Published:Updated:

கரூர்: முதல்வர் வருகையால் 5-வது முறையாக ஒத்திவைக்கப்பட்ட ஊராட்சிக்குழுத் தேர்தல் - கொதிக்கும் அதிமுக

அ.தி.மு.க மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள்

முதல்வர் வருகையால் மாவட்ட ஊராட்சிக்குழுத் தேர்தல் 5-வது முறையாகத் தள்ளிவைக்கப்பட்டதற்கு அதிமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

கரூர்: முதல்வர் வருகையால் 5-வது முறையாக ஒத்திவைக்கப்பட்ட ஊராட்சிக்குழுத் தேர்தல் - கொதிக்கும் அதிமுக

முதல்வர் வருகையால் மாவட்ட ஊராட்சிக்குழுத் தேர்தல் 5-வது முறையாகத் தள்ளிவைக்கப்பட்டதற்கு அதிமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

Published:Updated:
அ.தி.மு.க மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவி, துணைத் தலைவர் பதவிகளை அ.தி.மு.க கைப்பற்றியிருந்தது. மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராக, அ.தி.மு.க-வைச் சேர்ந்த தானேஷ் என்கிற முத்துக்குமார் பதவி வகித்துவந்தார். இந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தானேஷ், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, போட்டியிட்டதன் காரணமாக கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், துணைத் தலைவர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தார். அந்தத் தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவியதால், மீண்டும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலின்போது, அ.தி.மு.க சார்பில் முத்துக்குமார் போட்டியிட்டார். ஆனால், தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்ட, கண்ணையன் வெற்றிபெற்றார். இதற்கிடையே, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களின் மொத்தமுள்ள எண்ணிக்கையான 12-ல், அ.தி.மு.க., தி.மு.க தலா ஆறு உறுப்பினர்களை வைத்திருந்தன. இந்த நிலையில், கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் போதிய உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது.

அ.தி.மு.க கவுன்சிலர்களோடு எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அ.தி.மு.க கவுன்சிலர்களோடு எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இந்த நிலையில், ஐந்தாவது முறையாக நேற்று தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு ஆறு அ.தி.மு.க கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு, கரூர் மாவட்ட ஆட்சியரிடமும், ஏ.டி.எஸ்.பி கண்ணனிடமும் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார், அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளரான எம்.ஆர்.விஜயபாஸ்கர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர், ``அ.தி.மு.க கவுன்சிலரை மிரட்டி பொய் கேஸ் போட்டு, தி.மு.க-வுக்கு இழுக்கப் பார்க்கிறாங்க. அதோடு, எங்க கவுன்சிலரை நான் கடத்தி வைத்திருப்பதாக பொய்ப் புகார் கொடுத்து, என்னைக் கைது பண்ணப்போறதா சொல்றாங்க. நாங்க யாரையும் கடத்தவில்லை. அ.தி.மு.க சார்பில் நின்று வென்ற ஆறு பேரும் இங்கே இருக்கின்றனர். அவர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். கரூரில் தி.மு.க அராஜகத்தில் ஈடுப்பட்டுவருகிறது. பவரைவைத்து ஆட்டம் போடுகிறார்கள். நாளை அமைதியாகத் தேர்தல் நடைபெற எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்'' என்றார்.

அதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதாவது, தமிழக முதலமைச்சர் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்துக்கு வருகைதரவிருப்பதாலும், பாரத பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்துக்கு நவம்பர் 11-ம் தேதி வருகைதரவிருப்பதாலும், பாதுகாப்புப் பணிகள் மிக விரிவாக கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மேற்கொள்ளப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இடையே மோதல் ஏற்படக்கூடும் என்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் கருத்தில்கொண்டு, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் உத்தரவின்பேரில் மீண்டும் ஐந்தாவது முறையாக மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவர் மறைமுகத் தேர்தல் நேற்று ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே, அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் கண்ணதாசன் தலைமையில் உறுப்பினர்கள் ஐந்து பேர், மறைமுகத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கூட்ட அரங்கத்துக்கு முன்பு அமர்ந்து, சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு, அ.தி.மு.க உறுப்பினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அ.தி.மு.க மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள்
அ.தி.மு.க மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள்

தேர்தல் நடைபெறுவதாக இருந்த கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஐயபாஸ்கர், "மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவர் தேர்தல் திடீரென ஒத்திவைக்கப்பட்டதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜிதான் காரணம். அராஜகத்தின் மூலம் இந்தத் தேர்தலை தங்களுக்குச் சாதகமாக நடத்தப் பார்க்கின்றனர். அது முடியாததால், தள்ளிவைத்திருக்கின்றனர். நீதிமன்றம் மூலம் மறைமுகத் தேர்தலை நடத்தக் கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இந்த முறை மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களை மிரட்டி, தி.மு.க-வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க முயல்கின்றனர். கடந்த இரண்டு நாள்களாக அவர்கள்மீது பொய் வழக்குகள் போட்டு, காவல்துறையை ஏவிவிட்டு, தி.மு.க-வினர் கரூர் மாவட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்டனர். எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்" என்றார்.