Published:Updated:

இம்முறையாவது ஐந்தாண்டுகளை நிறைவுசெய்வாரா எடியூரப்பா?

எடியூரப்பா
பிரீமியம் ஸ்டோரி
எடியூரப்பா

தகிக்கும் கர்நாடகா... கொதிக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்...

இம்முறையாவது ஐந்தாண்டுகளை நிறைவுசெய்வாரா எடியூரப்பா?

தகிக்கும் கர்நாடகா... கொதிக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்...

Published:Updated:
எடியூரப்பா
பிரீமியம் ஸ்டோரி
எடியூரப்பா

‘முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்’ என்று தன் கட்சி சகாக்களாலேயே நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா, டெல்லி மேலிடத்தின் கரிசனத்தால் தற்காலிகமாக அதிலிருந்து தப்பியிருக்கிறார். ஆனால், ‘அவரால் பதவியைத் தக்கவைக்க இயலுமா... நான்காவது முறையாக கர்நாடக முதல்வர் பதவி வகிக்கும் அவர், இம்முறையாவது ஐந்து ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்வாரா?’ என்பதே கர்நாடக அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக்.

கடந்த 2019, ஜூலை 26-ம் தேதி, நான்காவது முறையாக கர்நாடகாவின் முதல்வராகப் பொறுப்பேற்றார் பா.ஜ.க மூத்த தலைவர் எடியூரப்பா. அதற்கு முன்பாக அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற மூன்று முறையும் ஐந்தாண்டுகளை முழுமையாக அவர் நிறைவுசெய்தது இல்லை. 2007-ல் மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி தயவில் ஆட்சிக்கு வந்த எடியூரப்பாவால், வெறும் எட்டு நாள்கள் மட்டுமே முதல்வர் பதவியில் நீடிக்க முடிந்தது. கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியைக் கவிழ்க்க, பதவியை இழந்தார் எடியூரப்பா. அதற்கடுத்து, 2008-ல் நடந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. இரண்டாவது முறையாக முதல்வரான எடியூரப்பாவுக்கு மூன்று ஆண்டுகள் சுமுகமாகவே சென்றன. நான்காவது ஆண்டின் தொடக்கத்திலேயே, ஊழல் புகார்கள் விஸ்வரூபமெடுக்க, 2011, ஜூலை 31-ம் தேதி மீண்டும் முதல்வர் பதவியை இழந்தார் எடியூரப்பா.

2012-ல் ‘கர்நாடக ஜனதா பக்‌ஷா’ என்ற பெயரில் தனிக்கட்சி கண்டு, இரண்டே ஆண்டுகளில் கட்சியோடு மீண்டும் பா.ஜ.க-வில் போய் இணைந்தார் எடியூரப்பா. அதன் பின்னர், 2018-ல் நடந்த பொதுத்தேர்தலில் பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளரானார் எடியூரப்பா. அந்தத் தேர்தலில் 104 இடங்களை பா.ஜ.க கைப்பற்றியநிலையில், முதல்வராகப் பொறுப்பேற்ற எடியூரப்பாவால் வெறும் மூன்று நாள்கள் மட்டுமே பதவியில் நீடிக்க முடிந்தது. பெரும்பான்மை இல்லாத காரணத்தால், கண்ணீர்மல்க, தன் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. அடுத்து காங்கிரஸ் தயவுடன் குமாரசாமி முதல்வரான நிலையில், ‘ஆபரேஷன் கமலா’ என்ற பெயரில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்யவைத்தும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியும் 2019, ஜூலையில் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா. இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக அவர் கடந்திருந்த நிலையில், தற்போது தன் கட்சி எம்.எல்.ஏ-க்களாலேயே நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்.

‘‘முதல்வர் எடியூரப்பாவுக்கு 78 வயதாகிவிட்டதால், அவரால் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியவில்லை. காது கேட்கவில்லை; பார்வை சரியில்லை’’ என்பதில் தொடங்கி, ‘‘கோவிட் பிரச்னையை முதல்வர் எடியூரப்பா சரியாகக் கையாளாததன் விளைவே, கர்நாடக மக்கள் இவ்வளவு நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்’’ என்பதுவரை அவருடைய நிர்வாகத்திறன் மீது அடுக்கடுக்கான கேள்விகள், புகார்களை முன்வைத்துள்ளனர் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்.

அதிலும் உட்சபட்சமாக, பா.ஜ.க மேலவை உறுப்பினர் விஸ்வநாத், ‘ரூ.21,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும் பத்ரா மேலணைத் திட்டத்தில், முதல்வர் எடியூரப்பாவின் குடும்பம் ஊழல் செய்துள்ளதாக’ பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். ‘அந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் பத்து சதவிகிதம் எடியூரப்பாவின் குடும்பத்துக்கு கமிஷனாகச் சென்றுள்ளது’ என்றும் அதிரடி கிளப்பினார். ‘ஆட்சியில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும்’ விமர்சனங்களை முன்வைத்தார்.

இம்முறையாவது ஐந்தாண்டுகளை நிறைவுசெய்வாரா எடியூரப்பா?

முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை நீக்க வேண்டும் என எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் எத்னால், எம்.எல்.சி விஸ்வநாத் ஆகியோர் வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்துவருகிறார்கள். அமைச்சர் யோகேஸ்வர், எம்.எல்.ஏ அரவிந்த் பெல்லாட் உள்ளிட்ட சிலர் அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார்கள். தன்னுடைய தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுவதாக, பா.ஜ.க எம்.எல்.ஏ அரவிந்த் பெல்லாட், அரசுமீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தொடர்ந்து, முதல்வர் பதவியை எடியூரப்பாவிடமிருந்து டெல்லி பா.ஜ.க மேலிடம் பறிக்கப்போவதாகக் கடந்த சில வாரங்களாகப் பேச்சுகள் அடிப்பட்டன. அவருக்கு பதிலாக, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை முதல்வராக நியமிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில், கர்நாடக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங், ஜூன் 16 முதல் 18 வரை பா.ஜ.க அமைச்சர்கள் மற்றும் 50 எம்.எல்.ஏ-க்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். அவர்களிடம், இந்த அரசின் மீதான குறைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ‘‘கர்நாடகாவில் ஆட்சித் தலைமையில் எந்த மாற்றமும் இல்லை. கட்சி விவகாரங்களை வெளியில் பேசி, கட்சிக்கு யாரும் பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு கட்சியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பிரச்னைக்குரிய ஒன்றிரண்டு நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். தொடர்ந்து, பொதுவெளியில் எடியூரப்பா மீது ஊழல் புகாரை முன்வைத்துள்ள விஸ்வநாத் மீது நடவடிக்கை எடுக்க, கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் நலின் குமார் கட்டீலுக்கு அருண் சிங் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனாலும், ‘‘பல்வேறு புகார்கள் இருந்தும் எடியூரப்பாவை ஏன் பா.ஜ.க தலைமை நீக்கவில்லை. அவர்களும் எடியூரப்பாவிடமிருந்து பணம் வாங்கிக்கொள்கிறார்களா?’’ என்ற கேள்வியை மேலவை உறுப்பினர் விஸ்வநாத் முன்வைத்துள்ளார். இந்த விஸ்வநாத் ‘ஆபரேஷன் கமலா’ திட்டத்தின் மூலம், மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து பா.ஜ.க-வுக்குக் கொண்டுவரப்பட்ட 17 தலைவர்களுள் ஒருவர். எந்த ஆயுதத்தை எடுத்து, எதிர்க்கட்சிகளிடமிருந்து ஆட்சியைத் தனதாக்கிக்கொண்டாரோ, அதே ஆயுதம்தான் இன்று எடியூரப்பாவின் நெஞ்சுக்கு முன் கூர்மையாக நிற்கிறது.

கூட்டணியால் ஒரு முறையும், குடும்பத்தால் ஒரு முறையும், தன் அவசரத்தால் ஒரு முறையும் என மூன்று முறை ஆட்சியை இழந்த எடியூரப்பா, இம்முறையாவது ஐந்தாண்டுகளுக்குத் தாக்குப்பிடிப்பாரா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism