Published:Updated:

`ஆபரேஷன் கமலா 2.0’ - மும்பையில் முகாமிட்டுள்ள `அதிருப்தி’ எம்.எல்.ஏ-க்களால் அதிரும் கர்நாடகா

சத்யா கோபாலன்

`கர்நாடக அரசு எங்களைக் காயப்படுத்தியதால் அரசுக்கு எதிராக நாங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளோம் என’ ம.ஜ.த தலைவர் விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

குமாரசாமி
குமாரசாமி

கர்நாடகாவில் ம.ஜ.த மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலான ஆட்சியைக் கவிழ்க அம்மாநில பா.ஜ.க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக `ஆபரேஷன் கமலா’ என்பதன் மூலம் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை தங்கள் வசம் இழுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி
காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி

மக்களவைத் தேர்தலால் கர்நாடக ஆட்சி சற்று அமைதியாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் பரபரப்பாகியுள்ளது. காங்கிரஸ் மற்றும் ம.ஜ.தவைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ-க்கள் நேற்று அம்மாநில சட்டமன்றச் செயலரைச் சந்தித்து தங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். சபாநாயகருக்கு வெளியில் செல்லும் பணி இருந்ததால் இது தொடர்பாகத் திங்கள் அல்லது அதற்கு மேல் பேசிக்கொள்ளலாம் எனத் தெரிவித்துவிட்டார்.

தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு 78 சட்டமன்ற உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 37 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களின் ஆதரவினால் குமாரசாமி முதல்வராகப் பதவி வகுத்து வருகிறார். அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் அரசுக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 105 ஆக குறையும். எனவே, ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 107- ஆக இருக்கும்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

ராஜினாமா கடிதம் அளித்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் சிலர் முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தியில் உள்ளதாகவும், மீண்டும் சித்தராமையா முதல்வராக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ம.ஜ.த-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் குமாரசாமியைத் தவிர்த்து வேறு யார் வேண்டுமானாலும் முதல்வராக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகிற 12-ம் தேதியன்று கூடும் கர்நாடக சட்டமன்றத்தில் முதல்வர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என பா.ஜ.க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ம.ஜ.த  விஸ்வநாதன்
ம.ஜ.த விஸ்வநாதன்

காங்கிரஸின் ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ-க்களிடமும் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்கள் எந்த நேரமும் கட்சித் தாவலாம் எனவும் ஒரு காங்கிரஸ் தலைவர் பேசியுள்ளார். மேலும், முதல்வர் மீது அதிருப்தி என கூறுவது கூட்டணியில் உள்ள பிளவுகளை ஆழப்படுத்துவதற்கான தந்திரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்த கையோடு அனைத்து எம்.எல்.ஏ-க்களும் விமானம் மூலம் நேற்று இரவு 8:30 மணியளவில் மும்பைக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள சோஃபிடெல் ஹோட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் முகாமிட்டுள்ளனர். அவர்கள் பா.ஜ.க எம்.பி-க்களின் உதவியால் தனி விமானத்தில் மும்பை பறந்ததாகக் கூறப்படுகிறது.

நாங்கள் ஆபரேஷன் கமலாவால் ஈர்க்கப்படவில்லை. ராஜினாமா என்பது எங்களது சுய முடிவு
விஸ்வநாத்

இது பற்றிப் பேசியுள்ள ம.ஜ.த மூத்த தலைவர் விஸ்வநாத், `` கர்நாடகாவில் நடக்கும் கூட்டணி ஆட்சி மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. எம்.எல்.ஏ-க்களின் செயல்பாட்டிலும் நம்பிக்கையில்லாமல் அரசு எங்களை அதிகமாக காயப்படுத்திவிட்டது. அதனால்தான் நாங்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.