ஸ்டாலின், ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி எனப் பலதரப்பட்ட தலைவர்களின் தேர்தல் பிரசாரங்களை பிரசாந்த் கிஷோர் கையாண்டிருக்கிறார். 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் பணியாற்றப்போவதில்லை என்று கூறிய பிரசாந்த் கிஷோர் 'ஜன் சுராஜ்' என்கிற பெயரில் பீகாரில் பாதையாத்திரை மேற்கொண்டுவருகிறார்.

ப்ரியன்
ப்ரியன்

பிரஷாந்த் கிஷோர் கருத்து தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “2019-ல் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. இந்த முறை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கொஞ்சம் சீரியஸாக ஒர்க்கவுட் ஆகும்போல் தெரிகிறது. மம்தா, அகிலேஷ் போன்றோர் ஓரளவுக்கு காங்கிரஸுடன் ஒரு புரிதல் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. கடுமையான எதிர்ப்பில் இருந்த கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ் போன்றோர் அதானி பிரச்னைக்குப் பிறகு ஒன்றாகச் சேர்ந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் வென்ற பிறகு மற்ற எதிர்க்கட்சிகள் ஓர் இணக்கமான சூழலுக்கு வந்திருப்பதுபோல் தெரிகிறது.

2018-ல் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தாலும்கூட நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றார்கள் என்பது உண்மைதான். என்னதான் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, விலைவாசி உயர்வு என்று அரசுக்கு எதிரான மக்களின் மனநிலை இருந்தாலும், மோடியின் இமேஜ், இந்துத்துவா பிரசாரம், கம்யூனல் டிவைட் போன்ற விஷயங்கள் மூலம் அந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தியது பா.ஜ.க. அதோடு, 2019 பிப்ரவரியில் புல்வாமா தாக்குதல் குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியதை இங்கு நினைவுகூர்கிறேன். அதன் பிறகு தேச ஒற்றுமை, தேசப் பாதுகாப்பு, மோடியால்தான் நாட்டை பாதுகாக்க முடியும் எனப் பிரசாரம் மாறியது.

மோடி - ராகுல் காந்தி
மோடி - ராகுல் காந்தி

ஆனால், 2019 தேர்தலிலேயே எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஏனென்றால் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 284 தொகுதிகள் வென்ற பா.ஜ.க அதன் பிறகு நடந்த 12 இடைத்தேர்தல்களில் தோல்வியைத் தழுவியது. இதை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தவில்லை. இன்றைய சூழலில் நாடு முழுவதும் மோடிக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பது உண்மைதான். அதே நேரத்தில் அந்தச் செல்வாக்கு கர்நாடக தேர்தலில் அடிபட்டுப்போனது என்பதையும் மறுக்க முடியாது.

மோடிக்கான செல்வாக்கு இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் அவரையும் வெல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் பா.ஜ.க-வின் பலம் எலெக்‌ஷன் மிஷினரி. அதோடு அதிகார பலம். அதை வைத்து பா.ஜ.க எப்படி ஸ்டேட்டர்ஜிக்கலாகக் கொண்டுபோவார்கள் என்பதும் தெரியாது. எனவே, வரப்போகும் 2024 தேர்தல் என்பது எது போன்று சூழ்நிலை நிலவும் என்று சொல்லிவிட முடியாது. எது எப்படி இருந்தாலும், பி.கே சொல்வதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் செயல்பட வேண்டும்” என்றார்.