Published:Updated:

பா.ம.க-வினரின் வன்முறைப் பேச்சை வேடிக்கை பார்ப்பது ஏன்?

- காவல்துறையைக் கேள்வி கேட்கும் கருணாஸ்...

பிரீமியம் ஸ்டோரி

அ.தி.மு.க-வின் ஐந்தாண்டுக்கால ஆட்சியில் ‘கவனிக்க’த்தக்க அரசியல்வாதியாக வலம்வந்து கொண்டிருந்த நடிகர் கருணாஸ், இப்போது சினிமாவில் பிஸி! ஆனாலும், சமீபத்தில் ‘வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு ரத்து, சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி’ என்று அறிக்கை வெளியிட்டு, ‘நானும் உள்ளேன் ஐயா’ என ஆஜராகியிருக்கிறார். இந்த நிலையில்தான், முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரும், நடிகருமான கருணாஸிடம் பேசினோம்...

பா.ம.க-வினரின் வன்முறைப் பேச்சை வேடிக்கை பார்ப்பது ஏன்?

“சினிமாவில் பிஸியாகிவிட்டீர்களே... அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டீர்களா?’’

“அப்படியெல்லாம் இல்லை. ஆரம்பத்திலிருந்தே நடிப்பதும் பாடுவதும் மட்டும்தான் என் தொழில். அரசியல் என் தொழில் அல்ல. எங்கள் கட்சிக்கு, தமிழ்நாடு முழுக்கவே நிர்வாகிகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இப்போதும் சட்டரீதியாக எளிய மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க உதவிவருகிறார்கள். மற்றபடி நானும் வாழ வேண்டும்; அதற்கு வருமானம் வேண்டும். அதனாலேயே நடிக்க ஆரம்பித்திருக்கிறேன்.’’

“அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த நீங்களே, வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு ரத்தாகியிருப்பதை வரவேற்பது முரண்பாடாக இல்லையா?’’

“வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை இன்று நேற்றல்ல... நீண்ட நாள்களாகவே எதிர்த்துவருகிறேன்.

‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான இந்த உள் இட ஒதுக்கீடு நிலைக்காது’ என்பது எடப்பாடிக்கும் பன்னீருக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும்கூட வன்னிய சமூக மக்களை ஏமாற்றி, அவர்களது வாக்குகளைக் கவர்வதற்காக அன்றைய மத்திய, மாநில அரசுகள் இந்த ஏமாற்று வேலையைச் செய்தன. அதனால்தான், எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த நீதியரசர்கள் இந்த உள் இட ஒதுக்கீடு சட்டத்தையே ரத்துசெய்துவிட்டார்கள்.’’

“சமீபத்தில், விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை ஒருவர் தாக்கிய சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“மிகவும் தவறான செயல். திரைத்துறையில் உள்ள ஒரு கலைஞனை பொது இடத்தில் சந்திக்கும்போது, எந்த அளவுக்கு மரியாதையோடு நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியாதவர்கள்தான் இது போன்ற தவறுகளைச் செய்கிறார்கள். இன்றைய சூழலில், நடிகன் என்பவனுக்கு பல்வேறு சிந்தனைகளும், மன உளைச்சல்களும் இருக்கின்றன. இந்த நிலையில், பொது இடத்தில் நடிகனைச் சந்திக்கும்போது ரசிகர்களோ அல்லது மற்றவர்களோ தன்மையோடு பேச வேண்டும். இந்தச் சம்பவத்தில், வன்முறையில் ஈடுபட்ட அந்த நபர் நிதானத்தோடு இருக்கவில்லை என்பதை விஜய் சேதுபதியின் தரப்பே விளக்கிவிட்டது.’’

“ஆனால், ‘நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு’ என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் சொல்லியிருக்கிறாரே?’’

“இப்படியெல்லாம் வன்முறையைத் தூண்டுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? மிகவும் தவறு இது.’’

பா.ம.க-வினரின் வன்முறைப் பேச்சை வேடிக்கை பார்ப்பது ஏன்?

“ ‘ஜெய் பீம்’ பட சர்ச்சையிலும்கூட, ‘நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு’ என பா.ம.க மாவட்டச் செயலாளர் அறிவித்திருக்கிறாரே?’’

“படைப்பு சுதந்திரத்தையே கேள்விக்குள்ளாக்குகிற போக்கு ஆரோக்கியமானது அல்ல. மலைவாழ் மக்களின் பரிதாப நிலையை உண்மைச் சம்பவத்தின் வாயிலாக ‘ஜெய் பீம்’ படத்தில் சொல்லியிருக் கிறார்கள். இந்தியா முழுக்கவே இந்தப் படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியான சூழலில், வெறுமனே படத்தில் குறிப்பிடப்படும் ஒரு பெயரை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் செய்வது நாகரிகமானதல்ல. மதம், இனத்தை வைத்து அரசியல் செய்யக்கூடிய மோசமான நிலைக்குத் தமிழக அரசியல் தள்ளப்பட்டுவிட்டதைத்தான் இது காட்டுகிறது. எல்லோருக்குமே இந்த மண்ணில் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. ‘உதைத்தால் ஒரு லட்சம்’ என்று சொல்பவர்கள், நாளையே ‘கையை வெட்டினால் ஐந்து லட்சம், தலையை வெட்டினால் பத்து லட்சம்’ என்றெல்லாம்கூட சொல்வார்கள்... பா.ம.க-வினரின் இந்த வன்முறைப் பேச்சையெல்லாம் தமிழக அரசும் காவல்துறையும் எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன... சம்பந்தப்பட்டவர்கள்மீது உடனடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?’’

“ஆனால், ‘தேவையே இல்லாமல், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரை ‘ஜெய் பீம்’ படத்தில் வில்லனாகச் சித்திரித்திருக்கிறார்கள்’ என்று பா.ம.க சொல்கிறதே?”

“அப்படியொரு விமர்சனம் எழுந்தவுடனேயே, படக்குழுவினர் வருத்தம் தெரிவித்துவிட்டனர். சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கிவிட்டார்கள். அதன் பிறகும்கூட, அரசியல் செய்துகொண்டிருந்தால் அது எந்தவிதத்தில் நியாயம்? நாளைய தலைமுறைக்கு நல்லது செய்வதுதான் அரசியல். எங்கே அரசியல் செய்ய வேண்டுமோ அங்கே மட்டும்தான் அரசியல் செய்ய வேண்டும். நானே நாளை ஒரு படம் எடுக்க வேண்டுமென்றால்கூட தமிழ்நாட்டிலுள்ள சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்துச் சமூகத்தினரிடமும் அனுமதிக் கடிதம் வாங்கிக்கொண்டுதான் படம் எடுக்க வேண்டுமா?’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு