Published:Updated:

உள்ளாட்சி ரேஸ்: செந்தில் பாலாஜியின் தம்பி படை; வேலுமணி தந்த உறுதி! -கரூர் மாநகரின் முதல் மேயர் யார்?

கரூர் மாநகராட்சி

முதல் மாநகராட்சி மேயர் என்பதால், இரண்டு கட்சிகளும் அதை பிடிக்க கடும் யுத்தம் நடத்துகின்றன. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் சொந்த மாவட்டம் என்பதால், அவரும் கணிசமான வார்டுகளை கைப்பற்ற நினைக்கிறார். 41 வார்டுகளில் பா.ஜ.க களம் காண்கிறது.

உள்ளாட்சி ரேஸ்: செந்தில் பாலாஜியின் தம்பி படை; வேலுமணி தந்த உறுதி! -கரூர் மாநகரின் முதல் மேயர் யார்?

முதல் மாநகராட்சி மேயர் என்பதால், இரண்டு கட்சிகளும் அதை பிடிக்க கடும் யுத்தம் நடத்துகின்றன. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் சொந்த மாவட்டம் என்பதால், அவரும் கணிசமான வார்டுகளை கைப்பற்ற நினைக்கிறார். 41 வார்டுகளில் பா.ஜ.க களம் காண்கிறது.

Published:Updated:
கரூர் மாநகராட்சி

கரூர் மாநகராட்சி

தமிழகத்தின் மையத்தில் இருக்கும் கரூர், தொழில் நகரம். கொசுவலை உற்பத்தி, வீட்டு உபயோகத் துணி ஏற்றுமதி, பஸ்பாடி கட்டும் தொழில், ஃபைனான்ஸ்கள் என பல தொழில்கள் நடக்கும் மாவட்டம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நகரம், 1874 ஆம் ஆண்டு நகராட்சியாக மாற்றப்பட்து. அதன்பிறகு, சுமார் 100 வருடங்கள் கழித்து 1983 - ல் தேர்வுநிலை நகராட்சியாக மாற்றப்பட்டது.

கரூர் மாநகராட்சி
கரூர் மாநகராட்சி
நா.ராஜமுருகன்

1988 -ம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கரூர், கடந்த 2011 - ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான், தற்போதைய தி.மு.க அரசு ஆட்சி பொறுப்பேற்றதும், இதுவரை, சிறப்புநிலை நகராட்சியாக இருந்துவந்த கரூர், முதன்முறையாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செந்தில் பாலாஜி `மூவ்’

கரூர் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. கரூர் மாநகராட்சியாக ஆக்கப்பட்டிருக்கும் இந்த முதல் தேர்தலிலேயே மேயர் பதவி, பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கபட்டுள்ளது. இதற்கு காரணம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்கிறார்கள். அவரின் தம்பி அசோக்குமாரை மேயர் வேட்பாளர் ஆக்க நினைக்க, அது சர்ச்சையாகி, தலைமை வரை பஞ்சாயத்தானது. அதனால், ஆண்களுக்கு மேயர் ஒதுக்கீடு செய்தால், அதில் வெல்பவர் தனக்கு அரசியல் போட்டியாக வந்துவிடுவார் என்று கருதிய செந்தில் பாலாஜி, கரூர் மாநகராட்சியை பெண்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றும்படி பார்த்துகொண்டதாக சொல்கிறார்கள். இந்த நிலையில், மேயர் பதவி, 4 வது வார்டில் போட்டியிடும் கரூர் தி.மு.க வடக்கு மாநகரச் செயலாளர் கணேசனின் மனைவி கவிதா கணேசனுக்குதான் என்று அடித்து சொல்கிறார்கள்.

கவிதா கணேசன்
கவிதா கணேசன்
நா.ராஜமுருகன்

அதேநேரம், 22-வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க வேட்பாளர் பிரேமா சங்கர் என்பவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க, உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் வாங்கிகொள்ள, தேர்தல் நடக்கும் முன்பே மாமன்ற உறுப்பிரனாகியிருக்கிறார். அதனால், அவருக்கு தான் மேயர் சீட் என்று ஒரு தரப்பு சொல்கிறது. ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் யாரும் கணிக்காத புது வேட்பாளர்களை நிறுத்தி, தி.மு.கவினர்களுக்கு செந்தில் பாலாஜி அதிர்ச்சி கொடுத்தார். அதனால், இந்த மேயர் தேர்தலிலும், கடைசி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத எந்தவித பின்புலமும் இல்லாத பெண்மணியை மேயராக்குவார் என்கிறார்கள்.

அதேபோல், 12 வது வார்டில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியின் உதவியாளர் கிருத்திகா என்பவர் நிற்கிறார். அதே வார்டில் மஞ்சுளா பெரியசாமி என்கிற சுயேச்சை வேட்பாளரும் களம் காண்கிறார். இந்த நிலையில், 'மஞ்சுளாவை நிற்க வைத்ததே செந்தில் பாலாஜி தான். அவரை ஜெயிக்க வைத்து, தி.மு.கவில் இணைத்து, அவரை மேயராக்க நினைப்பதாகவும் சொல்றாங்க' என்று தி.மு.கவினர் கிசுகிசுக்கிறார்கள்.

அ.தி.மு.க பொறுத்தமட்டில், கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஜெயித்த ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய சேர்மன்கள் என பலரை, கேஸ் பயம் காட்டி கொத்துக்கொத்தாக தி.மு.கவில் இணைத்துக்கொண்டதாம் செந்தில் பாலாஜி தம்பி தலைமையிலான படை.

 பிரேமா சங்கர்
பிரேமா சங்கர்
நா.ராஜமுருகன்

அதேபோல், மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டால், தங்கள் மீதும் கேஸ் பாயும், தொழிலுக்கு குடைச்சல் கொடுப்பார்கள் என்ற பயத்தில், முக்கியத் தலைகள் யாரும் போட்டியிடவில்லை. இதனால், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்குள் திண்டாடிபோனாராம். அதனால், செல்வாக்கு இல்லாதவர்களும், புதுமுகங்களும் அதிக வார்டுகளில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒருவேளை அ.தி.மு.க வெற்றி வாகை சூடும்பட்சத்தில், 43 வது வார்டில் போட்டியிடும் முன்னாள் கவுன்சிலர் மாரியம்மாள் ராம்குமார் மேயராக்கப்படலாம் என்கிறார்கள். அதேபோல், 21 வது வார்டு வேட்பாளரான கமலாவும், மேயர் ரேஸில் கச்சைக் கட்டுகிறார்.

ஆனால், செந்தில் பாலாஜி கோவையில் மையம் கொண்டிருப்பதால், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி செம கோபத்தில் இருக்கிறாராம். அ.தி.மு.க கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தொடர்புகொண்டு, 'கரூர் மாநகராட்சியை கைப்பற்றுங்க. அதுக்கு என்னாலான உதவியை பண்றேன். கோவையில் மட்டுமல்ல, கரூரிலேயே செந்தில் பாலாஜியை செல்லாக்காசாக்கணும்' என்று சொல்லியிருக்கிறாராம். கட்சி தலைமையும் இதையே சொல்லியுள்ளதால், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேட்பாளர்களை நாலுகால் பாய்ச்சலில் முடுக்கிவிட்டுள்ளாராம். அ.ம.மு.கவில் இருந்து தன்னோடு வந்தவர்களுக்கும், கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கும் செந்தில் பாலாஜி சீட் கொடுத்திருப்பதாகச் சொல்லி, தி.மு.க முக்கியப் புள்ளிகள் புகைச்சலில் உள்ளனர்.

 மாரியம்மாள் ராம்குமார்
மாரியம்மாள் ராம்குமார்
நா.ராஜமுருகன்

அதேபோல், காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 2 வார்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்னியூஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில், தி.மு.க வை சேர்ந்தவர்கள் களம் காண்பது, கூட்டணி கட்சியினரையும் புலம்ப வைத்துள்ளது. இதெல்லாம் தி.மு.க -வுக்கு மைனஸ். அ.தி.மு.கவை பொறுத்தமட்டில், கேஸ் பயத்தால் முக்கிய நபர்கள் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கிகொண்டதாக சொல்லப்பட, அதிக வார்டுகளில் புதுமுகங்களே போட்டியிடுகின்றனர். இந்த அ.தி.மு.கவுக்கு சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் மாநகராட்சி - சவால்கள்!

நகராட்சியாக இருந்தபோதே, போதிய நிதியில்லாமல் கரூர் நகராட்சியோடு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இணைக்கப்பட்ட சணப்பிரட்டி உள்ளிட்ட பகுதிகளில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், மாநகராட்சி தரப்பில் விசாரித்தால், "இப்போதைக்கு நிதிநிலைமை சொல்லிக்கொள்ளும்படி இல்லைதான். ஆனால், மாநகராட்சியானதால் வரிகள் மூலம் தேவையான நிதியை திரட்ட முடியும்' என்று சொல்கிறார்கள். கரூர் மாநகரத்துக்கு நடுவில் அமராவதி ஆறு ஓடுகிறது. ஆனால், காலம்காலமாக இருக்கும் சாயப்பட்டறை கழிவுகள், சாக்கடை கழிவுகளை அந்த ஆற்றில் கலக்கும் பிரச்னைக்கு முடிவு வந்தபாடில்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் விஷமாகி, குடிநீர் பிரச்னை நிலவுகிறது. காந்தி கிராமம் உள்ளிட்டப் பகுதிகளில் 6 நாளைக்கு ஒருமுறையும், வடக்கு காந்தி கிராமம் உள்ளிட்டப் பகுதியில் 15 நாள்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகம் நடக்கிறதாம்.

குப்பைகளால் சூழ்ந்த அமராவதி ஆறு
குப்பைகளால் சூழ்ந்த அமராவதி ஆறு
நா.ராஜமுருகன்

தற்போதைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி, வெறும் ஜி.ஓ நிலையிலேயே உள்ளது. அதேபோல், கரூர் மாநகருக்குள் செல்லும் இரட்டை வாய்க்கால், சாக்கடை கழிவுகளால் நாறிக்கொண்டிருக்கிறது. அதை தூர் வாருவதாக பலமுறை சொல்லி, அப்படியே விட்டுவிட்டார்கள். அதேபோல், அமராவதி தென்கரையில் உள்ள ராஜவாய்க்காலும், மோசமாக உள்ளது. தற்போது, மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. ஆனால், 28 வார்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் முறையாக இல்லை. ரிங்ரோடு அமைக்கும் பணி பல ஆண்டுகளாக பாதியிலேயே நிற்கிறது.

முதல் மாநகராட்சி மேயர் என்பதால், இரண்டு கட்சிகளும் அதை பிடிக்க கடும் யுத்தம் நடத்துகின்றன. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் சொந்த மாவட்டம் என்பதால், அவரும் கணிசமான வார்டுகளை கைப்பற்ற நினைக்கிறார். 41 வார்டுகளில் பா.ஜ.க களம் காண்கிறது. தி.மு.கவில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், கரூர் மாநகராட்சியை தி.மு.க கைப்பற்ற பல வியூகங்களை வகுத்து வருகிறார்.

வேட்பாளர் தரப்பில், கட்சி சார்பில் என வாக்காளர்களுக்கு வைட்டமின்கள் கொடுக்க ஃபிக்ஸ் செய்திருக்கிறார்களாம். இதுபோக, விலை உயர்ந்த புடவை, வேட்டி, தட்டு, வெள்ளி மூக்குத்தி, சில்வர் குடம், தட்டு என்ற பேக்கேஜ் அடங்கிய பொருள்களை ஒரு குடும்பத்துக்கு ஒன்று வீதம் வழங்கயிருப்பதாக தகவல்கள் பறக்கிறது.

சாக்கடை செல்லும் வாய்க்கால்
சாக்கடை செல்லும் வாய்க்கால்
நா.ராஜமுருகன்

அ.தி.மு.க தரப்பிலும் வைட்டமின்கள் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்களாம். எனினும் ஆளும் தரப்பு அளவுக்கு செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்களாம். கடைசி நேரத்தில் தொகை கூடலாம் என்றும் சொல்கிறார்கள். தி.மு.க போல் 'பேக்கேஜ்' தரவும் சில வேட்பாளர்கள் நினைக்கிறார்களாம். ஆககூடி, இப்போதைய நிலவரப்படி, வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, பவர், பணபலம், பிரசார வியூகம் உள்ளிட்ட விசயங்களை முன்னிறுத்தி பார்க்கும்போது, கரூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் உதயசூரியனே சற்று பிரகாசிக்கிறது!