Published:Updated:

ஒத்திவைக்கப்பட்ட சட்டமன்றம்; உள்ளேயே தூங்கிய பா.ஜ.க-வினர்! - குமாரசாமிக்குக் கெடு விதித்த ஆளுநர்

சத்யா கோபாலன்

பல நாள்களாகத் தொடர்ந்து வரும் கர்நாடகா அரசியல் குழப்பத்துக்கு இன்று விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா
கர்நாடகா ( ANI )

கர்நாடகாவில் நடந்துவரும் ம.ஜ.த- காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ-க்கள் சமீபத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. எம்.எல்.ஏ-க்கள், ராஜினாமா செய்து ஒரு வாரம் ஆன நிலையிலும் சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாததால் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

கர்நாடக சட்டசபை
கர்நாடக சட்டசபை
ANI

இந்த வழக்கில், ‘ சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது, அதேபோல் அந்த மாநிலத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ-க்களை கலந்துக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து நேற்று கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடத்தப்பட்டது. இதில் பேசிய முதல்வர் குமாரசாமி, `இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என அழுத்தம் அளிக்கக் கூடாது’ எனப் பேசினார்.

தொடர்ந்து முன்னாள் முதல்வர் சித்தராமையா, `ராஜினாமா செய்திருந்தாலும் அவர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள்தாம். விப் உத்தரவு பிறபித்தும் சில எம்.எல்.ஏ-க்கள் இன்று சட்டசபைக்கு வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது. இதற்கு பா.ஜ.க-தான் முழு காரணம் எனக் குற்றம்சாட்டினார். இதற்கிடையில், மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் விஜுபதி வாலா, நேற்று சபாநாயகர் ரமேஷ் குமாருக்குக் கடிதம் அனுப்பினார்.

டி.கே சிவகுமார்
டி.கே சிவகுமார்
ANI

ஆனாலும், கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நீண்டுகொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் சபைக்கு வராத காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலரும் கூச்சல் செய்தனர். அந்த எம்.எல்.ஏ-வை பா.ஜ.க-தான் கடத்தி வைத்துள்ளதாகக் கூறினர். இதற்கு பா.ஜ.க-வினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டசபையில் பரபரப்பு நிலவியது.

`எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யுங்கள்!'- அ.தி.மு.க பாணியில் கர்நாடகா காங்கிரஸ்

இந்தநிலையில், குழப்பம் அதிகமானதையடுத்து இன்று காலை 11 மணி வரை சட்டமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் சபாநாயகர். ஆனால், அங்கிருந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இன்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கூறி போராட்டம் நடத்தினர். அதைக் கண்டுகொள்ளாத காங்கிரஸ், ம.ஜ.த எம்.எல்.ஏ-க்கள் அவையைவிட்டு வெளியே சென்றனர்.

சட்டமன்றத்தில் தங்கிய எடியூரப்பா
சட்டமன்றத்தில் தங்கிய எடியூரப்பா
ANI

அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை சட்டமன்றத்தைவிட்டு வெளியேறப்போவதில்லை என்று முடிவெடுத்து நேற்று மாலை முதல் அங்கேயே தங்கியுள்ளனர் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள். சட்டமன்றத்துக்குள்ளேயே உணவு உண்டு, அங்கேயே தரையில் படுத்துத் தூங்கியுள்ளனர். கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பா.ஜ.க-வின் தலைவருமான எடியூரப்பாவும் சட்டமன்றத்திலேயே தங்கியுள்ளார்.

இதற்கிடையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் எனக் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, முதல்வர் குமாரசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், `ஆளும் கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ-க்கள் என்னை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினர். அவர்களில் இருவர் மட்டும் தங்களின் ராஜினாமாவைத் திரும்ப பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்களைக் கொண்டு பார்த்தால் நீங்கள் சட்டசபையில் பெரும்பான்மையை இழந்துவிட்டீர்கள். எனவே, இன்றைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.