கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் நெருங்குவதால், ‘ஊழல்’ என்ற வார்த்தையை யார் பயன்படுத்தினாலும், பரபரப்புக்கு பஞ்சமில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படியான சூழலில், அந்த மாநிலத்தின் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருக்கும் IAS ரோகிணி சிந்தூரிக்கும், கைவினைப்பொருள்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ரூபாவுக்கும் இடையே, சமூக வலைதளத்தில் ஏற்பட்டிருக்கும் ஊழல் புகார்ச் சண்டை பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
முதற்கட்டமாக ரூபா, ரோகிணி சிந்தூரியின் சில படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, ‘‘மைசூர் கிருஷ்ணராஜ நகரைச் சேர்ந்த ஜனதாதள எம்.எல்.ஏ சாரா மகேஷும் ரோகிணி சிந்தூரியும் ஒன்றாக உணவகத்தில் இருக்கின்றனர். ஓர் அதிகாரி, அரசியல்வாதியை ஏன் சந்திக்கிறார்?,’’ எனக் கேள்வி எழுப்பியதுடன், ``ரோகிணி சிந்தூரி தினமும் தனிப்பட்ட தனது புகைப்படங்களை, மூன்று ஆண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குப் பகிர்ந்திருக்கிறார். பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டிருக்கிறார்’’ என ரோகிணி சிந்தூரி மீது, 20 குற்றச்சாட்டுகளைக்கொண்ட, ஒரு விரிவான ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டார். மேலும், ‘‘ஊழல் குறித்த பேச்சுகள் இருந்தபோதும், ரோகிணி சிந்தூரி மீது ஏன் விசாரணை நடத்தவில்லை?’’ என கர்நாடகா மாநில அரசையே விமர்சிக்கும் வகையில் கேள்வி எழுப்பினார்.
மனநோய் என்பது...
இதற்கு பதிலளிக்கும்விதமாகப் பிப்ரவரி19 அன்று ரோகிணி சிந்தூரி ஊடக அறிக்கையை வெளியிட்டு, அதில், ``மனநோய் என்பது சிகிச்சை தேவைப்படும் ஒரு தீவிரமான பிரச்னை. பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்படும்போது, அது மிகவும் ஆபத்தானதாகிறது. எனக்கு எதிராக ஒரு தவறான, தனிப்பட்ட அவதூறு பிரசாரத்தை நடத்துகிறார் ரூபா. அது அவரின் நிலையான செயல்பாடாகவே இருக்கிறது. அவர் பணியாற்றிய ஒவ்வோர் இடத்திலும் அதைச் செய்திருக்கிறார். ரூபா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன்’’ என பதிலடி கொடுத்திருந்தார்.

‘வெட்கக்கேடானது..!’
இந்தப் பிரச்னை கர்நாடகாவில் பூதாகரமாகியிருக்கும் நிலையில், நேற்று கர்நாடகா உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரன் நிருபர்களிடம், ‘‘அரசின் உயர்மட்ட பெண் அதிகாரிகள் இருவரும், சாதாரண மக்களைப்போல சமூக வலைதளத்தில் சண்டையிடுவது உண்மையில் வெட்கக்கேடானது. இது போன்ற செயல்களைக் கண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்; இருவர்மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவர்கள் இருவரும் மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்; தெருக்களில் மக்கள்கூட இது போன்று பேசிக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் என்ன பிரச்னை வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், ஊடகத்தின் முன்பு இருவரும் இப்படி நடந்துகொண்டது சரியல்ல. இது அரசின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப தலைமைச் செயலாளருக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டிருக்கிறார்’’ எனக் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
அரசு இருக்கிறதா... இல்லையா?
இந்த விவகாரம் தொடர்பாக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று மாலை நிருபர்களிடம், ``தலைமைச் செயலர் உடனடியாக இரண்டு பெண் அதிகாரிகளையும் அழைத்து எச்சரிக்க வேண்டும். கர்நாடகாவில் அரசு அதிகாரிகள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம்தான் உதராணம். இங்கு அரசு இருக்கிறதா... இல்லையா? என்பதே சந்தேகமாக இருக்கிறது’’ எனக் கடுமையாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மூன்று பக்கங்கள்... 7 புகார்கள்!
இப்படியான சூழலில் நேற்று இரவு (20–ம் தேதி), 9:00 மணிக்கு மேல் ரூபா தனது ட்விட்டரில், ‘ரோகிணியின் ஊழல் குறித்த எனது புகார்கள் ஏற்கெனவே பொதுத்தளத்தில் இருக்கின்றன. ஆனால், தயவுசெய்து தவறானவற்றைப் பரப்பாதீர்கள். அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறேன்’’ எனப் பதிவிட்டு, தலைமைச் செயலருக்கு அவர் அனுப்பியதாக, மூன்று பக்கங்கள்கொண்ட அறிக்கையையும் பதிவிட்டிருக்கிறார்.

அதில், ‘``IAS ரோகிணி சிந்தூரி மீது ஏற்கெனவே இருக்கும் ஊழல் புகார்கள் குறித்தான விசாரணையை விரைவுபடுத்துவதுடன், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ரோகிணி சிந்தூரி குறித்தான புதிய ஊழல்களின் தகவல்கள் குறித்து விசாரிக்க வேண்டும்.
நூற்றுக்கணக்கானோர் கொரோனாவில் இறந்தபோது, ரோகிணி சிந்தூரி கமிஷனர் அலுவலகத்தில், Swimming Pool கட்டியதற்காக அவர்மீது விசாரணை நடத்தக் கோரி, ஏற்கெனவே, IAS ரவிசங்கர் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், அடுத்தகட்ட விசாரணை இன்னும் நடக்கவில்லை. இந்த விசாரணையை விரைவில் நடத்துவதுடன், விசாரணை தாமதிக்கக் காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனவரி 2023-க்கான சொத்து விவரத்தில், அசையாச் சொத்துகளாக, ஜலஹள்ளியில் அவர் கட்டிவரும் அவரது பிரமாண்ட வீடு குறித்து, ரோகிணி சிந்தூரி குறிப்பிடவில்லை. அந்த வீட்டுக்கு இத்தாலியிலிருந்து, ரூ. 1 – 2 கோடி ரூபாய்க்கு Furniture வாங்கியதாகவும், 26 லட்சத்துக்கு Appliances வாங்கியதாகவும், அவரின் Chat conversationsல் கூறியிருக்கிறார். இது குறித்து விசாரிக்க வேண்டும்’’ என்பவை உள்ளிட்ட ஏழு ஊழல் புகார்களை முன்வைத்திருக்கிறார்.
நடத்தை விதிகளுக்கு எதிரானது!
மேலும், நிருபர்களுக்குப் பேட்டியளித்த ரூபா, ’’இந்தப் படங்கள் தற்போதுதான் எனக்குக் கிடைத்தன. இந்தப் படங்கள் முன்பே கிடைத்திருந்தால், அப்போதே வெளியிட்டிருப்பேன்; கடந்த ஒரு மாதமாகத்தான் இந்தப் படங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. இதை தற்போது அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறேன். நடவடிக்கை என்னவாக இருக்கும் என நான் பொறுத்திருந்து பார்ப்பேன். இந்தப் படங்கள் மூலமாக இது தனிப்பட்ட விவகாரம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. அரசுப் பணியாளர்களின் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரான செயல் இது’’ எனப் பேட்டியளித்திருக்கிறார்.
ஏற்கெனவே, ‘கர்நாடகாவில் பா.ஜ.க 40 சதவிகிதம் ஊழல் செய்கிறது’ என்ற வார்த்தைகளை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் தேர்தலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்திவருகின்றனர். இப்படியான நிலையில், IAS அதிகாரி மீது IPS அதிகாரி அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், ஊழல்மீது உரிய விசாரணை நடத்தவில்லை என அரசையே விமர்சித்திருப்பதும் அரசியல் களத்தில் மட்டுமன்றி, தேசிய அளவில் IAS, IPS அதிகாரிகளிடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
இரண்டு பெண் அதிகாரிகளின் ‘ஊழல் புகார் வார்’, டிரான்ஸ்ஃபரில் முடியும் எனப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.