Published:Updated:

மதவாதத்தை கண்டிப்பதில் காங்கிரஸ் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது!

கார்த்தி சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்...

மதவாதத்தை கண்டிப்பதில் காங்கிரஸ் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது!

கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்...

Published:Updated:
கார்த்தி சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி சிதம்பரம்

‘நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்று தமிழக அரசியல் கட்சிகள் தடதடத்துவரும் வேளையில், “நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை!” என்று கருத்து தெரிவித்து அதிரவைத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரம். என்னதான் சொல்லவருகிறார் கார்த்தி சிதம்பரம்? இதை அவரிடமே கேட்டோம்...

“சமீபத்தில், ‘நீட் தேர்வை உணர்வுரீதியாக அணுக வேண்டாம்’ என்று பேட்டி அளித்திருந்தீர்கள். இதன் உள்நோக்கம் என்ன?”

“எந்த உள்நோக்கமும் கிடையாது. ‘நீட் தேர்வை உணர்வுரீதியாக அணுகாதீர்கள்’ என்று பல மாதங்களாகச் சொல்லிவருகிறேன். நீட் தேர்வு விவகாரம், கல்வி சார்ந்த விவாதம். ஆனால், தமிழ்நாட்டில் இதை உணர்வுபூர்வமாகவும், அரசியல் விவாதமாகவும் மாற்றிவிட்டார்கள். ‘நீட் தேர்வு குறித்து கல்வியாளர்கள், புள்ளிவிவரத்தோடுதான் முடிவு செய்ய வேண்டும்’ என்று நான் சொன்னால்கூட, ‘நீ தமிழின துரோகி’ என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள்கூட, ‘நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்குவது யார்?’ என்பதில்தான் சண்டை போடுகின்றன. இந்த அரசியல் சண்டைகளையெல்லாம் தாண்டி நீட் தேர்வு கல்வி சார்ந்த விவகாரமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.’’

“தமிழக சட்டமன்றத்தில் மறுபடியும் தீர்மானம் இயற்றப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்தது ஏன்?’’

“சில நாள்களுக்கு முன்பு, ஒரு தினசரி நாளிதழிலிருந்து நீட் தேர்வு குறித்து என்னிடம் பேட்டி கேட்டனர். அவர்களுக்கு நான் நேரடியாகப் பேட்டி எதுவும் அளிக்கவில்லை. மாறாக, ‘சில மாதங்களுக்கு முன்பே தொலைக்காட்சிகளில், நீட் தேர்வு குறித்து நான் பேசியிருக்கும் கருத்துகளைத் தொகுத்து போட்டுக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டேன். அவர்களும் அதைத்தான் இப்போது பேட்டியாக எழுதியிருக்கின்றனர். நடந்தது இதுதான்!’’

“தேர்தல் கூட்டணியின்போது ‘நீட் தேர்வு விலக்கு’ என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது ‘பெரும்பான்மை வாதத்தோடு ஒத்துப்போக மாட்டேன்’ என்று சொல்வதே துரோகம்தானே?’’

“தேர்தல் கூட்டணிக்காக அனைத்து விஷயங்களிலும் அனைவரும் ஒத்துப்போக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவரவருக்கென்று தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். உதாரணத்துக்கு, ‘பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர வேண்டுமா, வேண்டாமா?’ என்று தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்களிடமும் கேட்டால், ஒவ்வொருவரது கருத்தும் மாறுபடும்.’’

“ஆனால், நாடாளுமன்றத்தில் உங்கள் கட்சியின் ராகுல் காந்தியே ‘நீட் தேர்வு வேண்டாம் என்கிற தமிழர்களின் குரலுக்கு பா.ஜ.க அரசு மதிப்பளிப்பதில்லை’ என்று கொந்தளிக்கிறார். நீங்களோ... நேர்மாறாகப் பேசுகிறீர்களே?’’

“ராகுல் காந்தி பேசியது சரிதான். ‘நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்று எல்லோரும் ஒருமித்த கருத்துடன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்துக்கு, மத்திய பா.ஜ.க அரசு மதிப்பு அளிக்கவில்லைதானே? மறுபடியும் சொல்கிறேன்... நீட் தேர்வை, கல்வி சார்ந்த விஷயமாக மட்டுமே நான் பார்க்கிறேன். நான் ஓர் ஆலோசனை தருகிறேன்... நடப்பாண்டில் நீட் தேர்வின் மூலம் மருத்துவம் படிக்க வந்திருப்பவர்களின் சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கணக்கெடுக்க வேண்டும். அடுத்ததாக, நடப்பாண்டிலேயே ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், யாரெல்லாம் மருத்துவக் கல்வி பயில தகுதி பெற்றிருந்திருப்பார்களோ அவர்களது சமூக, பொருளாதார பின்னணியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இரண்டையும் ஒப்பீடு செய்ய வேண்டும். இதைச் செய்தாலே, சமூகநீதிக்கு வலு சேர்ப்பது எந்த நடைமுறை என்பது தெளிவாகிவிடும். அதேசமயம், இப்படியெல்லாம் பேசுவதால், நான் நீட் தேர்வுக்கு ஆதரவானவன் என்றும் நினைத்துவிடாதீர்கள்!’’

மதவாதத்தை கண்டிப்பதில் காங்கிரஸ் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது!

“ராஜேந்திர பாலாஜி கைது விவகாரத்திலும்கூட, ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி’ என்ற நீதிமன்ற உத்தரவை அடிக்கோடிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தீர்கள்... இது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிதானே?’’

“அப்படியில்லை... இந்த வழக்கில், ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறதா, இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதை நான் வரவேற்பதாகவே குறிப்பிட்டிருந்தேன். ஏனெனில், என்மீதும், என் தந்தையின்மீதும் மத்திய பா.ஜ.க அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு போட்டது. அன்றைக்கு எங்கள்மீது தொடுக்கப்பட்ட பொய்யான வழக்குகளின்மீதும் இதே போன்று நீதிமன்றப் பார்வை இருந்திருந்தால், எங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருக்கலாம்... ஆக, அனுபவரீதியில்தான் நீதிபதியின் கருத்தை வரவேற்றிருந்தேன்.’’

“தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கான கவன ஈர்ப்பாகவே நீங்கள் இப்படியெல்லாம் பேசிவருவதாக விமர்சனங்கள் வருகின்றனவே?’’

“மக்களின் கருத்துக்கு விரோதமாக நான் கருத்து சொல்லிவருவதாக நீங்களே கேள்வி கேட்டீர்கள். இப்படியெல்லாம் பேசினால் யார் எனக்குப் பதவி கொடுப்பார்கள்? (சிரிக்கிறார்.) என்னைப் போன்று வெளிப்படையாகப் பேசக்கூடியவர்கள் கட்சிக்கோ அல்லது அரசியலுக்கோ தேவை இல்லைதான். ஆனாலும்கூட பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்கள் எல்லாவற்றுக்கும் ‘ஆமாம் சாமி’ போடாமல், சுயமாகச் சிந்தித்து கருத்து சொல்ல வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்!’’

“கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டங்களைக் கண்டிப்பதில், கர்நாடக காங்கிரஸ் கட்சி தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறதே?’’

“இஸ்லாமியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாகச் சித்திரிப்பதற்கான வேலைகளை பா.ஜ.க அரசு தொடர்ந்து செய்துவருகிறது. கர்நாடகாவில் நடைபெற்றுவரும் போராட்டங்களின் பின்னணியில் பா.ஜ.க-வுக்கு ஆதரவான அமைப்புகள் இருக்கின்றன. பா.ஜ.க-வின் இந்த மத அரசியலை, கர்நாடக காங்கிரஸ் தொடர்ச்சியாகக் கண்டித்துவருகிறது. மதவாதத்தைக் கண்டிப்பதில் காங்கிரஸ் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது!’’