Published:Updated:

தேசத்துரோக வழக்கு... குழந்தைகளிடம் விசாரணை..! சி.ஏ.ஏ நாடகம் உருவாக்கிய சர்ச்சைகள்

காவல்துறை விசாரணை
காவல்துறை விசாரணை

கர்நாடக மாநிலம் பிதாரில் உள்ள ஷாகின் பள்ளியில் சி.ஏ.ஏ பற்றி நடத்தப்பட்ட நாடகம் ஒன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) எதிரான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜாமியா தொடங்கி ஜே.என்.யூ வரை பல்கலைக்கழக வளாகங்கள் அனைத்தும் போராட்டக் களங்களாக மாறிவருகின்றன. சி.ஏ.ஏ சட்டத்தைப் போலவே அதற்கு எதிரான போராட்டங்களை அரசும் காவல்துறையும் கையாண்ட விதமும் சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மும்பை, சென்னை போன்ற நாட்டின் பிற பகுதிகளில் அமைதியாகப் போராட்டங்கள் நடக்கையில் பி.ஜே.பி ஆளுகிற மாநிலங்களில் மட்டுமே காவல்துறை இவ்வாறு கடுமையாக நடந்துகொள்கிறது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ

இந்த நிலையில் மற்ற தளங்களிலும் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கும் கடும் நெருக்கடி உருவாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவில் சி.ஏ.ஏ பற்றி பள்ளி மாணவர்கள் நடத்திய நாடகம் ஒன்று புதிய சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

கடந்த ஜனவரி 21-ம் தேதி கர்நாடகா மாநிலம் பிதாரில் உள்ள ஷாகின் பள்ளி மாணவர்கள் சி.ஏ.ஏ பற்றி நாடகம் ஒன்றை நடத்தியிருந்தனர். இந்த நாடகத்தின் வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. இதைக் கண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யைச் சேர்ந்த ரக்‌ஷயால் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ``இந்த நாடகம் இரண்டு சமூகங்களுக்கிடையே பகையைத் தூண்டும் விதத்தில் இருக்கிறது. இதன்மூலம் ஷாகின் பள்ளி இயக்குநரும் நிர்வாகமும் மாணவர்களைப் பயன்படுத்தி தேச விரோதச் செயலில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் பள்ளி நிர்வாகத்தின் மீதும் ஆசிரியர்களின் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஜனவரி 30-ம் தேதி நஸ்புனிஸா என்கிற மாணவியின் பெற்றோர் மற்றும் பள்ளியின் ஆசிரியர் ஃபரிதா பேகமை காவல்துறை கைது செய்து சிறை வைத்துள்ளது. பள்ளியின் ஆண்டு விழாவுக்காக மாணவர்கள் சி.ஏ.ஏ தொடர்பாக நாடகம் ஒன்றைத் தயார் செய்து அரங்கேற்றியிருந்தனர். அதில் பிரதமர் தொடர்பாக சர்ச்சையான கருத்து இடம்பெற்றதாக மாணவர்களிடம் விசாரிக்கப்பட்டது. நாடகத்தில் மாணவி ஆயிஷா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) பேசிய வசனம் ஒன்றுதான் தற்போதைய சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

பிதார் பள்ளி
பிதார் பள்ளி

நாடகத்தின் ஒரு பகுதியில் இடம்பெற்ற, ``யாராவது ஆவணங்கள் கேட்டு வந்தால் அவர்களைச் செருப்பைக் கொண்டு அடியுங்கள்” என்கிற வசனம் பிரதமர் மோடியைக் குறிவைத்துப் பேசியதாக சர்ச்சை எழுப்பப்பட்டது. காவல்துறையினர் பள்ளியில் மாணவர்களை விசாரணை செய்யும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாக அதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதற்குப் பிறகு காவலர் உடை தவிர்த்து சாதாரண உடையில் வருகை தந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 3-ம் தேதி நான்காவது முறையாக காவல்துறையினர் மாணவர்களிடம் விசாரணை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக பள்ளியிலே காவல்துறையினர் தற்காலிகமாக முகாமும் அமைத்துள்ளனர். இதனால் பள்ளி வகுப்புகளும் பாதிக்கப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குள்ளான வசனத்தைப் பேசிய ஆயிஷாவின் தாய் சிறையில் உள்ள நிலையில் காவல்துறை அவரிடமும் விசாரணை நடத்தியுள்ளது. ``உங்களுக்கு அந்த வசனத்தை யார் எழுதிக் கொடுத்தார்கள். எவ்வளவு நாள்கள் பயிற்சி எடுத்தீர்கள். பிரதமரைச் செருப்பால் அடிப்பது தவறில்லையா?” என்பது போன்ற கேள்விகளை அவரிடம் கேட்டுள்ளது. பிரதமரைக் குறிப்பிடவேயில்லை என்கிற நிலையில் அந்த வசனம் பிரதமரை குறிவைத்துச் சொல்லப்பட்டதாகவே புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணை
காவல்துறை விசாரணை

``காவல்துறை 9 -12 வயதுக்குள்ளான குழந்தைகளை விசாரணை என்ற பெயரில் மனச் சித்ரவதை செய்து வருகிறார்கள். இது அவர்களைக் கடுமையாகப் பாதிக்கும். காவல்துறையினர் விசாரணை என்கிற பெயரில் ஒரே கேள்விகளை மாணவர்களிடம் திரும்பத் திரும்ப கேட்டு வருகிறார்கள். எங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை சட்டபூர்வமாக எதிர்கொள்வொம்" என பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி தௌசிப் மடிக்கேரி தெரிவித்துள்ளார்.

‘‘அ.தி.மு.க தலைவர்களில் இன்னும் சிலர் பா.ஜ.க-வில்?!"
- சசிகலா புஷ்பா சஸ்பென்ஸ்!

கைம்பெண் தாயான நஸ்புனிஸா சிறையில் இருப்பதால் அவருடைய மகள் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். இதுபற்றி அவருடைய மகள் கண்ணீர் மல்கப் பேசுகையில், ``இந்த நாடகத்தை சி.ஏ.ஏ பற்றிய சந்தேகங்களைக் களைவதற்காக மட்டுமே செய்தோம். இதை வெறும் நாடகமாக மட்டுமே பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அந்தப் பள்ளி மாணவரின் பெற்றோர் ஒருவர் பேசுகையில், ``ஜாமியா, அலிகரில் குற்றவாளிகள் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். மங்களூருவில் ஒரு பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நிகழ்த்திக் காட்டப்பட்டது. இங்கெல்லாம் எந்த வழக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், ஷாகின் போன்ற சிறுபான்மை நிறுவனங்களை மட்டுமே அரசு குறிவைக்கிறது” என்றார்

நாடகத்தில் மாணவி ஆயிஷா பயன்படுத்திய செருப்பை நஸ்புனிஸா வழங்கியுள்ளார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. ``தற்போது சாட்சியங்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் குழந்தைகள் விசாரிக்கப்படுகிறார்கள். விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது” எனக் காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் பற்றி காங்கிரஸ் எம்.பி அபிஷேக் சிங்வி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ``தாய் திரும்பி வர வேண்டும் என 9 வயது குழந்தை தவிக்கிறது. காவல்துறை காலணிகளைப் பறிமுதல் செய்து குழந்தைகளிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த அரசாங்கத்தின் கீழ் கருத்துச் சுதந்திரம் என்பது தொலைந்து போன ஒன்றாகிவிட்டது” என்றிருக்கிறார்.

பின் செல்ல