Published:Updated:

தி.மு.க-வினருக்குக் கிடைத்த அனுமதி! - ஈரோட்டில் ஒரே மேடையில் ஜெயலலிதா, கருணாநிதி சிலைகள்

ஒரே மேடையில் ஜெயலலிதா சிலையும் கருணாநிதி சிலையும் தமிழகத்தில் இதுவரை எங்கும் அமைக்கப்பட்டதில்லை. ஆனால், ஈரோட்டில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவிருக்கிறது.

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள சிலைகள்
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் ( ரமேஷ் கந்தசாமி )

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள மேடையில் கருணாநிதி சிலை மற்றும் ஜெயலலிதா சிலையை வைக்க வேண்டுமென்பதை தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய கெளரவப் பிரச்சினையாகக் கருதினர். சிலையைத் தயார் செய்து வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட ஒருவருட காலமாக இரண்டு தரப்புமே அனுமதிக்காகக் காத்திருந்தனர். அனுமதியில்லாமல் யார் சிலையை வைத்தாலும், அடுத்த நொடியே நம்முடைய சிலையை வைக்க வேண்டுமென இரு தரப்பும் சம்பவத்துக்குத் தயாராக இருந்தது. இந்நிலையில் கருணாநிதியின் சிலைக்கு இடம் மறுக்கப்பட, கடந்த மாதம் ஜெயலலிதா சிலைக்கு பூங்காவில் அனுமதி கொடுக்கப்பட்டது. நள்ளிரவு ஒன்றில் பூங்காவில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட, தி.மு.க-வினர் கொதித்துப்போயினர்.

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் ஜெயலலிதா சிலை
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் ஜெயலலிதா சிலை
ரமேஷ் கந்தசாமி

பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள மேடையில் ஏற்கெனவே பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகள் இருக்க, அந்த இடத்தில் கருணாநிதி சிலையும் இருந்தால் பூரணமாக இருக்குமென தி.மு.க-வினர் கருதினர். அதையடுத்து, `ஜெயலலிதா சிலையை வைக்க எதன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டதோ, அதன் அடிப்படையில் கருணாநிதியின் சிலையை வைக்க எங்களுக்கும் அனுமதி கொடுங்கள்’ எனத் தி.மு.க தரப்பு நீதிமன்றத்தின் கதவைத் தட்டியது. இதற்கிடையே ‘கருணாநிதியின் சிலையைப் பூங்காவில் வைப்பதால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் நேராது’ என மாவட்ட நிர்வாகமும் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் கருணாநிதி சிலையை வைக்க நேற்று தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.

அனுமதி கிடைத்த அடுத்த நிமிடயே, கருணாநிதி சிலையை பூங்காவில் அமைப்பதற்கான வேலையில் தி.மு.க-வினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் நாளை (22.09.2019) ஈரோட்டுக்கு வருகை தரும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்க இருக்கிறார்.

பூங்காவுக்குக் கொண்டு வரப்படும் கலைஞர் சிலை
பூங்காவுக்குக் கொண்டு வரப்படும் கலைஞர் சிலை
ரமேஷ் கந்தசாமி

அந்தவகையில், தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில், கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலை ஒரே மேடையில் அமையவிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா என 5 தலைவர்களின் சிலையும் ஒரே மேடையில் அமையவிருக்கும் நிகழ்வும் ஈரோட்டில் அரங்கேற இருக்கிறது. ஆனால், ஒரே மேடையில் கருணாநிதி - ஜெயலலிதா சிலை இருப்பதை எப்படி ரியாக்ட் செய்வது எனத் தெரியாமல் குழம்பிப் போய்க் கிடக்கின்றனர் இரு கட்சியினரும்!