Published:Updated:

`அப்பா, நீங்கள் சிறைக்குச் சென்றபின் இதெல்லாம் நடந்தது!’ - தந்தைக்கு கார்த்தி எழுதிய கடிதம்

இன்று பிறந்தாள் காணும் ப.சிதம்பரத்துக்கு அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

P. Chidambaram
P. Chidambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இன்று 74-வது பிறந்தநாள். ஒவ்வோர் ஆண்டும் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடும் அவர், இந்த வருடம் முதன் முறையாக தன் பிறந்தநாளைச் சிறையில் கழிக்கவுள்ளார். இதனால் அவரின் குடும்பத்தினர் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.

P. Chidambaram
P. Chidambaram

ப.சிதம்பரத்தின் பிறந்தநாளையொட்டி அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் தன் தந்தைக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், `` அன்புள்ள அப்பா, இன்று உங்களுக்கு 74 வயதாகிறது. எந்த 56- ஆலும் உங்களைத் தடுக்க முடியாது ( முன்பு `பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது, `தான் 56 அங்குல மார்பு உடையவர் என்பதை மோடி காட்டியுள்ளார்’ என்று அமித் ஷா பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). தற்போது நம் நாட்டில் மிகச் சிறிய விஷயங்களுக்குக்கூட பெரிதாகக் கொண்டாடுகிறார்கள், ஆனால் பெரிய விஷயங்களின் கொண்டாட்டத்தைக்கூட நீங்கள் விரும்பியதில்லை.

74 வயது சிதம்பரத்துக்கு 9 உடல் உபாதைகள்! ஜாமீன் பெற புதுக் காரணம் #LeakedDocument

நீங்கள் எங்களுடன் சேர்ந்து இல்லாத இந்த பிறந்தநாள் எப்போதும்போல இருக்காது. நாங்கள் உங்களை அதிகமாக மிஸ் செய்கிறோம். நீங்கள் இல்லாதது எங்கள் இதயங்களைக் கனமாக்குகிறது. எங்கள் அனைவருடனும் இணைந்து கேக் வெட்ட, நீங்கள் விரைவில் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என விரும்புகிறோம். டெல்லி கேங்கிற்கு முன்னால் நீங்கள் ஒருபோதும் கப்சிப் என இருக்க மாட்டீர்கள். ஒரு வழியாக உங்களுக்குச் செய்தித்தாளும், குறைந்த நேரம் தொலைக்காட்சி பார்க்கும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவேன்.

Karti Chidambaram
Karti Chidambaram

ஒரு காலத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள். ஆனால், தற்போது அவர்களின் சுதந்திரம் பற்றி உங்களிடம் அதிகம் சொல்ல வேண்டும். வெளியில் என்ன நடக்கிறது என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருந்தீர்கள். ஆனால், அது முடியவில்லை. நாங்கள் மிகவும் பெருமையுடன் அன்றைய நிகழ்வுகளைப் பார்த்தோம். அதில் நிறைய நாடகங்கள் இருந்தன. விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதில் எந்த நாடகமும் இல்லை. ஆனால், அதன் பிறகுதான் பெரிய நாடகம் நடந்தது" என குறிப்பிட்டு இஸ்ரோ தலைவர் சிவனை, பிரதமர் கட்டியணைத்தது பற்றி எழுதியுள்ளார்.

ப.சிதம்பரம் கைதுக்கு யார் காரணம்? - விசாரணை வளையத்தில் முன்னாள் உதவியாளர்!

மேலும், சிதம்பரம் சிறைக்குச் சென்ற பின்பு நடந்த விஷயங்களான அமைச்சர் பியூஷ் கோயலின் பொருளாதார மந்த நிலை பற்றிய விளக்கம் (நியூட்டன், ஐன்ஸ்டீன் குழப்பம்), அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் பத்திரிகையாளர் சந்திப்பு, காஷ்மீர் ஆப்பிள்களை மத்திய அரசு கொள்முதல் செய்தது, ஹாங்காங் போராட்டம், ரஃபேல் நடாலின் வெற்றி போன்ற பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, ``தற்போது நடக்கும் அரசியல் நாடகத்துக்கு எதிராக துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டா போலச் சிறையிலிருந்து நீங்கள் வருவீர்கள், உண்மையான உங்கள் வெற்றிக்காகக் காத்திருக்கிறோம். அன்புடன் கார்த்தி” என முடித்துள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் இந்தக் கடிதம் தேசிய அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது.