Election bannerElection banner
Published:Updated:

ஒரே நாளில் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவை! - என்ன நடக்கிறது கர்நாடகாவில்?

கர்நாடகா சட்டமன்றம்
கர்நாடகா சட்டமன்றம்

கர்நாடக அமைச்சரவையில் கடந்த 21-ம் தேதி புதிதாக ஏழு அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் மீண்டும் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. என்ன நடக்கிறது அங்கு?

கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராகக் காரணமாக இருந்த, பதவி விலகிய எம்.எல்.ஏ-க்களான உமேஷ் கத்தி, எஸ்.அங்காரா, முருகேஷ் நிரானி, அர்விந்த் லிம்பாவள்ளி, ஆா்.ஷங்கர், எம்.டி.பி.நாகராஜு, சி.பி.யோகீஷ்வா் ஏழு பேர் கடந்த ஜனவரி 13-ம் தேதி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். அமைச்சரவை விரிவாக்கப்பட்டிருந்தபோதிலும் அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தனர்.

எடியூரப்பா
எடியூரப்பா

இந்தநிலையில், புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்குக் கடந்த 21-ம் தேதி துறைகள் ஒதுக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், முன்பிருந்த சில அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டன. இதனால், அமைச்சர்கள் சிலர் கடும் அதிருப்தியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கே.சுதாகா், கே.கோபாலையா, கே.சி.நாராயண கௌடா, ஜே.சி.மாதுசாமி, எம்.டி.பி.நாகராஜு போன்ற அதிருப்தி அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.

இது குறித்துப் பேசிய எடியூரப்பா, ``அமைச்சரவை மாற்றத்தின்போது இது போன்ற அதிருப்தி ஏற்படுவது வழக்கம்தான். துறைகள் மாற்றி அமைப்பது குறித்துப் பரிசீலனை செய்யப்படும். அமைச்சர்கள் கூட்டத்துக்கு வராத காரணத்தை முன்கூட்டியே என்னிடம் கூறி அவர்கள் அனுமதி பெற்றிருந்தனர். அடுத்த கூட்டங்களில் அவர்கள் பங்கேற்பார்கள். தற்போதைய நிலையில் ஒதுக்கப்பட்ட துறைகளை மாற்ற இயலாது" என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், அமைச்சரவைப் பொறுப்புகள் ஒதுக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் மீண்டும் அமைச்சரவை மாற்றியமைத்திருப்பது கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருப்தி அமைச்சர்களைச் சாந்தப்படுத்த மீண்டும் அமைச்சரவை மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தங்களுக்கு வழங்கப்பட இலாகாக்களை மாற்றித் தருமாறு முதல்வரிடம் புதிய அமைச்சர்கள் கோரிக்கைவைத்திருந்தனர்.

`எடியூரப்பா நீண்டநாள் முதல்வராக இருக்க மாட்டார்!’- உட்கட்சிப் பூசலால் தள்ளாடும் கர்நாடக பா.ஜ.க

தனக்குக் கலால் துறை வழங்கப்ட்டதில் அதிருப்தியிலிருந்த எம்.டி.பி.நாகராஜுக்கு தற்போது நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் கரும்பு மேம்பாடு, சர்க்கரை இயக்குநரகம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஜே.சி.மதுசாமிக்கு வழங்கப்பட்டிருந்த கன்னடம் மற்றும் கலாசாரத்துறைக்குப் பதிலாக ஹஜ் மற்றும் வக்ஃபு துறை வழங்கப்பட்டுள்ளது. அர்விந்த் லிம்பாவள்ளிக்கு கொடுக்கப்பட்ட வனத்துறையுடன், கன்னடம் மற்றும் கலாசாரத்துறையும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

எடியூரப்பா
எடியூரப்பா
Twitter

முன்பு தோட்டக்கலைத்துறை ஒதுக்கப்பட்டிருந்த கே.கோபாலையாவுக்கு இப்போது கலால்துறை வழங்கப்பட்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த ஆர்ஷங்கருக்குத் தற்போது தோட்டக்கலைத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஹஜ் மற்றும் வக்ஃபு துறை வழங்கப்பட்டிருந்த கே.சி.நாராயண கௌடாவிடம் திட்டமிடல், திட்டக் கண்காணிப்பு மற்றும் புள்ளிவிவரத்துறையின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கே.சி.நாராயண கௌடா இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார்.

எடியூரப்பாவின் அந்தரங்க சி.டி?

எடியூரப்பாவின் அந்தரங்க சி.டி ஒன்று பா.ஜ.க மூத்த அமைச்சர்கள் கையில் இருப்பதாகவும், அதைவைத்து மிரட்டி தங்களுக்கான துறைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதாகவும் கர்நாடகாவில் சர்ச்சை எழுந்தது. எடியூரப்பாவின் சி.டி குறித்த இது போன்ற ஒரு சர்ச்சை மூன்று ஆண்டுகளுக்கு முன்னரும் எழுந்தது. சொந்தக் கட்சிக்காரர்கள் மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலரும் இந்த சி.டி-யைவைத்து மிரட்டி காரியம் சாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

எடியூரப்பா
எடியூரப்பா
ANI

இந்தக் குற்றச்சாட்டு குறித்து இதுவரை வாய் திறக்காத எடியூரப்பா, ``அப்படி ஒரு சி.டி-யே இல்லை. பா.ஜ.க-வில் 120 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்குத்தான் அமைச்சரவையில் பதவி வழங்க முடியும். என்மீது குற்றச்சாட்டு இருந்தால், பா.ஜ.க தலைமையிடம் புகார் அளிக்கட்டும். இப்படிப் பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பது சரியல்ல" என்று கூறியிருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு