Published:Updated:

`நான் பரமக்குடி எம்.எல்.ஏ கிடையாதுதான்.. ஆனாலும்..!’- அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாஸ்

எனது தொகுதியான திருவாடனை தொகுதி மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கடந்த 3 ஆண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாள்களில் எனது தொகுதிக்கு நான் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கருணாஸ்
கருணாஸ்

``பரமக்குடியில் பள்ளி மாணவர்களை பாதிக்கும் வகையில் கஞ்சா விற்பனை வெளிப்படையாக நடக்கிறது'' என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற அரசு விழாவில் திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் உதயகுமாருடன் கருணாஸ்
அமைச்சர் உதயகுமாருடன் கருணாஸ்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று மாலை முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்த இந்த விழாவில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று 1.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் பிரபாகர் (பரமக்குடி), பாண்டி (முதுகுளத்தூர்) மற்றும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

வாழ்த்துரையில் பேசிய கருணாஸ், ``அமைச்சர் உதயகுமாரைச் சந்திக்க வேண்டும். அவர் அறை எங்கிருக்கிறது எனக் கேட்டபோது எம்.எல்.ஏ-க்களுக்கான அறையில்தான் அவர் தங்கியிருக்கிறார் எனத் தெரிவித்தனர். அந்த அளவுக்கு எளிமையானவர் அவர். எனக்குத் தெரிந்து குறுகியகால அரசியலில் தனிமனித ஒழுக்கத்தோடும் அமைச்சர் என்ற பகட்டு காட்டாமலும் தனது இலக்கை அடையும் வகையில் மக்களுக்கான பணிகளை அவர் செய்து வருகிறார்.

விழாவில் பங்கேற்ற பயனாளிகள்
விழாவில் பங்கேற்ற பயனாளிகள்

அரசியல் என்பது பகட்டாக மாறிவரும் சூழலில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகிவிடலாம் எனக் கனவு காணும் சூழலும் நிலவுகிறது. ஆனால், அம்மா காலத்தில் எப்படி பணியாற்றினாரோ அதேபோல் இன்றும் பணியாற்றி வருகிறார் அமைச்சர் உதயகுமார். அவரது பணி தொடர வேண்டும். அதே நேரத்தில் எனது தொகுதியான திருவாடனை தொகுதி மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கடந்த 3 ஆண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாள்களில் எனது தொகுதிக்குள் நான் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, எனது தொகுதி மீது கூடுதல் கவனம் செலுத்த கேட்டுக்கொள்கிறேன்.

நான் பரமக்குடி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இல்லாவிட்டாலும், உங்கள் முன் ஒரு கோரிக்கையினை வைக்கின்றேன். பரமக்குடி பகுதியில் பள்ளி மாணவர்கள் சீரழியும் வகையில் போதை பொருளான கஞ்சா விற்பனை வெளிப்படையாக நடந்து வருகிறது. இது குறித்து ஏற்கெனவே காவல்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளேன். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட கண்காணிப்பாளரை இன்னும் சந்திக்கவில்லை. எனவே, பரமக்குடியில் நடந்து வரும் கஞ்சா விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

விழாவில் பேசிய கருணாஸ்
விழாவில் பேசிய கருணாஸ்

அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்ற விழாவில் பேசிய கருணாஸ், பரமக்குடியில் வெளிப்படையாக நடக்கும் கஞ்சா விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.