Published:Updated:

தீராத கரூர் கலெக்டர் பஞ்சாயத்து, மதுக்கடைகளைத் திறக்க `தள்ளாடும்' புதுச்சேரி... கழுகார் அப்டேட்ஸ்!

ஹேங் அவுட்ஸ் மீட்டிங் திரையில் தோன்றிய கழுகார், நீண்டநாள் கழித்து நாளை அலுவலகம் செல்லவிருக்கிறேன். செய்திகளை சீக்கிரம் குறித்துவைத்துக்கொள்ளும் என்று பரபரப்பு காட்டினார்...

வேலூர் மத்திய சிறையில் ரெளடிகள் பலர் சிறை அலுவலர்களை கைக்குள் வைத்துக்கொண்டு ராஜாங்கம் செய்கிறார்கள். செல்போன், போதைப் பொருள்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக புழங்குகின்றன. இவற்றை எல்லாம் சிறைக்குள் கொண்டுவருவதற்குப் பெரிய நெட்வொர்க்கே செயல்படுகிறதாம். இப்படித்தான் உள்ளே இருக்கும் பயங்கரமான ரௌடி ஒருவர் சிறைக்குள் இருந்துகொண்டே வெளியில் உள்ள தொழிலதிபர்கள், நிதி நிறுவன அதிபர்களை செல்போனில் மிரட்டி கூட்டாளிகள் மூலம் பணம் பறிக்கிறாராம். மிரட்டலுக்குள்ளான நபர்களும் போலீஸிடம் செல்ல பயந்து ரௌடியின் வங்கிக் கணக்கு எண்ணுக்குப் பணத்தை அனுப்பிவிடுகிறார்களாம்.

தொடர் சர்ச்சையில் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தொடர் சர்ச்சையில் சிக்கிவருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது `தி.மு.க-வினர் நூறு பேர் என் குடும்பத்தைத் தாக்க வந்தார்கள்; மாவட்ட எஸ்.பி தான் காப்பாற்றினார்’ என்றார். தொடர்ந்து, மூடப்படாத ஆழ்துளை கிணறுகுறித்து இளைஞர் ஒருவர் அன்பழகனிடம் போனில் புகார் சொன்னபோது ``எல்லாத்துக்கும் எனக்குப் போன் செய்தால், நான் என்ன சரவணபவன் சர்வரா?” என்றார்.

இந்தநிலையில்தான், `கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களுக்கு எங்களை அழைப்பதில்லை’ என்று கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி-யான ஜோதிமணி, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் செந்தில்பாலாஜி, ராமர் ஆகியோர் புலம்பிவருகிறார்கள். செந்தில் பாலாஜி இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமே கேட்டபோது, ``உங்களுக்கு அழைப்பு விடுத்தோமே” என்று கூறினாராம். அதற்கு செந்தில்பாலாஜி தரப்பில், ``எதிர்க்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் அழைக்க வேண்டாமா? ஆளுங்கட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ கீதா ஆகியோருக்கு மட்டும் தவறாமல் அழைப்புவிடுக்கப்படுகிறதே?” என்று கேட்கப்பட்டதாம். அதற்கு ஆட்சியர், ``ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கீதா கூட்டத்தில் கலந்துகொண்டது எனக்குத் தெரியாது” என்று சொன்னாராம். ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும் கூட்டத்தில் ஆட்சியருக்கே தெரியாமல் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் எப்படி கலந்துகொள்ள முடியும்?” என்று வெடிக்கிறார்கள் எதிர்க்கட்சி தரப்பினர்!

புதுச்சேரி பார் மல்லுக்கட்டு
அவங்க திறந்தாதான் நாங்களும் திறப்போம்!

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நேரத்தில் கள்ளச்சந்தைமூலம் மதுபாட்டில்களை விற்றதாக 90 மதுக்கடைகளின் உரிமத்தை ரத்துசெய்து உத்தரவிட்டார் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. புதுச்சேரியில் இருக்கும் மொத்த மது பார்களில் 80 சதவிகிதம் அரசியல் தலைவர்களுக்குச் சொந்தமானவை என்கிறார்கள். தமிழகத்தில் மே 7-ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது, புதுச்சேரியிலும் உரிமம் ரத்துசெய்யப்பட்ட கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகளை திறக்க ஆலோசித்திருக்கிறார்கள். ஆனால், `உரிமம் ரத்துசெய்யப்பட்ட கடைகளுக்கும் அனுமதி வழங்கினால்தான், நாங்களும் திறப்போம்’ என்று உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்களாம். மதுக்கடைகளை திறக்க முடியுமா, முடியாதா என்று திணறிவரும் ஆளுங்கட்சிக்கு இது புது தலைவலியாகக் கிளம்பியிருக்கிறது.

தொகுதியில் குடும்ப அட்டைகள் எவ்வளவு? கணக்கு தெரியாமல் மாட்டிக்கொண்ட எம்.எல்.ஏ!

தேனி மாவட்டம் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையனுக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆகாது என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தேனி வந்திருந்த ஓ.பன்னீர்செல்வம், கொரோனா நிவாரண உதவிகள் தொடர்பாக ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர் அளவிலான கூட்டம் ஒன்றை நடத்தினார். கூட்டத்தில் கம்பம் எம்.எல்.ஏ-வான ஜக்கையனிடம், `உங்கள் தொகுதியில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் தலா 500 ரூபாய் மதிப்பிலான பொருள்களை வழங்குங்கள்’ என்று கூறினார். ஜக்கையனும் `சரி’ என்று கூறிவிட்டார். கூட்டம் முடிந்து வீடு திரும்பிய ஜக்கையன், தனது தொகுதியில் உள்ள குடும்ப அட்டைகளை கணக்கு எடுத்தபோது செலவு கணக்கு சில கோடிகளைத் தாண்ட... மயக்கமே வந்துவிட்டதாம். கட்சி நிர்வாகிகளோ, ``ஒரு எம்.எல்.ஏ-வுக்கு தனது தொகுதியில் உள்ள குடும்ப அட்டைகள் விவரம்கூட தெரியாதா... கூட்டத்தில் சொன்னவுடனே தலையை ஆட்டிவிட்டு வந்தால் இப்படித்தான்” என்று கமென்ட் அடிக்கிறார்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தயாராகும் ஜெயவர்த்தன்
மகனுக்கு கிளாஸ் எடுக்கும் ஜெயக்குமார்!

அமைச்சர் ஜெயக்குமார் தன் மகன் ஜெயவர்த்தனை முன்னிலைப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வைத்துவருகிறார். வீட்டிலிருந்தே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயவர்த்தனிடம் ஆளுங்கட்சி டாஸ்மாக் கடைகளைத் திறந்தது தொடங்கி பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பினார் தி.மு.க-வின் தமிழன் பிரசன்னா. ஆனால், எதற்குமே ஜெயவர்த்தன் பிடிகொடுக்கவில்லை; பொத்தாம்பொதுவாக ஒரு பதிலை சொல்லியிருக்கிறார். அந்த நேரம் பார்த்து நிகழ்ச்சி இடைவேளை வந்திருக்கிறது. இந்த இடைவெளியில் பல்வேறு டிப்ஸ்கள் கொடுத்து மகனுக்கு உதவினாராம் அமைச்சர் ஜெயக்குமார். அதன் பிறகு, ஓரளவு சரளமாக பதில் அளித்து பேசினார் ஜெயவர்த்தன்!

ஶ்ரீரங்கம் தொகுதியை மறந்துபோனதா அ.தி.மு.க?

திருச்சி மாவட்ட தி.மு.க-வினர் ஶ்ரீரங்கம் தொகுதி முழுக்க நிவாரண உதவிகளை வழங்கிவருகிறார்கள். இந்தக் கூட்டங்களில் எல்லாம், ``அ.தி.மு.க அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். அதனால்தான் மக்களுக்கு உதவ முன்வரவில்லை’’ என்று பேசிவருகிறார்கள். ஆனாலும், எதிர்முகாமில் எந்தச் சத்தத்தையும் காணோம். ``ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஶ்ரீரங்கம் தொகுதி மக்களை உருகி உருகிக் கவனித்த ரத்தத்தின் ரத்தங்கள் இப்போது எங்கே போனார்கள்?’’ எனக் கேள்வி எழுப்புகின்றனர் தொகுதி மக்கள்!

அரசியலில் குதிக்கும் `சிங்கம்'

கர்நாடக மாநில கேடர் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு `சிங்கம்’ என்ற செல்லப்பெயர் உண்டு. பெங்களூரு நகரத் துணை கமிஷனராகப் பணியாற்றியபோது அரசியல் விவகாரம் ஒன்றில் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். உடுப்பி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றியபோது ரவுடிகளை ஒழித்தது உட்பட பல அதிரடிகளை நிகழ்த்தினார். அங்கிருந்து அவரை பணியிட மாற்றம் செய்தபோது உடுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்தளவுக்கு மக்கள் மனதில் அண்ணாமலை இடம்பெற்றிருந்தார். காவல்துறை பணியிலிருந்து விலகிய பிறகு, தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்கி தமிழகத்தில் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டுவருகிறார் அண்ணாமலை. விரைவில் அவர் தமிழக அரசியலிலும் கால் பதிக்கிறாராம். ``தமிழகத்தின் சிஸ்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அதனால், அரசியலில் குதிக்கப் போகிறேன். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகிறேன்’’ எனச் சொல்லிவருகிறார் சிங்கம் அண்ணாமலை.

அலைபாயும் கொரோனா நிதி!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பல கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் அது முழுமையாகச் செலவிடப்படவில்லை என்று சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குமுறுகிறார்கள். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அந்த மாவட்ட அரசு ஊழியர்களுக்கு ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பினார். அதில், `ஒவ்வொரு வட்டத்துக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்குகிறேன். ஒவ்வொரு சுகாதாரத்துறை அலுவலகத்துக்கும் 25 லட்சம் ரூபாய் வழங்குகிறேன். கொரோனாவைக் கட்டுப்படுத்த என்னென்ன தேவைப்படுகிறதோ, அனைத்தையும் தயங்காமல் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று கூறியிருந்தார். ஆனால், பல மாவட்டங்களில் இப்படி நடக்கவில்லையாம். மேலிட அழுத்தம் காரணமாக அந்த நிதி முழுமையாக செலவிடப்படாமல், மடைமாற்றம் செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு