Published:Updated:

''வன்னியருக்கு மட்டுமே 10.5% என்றால், நாங்கள் என்ன பாவம் செய்தோம்?'' - கேட்கிறார் கருணாஸ்

கருணாஸ்

''வன்னியர் மட்டுமே 10.5% இடங்களைப் பெற்றுக்கொண்டு போவதென்பது என்ன நியாயம்... நீங்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டுமென்றால், நாங்களெல்லாம் என்ன பாவம் செய்துவிட்டோம்?'' எனக் கேட்கிறார் நடிகர் கருணாஸ்.

''வன்னியருக்கு மட்டுமே 10.5% என்றால், நாங்கள் என்ன பாவம் செய்தோம்?'' - கேட்கிறார் கருணாஸ்

''வன்னியர் மட்டுமே 10.5% இடங்களைப் பெற்றுக்கொண்டு போவதென்பது என்ன நியாயம்... நீங்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டுமென்றால், நாங்களெல்லாம் என்ன பாவம் செய்துவிட்டோம்?'' எனக் கேட்கிறார் நடிகர் கருணாஸ்.

Published:Updated:
கருணாஸ்

வன்னியர்களுக்கான 10.% உள் இட ஒதுக்கீட்டை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, 'முக்குலத்தோர் புலிப்படை' நிறுவனத் தலைவரும், நடிகருமான கருணாஸுக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

10.5% உள் இட ஒதுக்கீட்டைத் தொடரச் செய்வதற்கான பெருமுயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கும் இந்த வேளையில் நடிகர் கருணாஸிடம் பேசினேன்...

''வன்னியர் சங்க 10.5% இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால் நம்பிக்கைகொண்ட மக்களுக்கு இந்தத் தீர்ப்பு மிகப்பெரிய உற்சாகம் அளித்திருக்கிறது.

சட்டமன்றத்தில் உள் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் அரசாணை பிறப்பிப்பதற்கும் தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. ஆனால், சாதி மற்றும் பொருளாதாரரீதியிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எதையும் அரசு நடைமுறைப்படுத்தாத சூழலில், எப்படி குறிப்பிட்ட சதவிகித இட ஒதுக்கீட்டை, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் வழங்கிட முடியும்?

 உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆக, வன்னிய மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக, தேர்தல் நெருக்கத்தில் அவசரம் அவசரமாக இப்படியொரு சட்டத்தை நிறைவேற்றியது அன்றைய அ.தி.மு.க அரசு.

அதனால்தான், போதுமான தரவுகளோ, சான்றுகளோ இல்லாமல், வெறுமனே சாதியின் அடிப்படையில் மட்டுமே இப்படியோர் உள் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை அன்றைய அ.தி.மு.க அரசு நிறைவேற்றியிருப்பது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பதோடு, சட்டத்தையும் ரத்துசெய்துவிட்டது.

அதாவது, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலுள்ள வன்னியர் சமுதாய மக்கள்தொகை குறித்து, தெளிவான வகையில் எந்தவொரு புள்ளிவிவரமும் இல்லாத சூழலில், எதன் அடிப்படையில் குறிப்பிட்ட அந்தச் சமூகத்துக்கு மட்டும் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கிறீர்கள் என்பதுதான் நீதிமன்றத்தின் அடிப்படைக் கேள்வி.

எனவே, இது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இயற்றப்பட்ட சட்டம் என்பது இப்போது நீதிமன்றத் தீர்ப்பின் வழியே மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''10.5% இட ஒதுக்கீடு என்பது திடீரென கிடைக்கவில்லை... 42 ஆண்டுக்கால போராட்டம் என்கிறாரே அன்புமணி ராமதாஸ்?''

''போராட்டத்தின் பலனாகத்தான் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு வன்னியர்கள் வந்திருக்கிறார்கள். ஆக, 'இந்தச் சமூகங்களுக்கெல்லாம் இட ஒதுக்கீடு வேண்டும்' என்று அன்றைக்குப் போராடிய நீங்களே, இன்றைக்கு அதே சமூக மக்களயெல்லாம் புறந்தள்ளிவிட்டு, வன்னியர் மட்டுமே 10.5% இடங்களைப் பெற்றுக்கொண்டு போவதென்பது என்ன நியாயம்... நீங்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டுமென்றால், நாங்களெல்லாம் என்ன பாவம் செய்துவிட்டோம்,,, வெகுஜன மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றனவா இல்லையா?

இப்போதும்கூட முக்குலத்தோர் சமுதாயத்தின் பிறமலைக் கள்ளர், மறவர் சமூகத்தினர் மட்டும்தான் 'மிகவும் பிற்படுத்தப்பட்டோர்' பட்டியலில் இருக்கிறார்கள். அகமுடையார் மற்றும் திருச்சி, தஞ்சை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கள்ளர்கள் இன்னமும் 'பிற்படுத்தப்பட்டோர்' பட்டியலிலேயேதான் இருக்கின்றனர். எனவே, சாதி ரீதியிலாக மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் நடத்தினால் மட்டுமே இந்தப் பிரச்னையில் உரிய நீதி கிடைக்கும்.''

அன்புமணி
அன்புமணி

''மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மத்திய அரசுதானே நடத்த வேண்டும்?''

''ஆமாம்... அவர்களைக் கணக்கெடுப்பு நடத்தச் சொல்லி மாநில அரசுதானே வற்புறுத்த வேண்டும்? 2021-ம் ஆண்டே 'சீர் மரபினர்' பட்டியலில் உள்ள மக்கள்தொகையைக் கணக்கெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட மத்திய அரசு, அதற்கான நிதியையும் ஒதுக்கிவிட்டது. ஆனால், அன்றைய அ.தி.மு.க அரசும் கணக்கெடுப்பு பணியை நடத்தவில்லை. இன்றைய தி.மு.க அரசும் இப்போதுவரை பணிகளைத் தொடங்கவில்லை. ஏனெனில், இங்கே சாதியை வைத்துத்தானே அரசியலே நடந்துவருகிறது.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''சமூகநீதியில் அக்கறைகொள்ளும் கருணாஸ், ஏற்கெனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் இஸ்லாமியர் - அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுகளுக்கு எதிராகவெல்லாம் போராடவில்லையே... ஏன்?''

''இஸ்லாமியர்களில் குறிப்பிட்ட பிரிவினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்த உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இதுவும்கூட இரண்டு சதவிகிதம் அல்லது இரண்டரை சதவிகிதம் என்ற அளவில்தான் இருக்கிறது. எனவே, இந்த உள் இட ஒதுக்கீட்டால் மற்ற சமூகத்தினருக்கு பெரிய அளவில் பாதிப்பு கிடையாது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட சமூகங்களை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், வன்னியருக்கென்று மட்டும் 10.5% இட ஒதுக்கீட்டை எடுத்துக்கொண்டு போய்விட்டால், பட்டியலில் மீதம் உள்ள சமூகங்களின் நிலை என்ன? எனவேதான் எதிர்க்கிறோம்.''

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

''10.5% உள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில், தி.மு.க அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று ஏற்கெனவே நீங்கள் கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு, மேல்முறையீடு சென்றதில் உங்களுக்கு வருத்தம் உண்டா?''

''ஆமாம்... இப்போதும் வருத்தம் உண்டுதான். ஆனால், வன்னிய மக்களின் கோபத்தைச் சம்பாதித்துவிட வேண்டாம் என்ற அரசியல் நோக்கில்தான் தி.மு.க அரசு மேல்முறையீடு சென்றது. வன்னிய மக்களைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்று கருதுகிற தி.மு.க அரசு, வெகுஜன மக்களின் கோபத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும்தானே... ஆக இதெல்லாம் எந்த வகையில் நியாயம்?''

''வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீங்கள் தொடுத்த வழக்கு, தி.மு.க தலைமையுடனான உங்கள் உறவில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?''

''அப்படியெல்லாம் எதுவும் இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போதும் என்மீது அன்பு காட்டுபவர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவச் சிகிச்சையில் இருந்தபோது நேரில் சென்று விசாரித்தபோதும் அறிவாலயத்தில் தி.மு.க நடத்திய போட்டி சட்டமன்றக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதும் மு.க.ஸ்டாலின் அன்போடு என்னிடம் பழகினார். ஆனால், 2021 தேர்தலில் வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு இன்னும் நான் அவரை நேரில் சந்திக்கவில்லை. விரைவில் தேதி வாங்கிச் சந்திப்பேன்.''

ராமதாஸ் - கருணாநிதி
ராமதாஸ் - கருணாநிதி

''இட ஒதுக்கீட்டில் பயனடைந்த சமூகங்கள்தான் உள் இட ஒதுக்கீடு அரசாணையை எதிர்த்து வழக்கு நடத்தி ரத்துசெய்ய வைத்திருக்கின்றன என்று பா.ம.க வேதனை தெரிவித்திருக்கிறதே?''

''1989-ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியரை சேர்த்தார் கருணாநிதி. அப்போதும்கூட, 'வன்னியரை மட்டும் சேர்க்க முடியாது. உங்களோடு மற்ற சமுதாயத்தினரையும் சேர்த்துக்கொண்டு வாருங்கள்' என்றுதான் அரசியல் செய்தார்கள். அதனடிப்படையில்தான் நூற்றுக்கும் மேற்பட்ட சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்குள் கொண்டுவந்தனர். இப்போது 'நாங்கள்தான் போராடி இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்தோம்' என்று பா.ம.க சொல்கிறது. ஆனால், மற்ற சமுதாயத்தினரோ, 'எங்களை வைத்துத்தான் நீங்கள் இட ஒதுக்கீட்டை வாங்கினீர்கள்' என்று சொல்கிறார்கள்.''

(விறுவிறுப்பான இந்தப் பேட்டியின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்....)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism