Published:Updated:

திண்டுக்கல்: `ஆளும்கட்சியினர் என்னைத் தரக்குறைவாகப் பேசுகின்றனர்!’ - கொதிக்கும் ஜோதிமணி எம்.பி

ஜோதிமணி
ஜோதிமணி

`சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கிறோம்’ என்ற பெயரில், மணல் கொள்ளையில் ஈடுபட ஆளும்கட்சியினர் திட்டமிட்டிருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார் கரூர் எம்.பி ஜோதிமணி.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகேயுள்ள ஆர்.கோம்பை சீலக்கரட்டுப் பகுதியில், 56 ஏக்கர் நிலத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. விவசாய நிலத்தின் அருகே, சிட்கோ தொழிற்பேட்டை அமைத்தால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அந்தப் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இதையறிந்த கரூர் எம்.பி ஜோதிமணி, சம்பவ இடத்துக்கு நேற்று வந்திருந்தார். குஜிலியம்பாறை தி.மு.க நிர்வாகிகளும் உடனிருந்தனர். சிட்கோ தொழிற்பேட்டைக்கான பாதை அமைக்கும் பணி அங்கே நடந்துவந்தது. ஜே.சி.பி இயந்திரம் மூலம், நிலத்தைச் சமன் செய்துகொண்டிருந்தனர். அதைப் பார்த்த ஜோதிமணி, ஜே.சி.பி இயந்திரம் முன் பொதுமக்களுடன் அமர்ந்து போரட்டம் நடத்தினார்.

ஜோதிமணி
ஜோதிமணி

இதையறிந்த குஜிலியம்பாறை அ.தி.மு.க கிழக்கு ஒன்றியச் செயலாளர் மலர்வண்ணன், தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து, ஜோதிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைக் கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள், ஜோதிமணிக்கு ஆதரவாகப் பேசி, மலர்வண்ணனையும் அவருடைய ஆதரவாளர்களையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

``குஷ்பு மாதிரியானவங்களுக்கு பா.ஜ.க ஏற்றதில்லை!" - ஜோதிமணி

தொடர்ந்து அங்கே வந்த காவல்துறையினர், எம்.பி ஜோதிமணியுடன் சமாதானம் பேசினர். ஜே.சி.பி இயந்திரத்தை நிலத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என ஜோதிமணி கோரிக்கைவைக்க, ஜே.சி.பி இயந்திரம் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டது.

ஜோதிமணி
ஜோதிமணி

இந்தநிலையில், இன்று திண்டுக்கல் வந்திருந்த எம்.பி.ஜோதிமணி, பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ``தரிசு நிலத்தில் சிட்கோ, சிப்காட் அமைக்கலாம். அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கலாம். அதற்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார். ஆனால், சீலக்கரட்டில் சிட்கோ தொழிற்பேட்டை என்ற பெயரில், ரூ.200 கோடி மதிப்புள்ள மண்வளத்தைக் கொள்ளையடிக்க ஆளும்கட்சியினர் முயன்ருவருகின்றனர். இதைத்தடுக்க வந்த என்னை தரக்குறைவாகப் பேசினார் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் மலர்வண்ணன். அவர்மீது புகார் கொடுக்கவிருக்கிறேன். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அனுமதியுடன், இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க முயன்றுவருகிறார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு