Published:Updated:

`இந்த முறையைக் கடைப்பிடித்தால் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பே இருக்காது!'- 2 நாடுகளை சுட்டிக்காட்டும் ராமதாஸ்

சகாயராஜ் மு

``கட்சித் தாவல் தடை சட்டத்தால் பயன் இல்லை என்பது தெளிவாகிவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட தீர்வு என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

தேர்தல்
தேர்தல்

``கர்நாடகத்தில் நடைபெற்றுவரும் அரசியல் சித்து விளையாட்டுகள் தலைசுற்ற வைக்கின்றன. ஆளும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணியைச் சேர்ந்த 13 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி இன்னும் தீரவில்லை. இதன் பின்னணி என்ன என்பதும், நோக்கம் என்ன என்பதும் ஒருபுறம் இருக்க, இத்தகைய அரசியல் விளையாட்டுகள் ஜனநாயகத்துக்கு எந்த வகையிலும் வலிமை சேர்க்காது என்பதே உண்மை" என்று தெரிவித்துள்ள ராமதாஸ், ``ஒரு நாட்டின் ஜனநாயகம் எந்த வகையிலும் வளைக்க முடியாமலும், சிதைக்க முடியாமலும் இருந்தால் மட்டும்தான் அங்கு ஆரோக்கியமான அரசியல் நிலவுவதை உறுதி செய்ய முடியும். கர்நாடகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது, அங்கு ஆரோக்கியமான அரசியல் நிலவவில்லை என்பதை உறுதி செய்ய முடியும்" என்று கூறியுள்ளார்.

கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப்போலத்தான், நாமும் இந்தச் சிக்கலுக்கு அற்புதமான தீர்வு இருக்கும்போது, அதைப் பயன்படுத்தாமல், பயனில்லாத தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
ராமதாஸ்

``சட்டப்பேரவைத் தேர்தலில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து சட்டப் பேரவை உறுப்பினரான எவர் ஒருவரும், அந்த பதவியிலிருந்து விலகத் துணிய மாட்டார்கள்" என்று கூறியுள்ள ராமதாஸ், ஆனால், சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு மட்டுமே ஆகும் நிலையில், 13 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுகிறார்கள் என்றால், அதன் பின்னணியில் அவர்களுக்கு எதோ பெரிய லாபம் இருப்பதாகத்தான் பொருளாகும். அந்த லாபம் எது என்பது கர்நாடக அரசியலை கூர்ந்து கவனிக்கும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அந்த சர்ச்சைகளுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. அதற்கு அவசியமுமில்லை" என தெரிவித்துள்ளார்.

``எனது கவலை எல்லாம் ஆரோக்கியமான அரசியலை உறுதி செய்யும் வகையில் இத்தகைய தாவல்களைத் தடுக்க முடியாதா என்பதுதான்" என்று வேதனை தெரிவித்துள்ள ராமதாஸ், ``கட்சித் தாவலை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தச் சட்டம் இப்போது கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது. அச்சட்டத்தின்படி மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அணி மாறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதைப் பயன்படுத்திதான் கோவாவில் 10 காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு அணி மாறினார்கள். கர்நாடகத்தில் அணி மாறும் உறுப்பினர்களுக்கு அந்த அளவுக்கு வலிமை இல்லாததால்தான், அவர்கள் பதவி விலகி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயனடையப் போவது யார் என்பது அனைவரும் அறிந்ததே" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ்

மேலும் அவர், ``கட்சித் தாவல் தடைச் சட்டத்தால் பயன் இல்லை என்பது தெளிவாகிவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட தீர்வு என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப்போலத்தான், நாமும் இந்தச் சிக்கலுக்கு அற்புதமான தீர்வு இருக்கும்போது, அதைப் பயன்படுத்தாமல், பயனில்லாத தீர்வுகளை தேடிக்கொண்டிருக்கிறோம். கட்சித் தாவல்கள், வாக்களித்த மக்களுக்கு பிரதிநிதிகள் கிடைக்காதது உள்ளிட்ட அனைத்துத் தீர்வுகளுக்கு ஒரே தீர்வு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்வது மட்டும்தான். அது ஒரு அரசியல் அருமருந்து" என்று தெரிவித்துள்ளார்.

``விகிதாசார பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்படும்போது, கட்சிதான் முன்னிறுத்தப்படுமே தவிர தனிநபர்கள் முன்னிறுத்தப்பட மாட்டார்கள். தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிக்கும் உறுப்பினர் எண்ணிக்கை ஒதுக்கப்படும். அதற்கேற்ற வகையில், ஒவ்வொரு கட்சி சார்பிலும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த முறையில் ஒருவர் கட்சித் தாவினாலோ அல்லது உயிரிழந்துவிட்டாலோ, அவருக்குப் பதிலாக பட்டியலில் அடுத்த வரிசையில் உள்ளவர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்பதால் கட்சித் தாவலுக்கோ, இடைத்தேர்தலுக்கோ வாய்ப்பு இருக்காது. அதுமட்டுமின்றி, இந்த முறையில் வாக்களிக்கும் அனைத்து மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவமும் கிடைக்கும் என்பதால் இதுதான் இந்தியாவுக்கு உண்மையான ஜனநாயகமாக இருக்கும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அச்சட்டத்தின்படி மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அணி மாறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதைப் பயன்படுத்திதான் கோவாவில் 10 காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு அணி மாறினார்கள்.
ராமதாஸ்

மேலும், ``இந்தியாவைச் சுற்றியுள்ள இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 87 நாடுகளில் இம்முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியா போன்ற பலகட்சி அரசியல் முறை உள்ள நாடுகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவம்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். இதன் மூலம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். எனவே, இந்தியாவிலும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவது குறித்த விவாதத்தை தொடங்க மத்திய அரசு முன்வர வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.