கர்நாடகத்தில் அந்த மாநில அரசு ஹிஜாபுக்கு தடைவிதித்ததை எதிர்த்து, கல்லூரி மாணவிகள் 6 பேர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், ``மாநில அரசின் ஹிஜாப் தடைக்கு எதிரான வாதத்தில், சரியான முகாந்திரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதும் அல்ல" எனக் கூறி ஹிஜாப் தடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் தீர்ப்பை எதிர்த்து, 6 மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த மாணவிகள், ``எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்குச் செல்ல மாட்டோம்" என்றதாகக் கூறப்படுகிறது.