Published:Updated:

`கர்நாடக அரசைக் கலைப்பது ஒன்றையே பா.ஜ.க முக்கிய வேலையாகச் செய்துவருகிறது!' - ஜோதிமணி

துரை.வேம்பையன்
நா.ராஜமுருகன்

``கர்நாடகா காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணிக்கட்சி ஆட்சியை கலைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் அமித்ஷாவும் பிரதமர் நரேந்திர மோடியும் முயன்று வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது" என்று ஜோதிமணி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஜோதிமணி
ஆர்ப்பாட்டத்தில் ஜோதிமணி ( நா.ராஜமுருகன் )

கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் குழப்பத்துக்கு மத்திய பி.ஜே.பி அரசின் சர்வாதிகார போக்கே காரணம் எனக் கூறி, கரூர் காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் சின்னசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கமிட்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான ஜோதிமணி பேசுகையில், ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடகா காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணி ஆட்சியைக் கலைப்பதற்கு, அமித்ஷாவும் பிரதமர் நரேந்திர மோடியும் முயன்று வருகிறார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஜோதிமணி
ஆர்ப்பாட்டத்தில் ஜோதிமணி
நா.ராஜமுருகன்

ஏற்கெனவே மூன்று முறை இதுபோல ஆட்சியைக் கவிழ்க்க முயன்று தோல்வி அடைந்தது பாரதிய ஜனதா கட்சி. இந்தமுறையும் அவர்களின் முயற்சி தோல்வியையே தழுவும். தமிழகத்தில் மட்டுமல்ல, நாடெங்கிலும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. சிறுகுறு, நடுத்தரத் தொழில்கள் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நலிவடைந்துள்ளது. நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை 6.01 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. தவிர, இந்திய எல்லையில் சீனா அரசு ஆக்கிரமிப்பை அதிகரித்துள்ளது.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்...  ஐந்து ஆண்டுகளில் சாத்தியமா?

இந்தச் சூழ்நிலையில், இந்தியாவையும் இந்திய ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான பொறுப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பது ஒன்றே முக்கியமான வேலையாகச் செய்து வருவது, வெட்கப்படக்கூடியது. மிகவும் கண்டனத்துக்குரியது. மேலும், கர்நாடகாவில் எம்.எல்.ஏ ஒருவர் 100 கோடிக்கு விலை பேசப்படுகிறார். தனியாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார். இதற்கான பணம், வெள்ளை பணமா, டிஜிட்டல் இந்தியாவில் வந்த கறுப்புப் பணமா என்பதை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.

 ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

கறுப்புப் பணத்தை ஒழிப்போம் என்று கூறி, மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மோடி அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைக் கலைக்க முயல்வது, ஒரு ஜனநாயகப் படுகொலை. இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்கள் தக்க பதிலடி அளிப்பார்கள். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பில் தற்போது காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அந்தக் கடமையை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து நிச்சயம் செயல்படுத்துவோம்" என்றார்.