கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல், வரும் மே 10–ம் தேதி நடக்கவிருக்கிறது. கடந்த, 13-ம் தேதி வேட்பாளர்கள் மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், நாளையுடன் மனுத்தாக்கல் நிறைவடையவிருக்கிறது. பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர், மனுத்தாக்கல் செய்து தீவிர பிரசாரம் செய்துவருகின்றனர்.
கடந்த காலங்களில் நடந்த சில தேர்தல்களில், கே.ஜி.எஃப், காந்தி நகர் உள்ளிட்ட சில தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இப்படியான நிலையில், வரும் தேர்தலிலும் அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில், அ.தி.மு.க ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தி கடந்த, 7-ம் தேதி எடியூரப்பாவைச் சந்தித்து, ‘அ.தி.மு.க சார்பில் போட்டியிடத் தொகுதிகள் ஒதுக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இதேபோல், கர்நாடகத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்தி, எடப்பாடி பழனிசாமி தரப்பும் பா.ஜ.க-விடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க., ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் என, இரு அணியினரின் கோரிக்கைகளை ஏற்காமல் தொகுதிகள் ஒதுக்காமல், இரு அணியையும் புறக்கணித்திருக்கிறது.
இ.பி.எஸ் அணி வேட்பாளர்...
இதனால், இ.பி.எஸ் தரப்பு பா.ஜ.க-மீது கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், இன்று காலை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘கர்நாடகா தேர்தலில், புலிகேசி நகர் தொகுதியில், கர்நாடகா மாநில அ.தி.மு.க அவைத்தலைவர் டி.அன்பரசன் போட்டியிடுவார்’’ என அறிவித்திருக்கிறார்.
பெங்களூரு நகரின் ஒரு பகுதியான புலிகேசி நகர் தொகுதியில், அதிக அளவில் தமிழர்களும், இஸ்லாமிய மக்களும் இருக்கின்றனர். தமிழர்களுக்காக, இரண்டுக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன. தமிழர்கள் அதிகமிருக்கும் காரணத்தால்தான், இ.பி.எஸ் தரப்பு இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்தத் தொகுதி முன்பு ஜனதா தளத்தின் வசமிருந்தது. தற்போது, காங்கிரஸ் கோட்டையாக மாறியிருக்கிறது.

‘தேசியக் கட்சிகள் ஏமாற்றுகின்றன’!
இந்த நிலையில், ஓ.பி.எஸ் தரப்பும் வேட்பாளர்களைக் களமிறக்குமா... என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது குறித்து நாம், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான, பெங்களூரு புகழேந்தியிடம் போனில் தொடர்புகொண்டு பேசினோம்.
அவர் நம்மிடம், ‘‘தமிழகத்தைப் பொறுத்தவரையில், பா.ஜ.க 20 தொகுதிகள் கேட்டபோது அதை அ.தி.மு.க ஒதுக்கியது. ஆனால், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பா.ஜ.க-வினர், அ.தி.மு.க-வுக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்காமல் புறக்கணித்தது, அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழர்கள் வாழும் பகுதியில், திராவிடக் கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல், தேசியக் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஏமாற்றுகிறது. அண்ணன் பன்னீர்செல்வத்திடம் ஆலோசித்து, இன்று அல்லது நாளைக்குள், எங்கள் அணியின் வேட்பாளரை அறிவிப்போம்’’ என்றார்.
இரு அணிகளும் களமிறங்கினால், `அ.தி.மு.க தேர்தல் சின்னம் யாருக்கு கிடைக்கும்?’ என்ற கேள்வியை நாம் முன்வைத்தபோது, புகழேந்தி நம்மிடம், ‘‘அண்ணன் ஓ.பன்னீர்செல்வம்தான், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். கர்நாடகா தேர்தலில் சட்டப்படி எங்கள் வேட்பாளருக்குத்தான் அ.தி.மு.க சின்னம் கிடைக்கும். அல்லது, இரு அணிக்கும் சின்னம் கிடைக்காது’’ என்றார்.
பா.ஜ.க-வை உதறிவிட்டு, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் அணியினர், கர்நாடகத்தில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டிருப்பதால், கர்நாடகத்தில் பா.ஜ.க-மீது இருக்கும் அ.தி.மு.க-வின் அதிருப்தி தமிழகத்திலும் தொடருமா... தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உடையுமா... எனப் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.