Published:Updated:

``பாசிச எதிர்ப்பில், திமுக இதே வேகத்தோடு இயங்குவதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது” - சொல்கிறார் ஜோதிமணி

ஜோதிமணி

நாடாளுமன்ற நடவடிக்கைகள், பா.ஜ.க அரசின் செயல்பாடுகள், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம் சில கேள்விகள்...

``பாசிச எதிர்ப்பில், திமுக இதே வேகத்தோடு இயங்குவதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது” - சொல்கிறார் ஜோதிமணி

நாடாளுமன்ற நடவடிக்கைகள், பா.ஜ.க அரசின் செயல்பாடுகள், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம் சில கேள்விகள்...

Published:Updated:
ஜோதிமணி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அமளிகளுக்கு இடையே இந்த முறை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க மற்றும் அதன் எதிர்க்கட்சிகளுக்கு இடையே விவாதங்கள் அனல் பறக்கின்றன். இந்தச் சூழலில் நாடாளுமன்ற நடவடிக்கைகள், பா.ஜ.க-வின் செயல்பாடுகள், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியுடன் ஒரு நேர்காணல்...

ஜோதிமணி
ஜோதிமணி

“`அதானி, அம்பானி குறித்துப் பேசும் திமுக, அவர்களோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது’ என பா.ஜ.க விமர்சிக்கிறதே?”

``புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்பது வேறு, கார்ப்பரேட் நிறுவனம் என்பது வேறு. காங்கிரஸ் ஆட்சியிலும் இது நடந்திருக்கிறது. இந்தியாவில் ஆறு விமான நிலையங்களை மிகக் குறைவான விலையில் அதானிக்குக் கொடுக்கிறார்கள். மும்பை விமான நிலையத்தை நடத்தும் நிறுவனத்தை மிரட்டி அதை அதானிக்குக் கொடுக்கிறார்கள். குஜராத் முத்ரா துறைமுகத்தில் தொடர்ந்து போதைப்பொருள் சிக்கியுள்ளன. ஏன் ஒரே ஒரு நபருக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்பதுதான் நமது கேள்வி.

பிரதமர் இலங்கைக்குச் சென்று மின்சாரத் திட்டங்களை அதானிக்குக் கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகச் செய்திகள் வந்தன. இந்திய வரலாற்றில் ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்காகப் பேரம் பேசியதாகச் செய்திகள் இருக்கின்றனவா... ஆனால், அதை மோடி செய்கிறார். பிரதமர் ஏஜென்ட்டாகச் செயல்பட்டார். முதன்முறை ஜியோ வெளியானபோது அதன் விளம்பராத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றது. இப்படி வெளிப்படையாக பிரதமர் மோடி அதானிக்கும் அம்பானிக்கும் சேவகம் செய்யும்போதுதான் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.”

``பாஜக மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற நோக்கிலேயே பேசுவதாக இருக்கிறதே?”

``யார் மீதும் குற்றம் சுமத்தவேண்டிய தேவை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. இந்தியாவின், ஜனநாயகத்தின் முதுகெலும்பை முறிக்கும் வேலையை பா.ஜ.க செய்துவருகிறது. இது தொடர்ந்தால் பா.ஜ.க நினைப்பவர்கள்தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற சூழல் உருவாகும். அப்படியென்றால் தேர்தல் எதற்கு... தேர்தலில் தோல்வியடைந்த மாநிலங்களில் மக்களைக் கவரும் வகையில் வேலை செய்து மக்கள் மனங்களில் இடம்பிடித்து ஆட்சிக்கு வர வேண்டும். ஆனால், உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி, ஆளுநர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு தவறாகப் பயன்படுத்தி, புறவாசல் வழியாக ஆட்சிக்கு வருகிறார்கள். ஜனநாயகப் படுகொலையில் பா.ஜ.க ஈடுபடும்போது அதைத் தட்டிக்கேட்கிறோம். அதில் என்ன தவறு?”

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் காரில் பணம் பறிமுதல்
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் காரில் பணம் பறிமுதல்

``பணத்துக்கு விலை போகும் நிர்வாகிகளைத்தான் கட்சியில் வைத்திருக்கிறீர்கள் என்பது யாருடைய தோல்வி?”

``காங்கிரஸ் கட்சியின் தலைமை, கொள்கைப் பிடிப்போடுதான் களத்தில் நிற்கிறது. அதனால்தான் ராகுல், சோனியா காந்திமீது அமலாக்கத்துறை விசாரணை வருகிறது. கட்சியிலுள்ள சில நிர்வாகிகள் விலை போகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பணத்துக்கு விலை போவது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். அதற்காகத்தான் கட்சித்தாவல் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு. ஆனால், அதன் குரல்வளையை பா.ஜ.க-வினர் நெரித்துவிட்டார்கள்.”

``நிர்வாகிகளுக்கு அரசியல் தெளிவை ஊட்டாமல் மற்றவர்மீது பழிபோடுவது சரியா?”

``ஒரு சிலிண்டர்கூட வாங்க முடியாத அளவுக்கு வசதியின்றி இந்தியாவில் பல கோடி மக்கள் இருக்கும்போது, இத்தனை எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு பா.ஜ.க-வுக்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது... சட்டத்தை, நீதியை வளைக்கிறார்கள். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் கட்சித் தலைமைகளின் வேலை. ஆனால், அவர்கள் அரசியலில் தெளிவான நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும். பணத்துக்காகச் சமரசம் செய்துகொள்ளும் போக்கு மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும். அது பா.ஜ.க போன்ற பாசிச சக்திக்குத்தான் நல்லது என்பதை மக்களைவிட அரசியல்வாதிகள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.”

நாடாளுமன்றத்தில் ஜோதிமணி
நாடாளுமன்றத்தில் ஜோதிமணி

``நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபடுவது எப்படிச் சரியான அணுகுமுறையாக இருக்கும்?”

``விலைவாசி உயர்வுக்குப் பொறுப்பாகப் பதிலளிக்கச் சொல்லிக் கேட்கிறோம். அதற்குப் பொறுப்புள்ள நிதியமைச்சராக பதிலளிக்காமல் நாங்கள் அரசியல் பேசுகிறோம் என்கிறார்கள். புள்ளிவிவரங்களோடு தெளிவாகக் கேட்கிறோம். அதில் என்ன தவறு இருக்கிறது என்று எங்களுக்குப் புரியவில்லை. இந்தியாவின் பொருளாதாரம் சரியாக இருக்கிறது என்றால் ஏன் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது எனக் கேட்கிறோம். அதற்கு பதிலில்லை. தொடர்ந்து அரசியல் மட்டுமே பேசுகிறார்கள். சரியான காரணத்தையும் தீர்வையும் சொல்லுங்கள் என்றோம். ஆனால், அதற்கு அவர்கள் தயாராக இல்லை. அதை எதிர்த்து கேள்வி கேட்கிறோம். அதுதானே எதிர்க்கட்சிகளின் வேலை?”

``அமளியில் ஈடுபடுவதாலோ, மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்வதாலோ தீர்வைக் கொண்டுவர முடியுமா?”

``எளிய மக்களின் வாழ்க்கை மோசமான நிலையில் இருக்கிறது. ஆனால், அதானி, அம்பானி ஆகியோரின் வாழ்க்கை மட்டும் சீரும் சிறப்புமாக இருக்கிறது. மதம், சாதி எனச் சொல்லி மக்களைப் பிளவுபடுத்தி, கலவரத்தைத் தூண்டுகிற அரசாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னையை ஆலோசித்துத் தீர்வுகாண வேண்டும் என்ற ஆர்வமும் அக்கறையும் இல்லை. மாறாக பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் அரசைக் கவிழ்ப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள். இப்படி ஆளும் அரசு ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதை எதிர்த்து கேள்வி கேட்கிறோம். அது எப்படித் தவறாகும்?”

நாடாளுமன்றத்தில் போராடும் ஜோதிமணி
நாடாளுமன்றத்தில் போராடும் ஜோதிமணி

``தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு மாதிரியும், ஆளுங்கட்சியாக இருந்தபோது வேறொரு மாதிரியாகவும் நடந்துகொள்கிறதா?”

``முன்பு அரசாங்கத்தை நடத்தவேண்டிய பொறுப்பு தி.மு.க-வுக்கு இல்லை. ஆனால், இப்போது இருக்கிறது. மிகுந்த கடன் சுமையோடு அரசுப் பொறுப்பை ஏற்றிருக்கிறது தி.மு.க. ஓராண்டில் பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சமாளிக்க ஒன்றிய அரசுடன் உரையாடல் கட்டாயம் தேவை. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் இருக்கும் காங்கிரஸ் அரசுகளும் ஒன்றிய அரசுடன் இணக்கமாகத்தான் இருக்கிறார்கள். அதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஒன்றிய அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அது நரேந்திர மோடி வீட்டிலோ, நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலோ இருந்து கொண்டுவரப்பட்டதில்லை.”

``பா.ஜ.க எதிர்ப்பில் தி.மு.க பின்வாங்கியதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?”

“நிச்சயம் இல்லை. ஆனால், தி.மு.க அரசைத் தாண்டியும் தி.மு.க என்கிற அரசியல் இயக்கம் பாசிச எதிர்ப்பில் அதே வேகத்தோடு இயங்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கூட்டணிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கும் மிக முக்கியமான ஒன்று என்று கருதுகிறேன்.”

விலைவாசி உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்
விலைவாசி உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்

``அ.தி.மு.க ஆட்சியிலும் இதேதானே செய்தார்கள்... அவர்களை மட்டும் அடிமை அரசு என விமர்சிப்பது எப்படிச் சரியாக இருக்கும்?”

``இணக்கமாக இருப்பதற்கும், அடிமையாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மோடி வந்து சென்ற அடுத்த நாளே மாநிலங்கள் இணைந்ததுதான் இந்தியா என்கிறார் முதல்வர். கருத்தியில்ரீதியிலாக முன்வைக்கிறார். இப்படிக் கருத்தை எடப்பாடி ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் சொல்லியிருப்பாரா என்று யோசித்துப்பாருங்கள். யாரையும் நியாயமற்ற முறையில் யாரும் விமர்சிக்கக் கூடாது.”