Published:Updated:

'காசி தமிழ் சங்கமம்' - தமிழ்நாட்டில் கிளம்பிய எதிர்ப்பும் பாஜக பதிலும்!

காசி தமிழ் சங்கமம்

வாரணாசியில் நடக்கும் காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதற்கு பாஜக தரப்பின் பதில் என்ன?!

'காசி தமிழ் சங்கமம்' - தமிழ்நாட்டில் கிளம்பிய எதிர்ப்பும் பாஜக பதிலும்!

வாரணாசியில் நடக்கும் காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதற்கு பாஜக தரப்பின் பதில் என்ன?!

Published:Updated:
காசி தமிழ் சங்கமம்

தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் இடையே கலாசார உறவுகளை மேம்படுத்தும் வகையில் `காசி - தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சிகள் கடந்த 16-ம் தேதி வாரணாசியில் தொடங்கியது. இது குறித்து முன்னதாகப் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ``வாரணாசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான ஆழமான கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே காசி-தமிழ் சங்கமத்தின் நோக்கம். இந்த நிகழ்ச்சியின் அறிவுசார் பங்குதாரர்களாகச் சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் செயல்படும்.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 2,500 பேர் கலந்துகொள்வார்கள். இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம். இரண்டு வரலாற்று மையங்கள் மூலம் இந்தியாவின் நாகரிக சொத்துகளில் உள்ள ஒற்றுமையைப் புரிந்துகொள்ள இது ஒரு சிறந்த தளமாக இருக்கும். தமிழ்நாடு மற்றும் வாரணாசி இடையேயான பரந்த உறவின் நோக்கம், இரு அறிவு மற்றும் கலாசார மரபுகளை நெருக்கமாகக் கொண்டுவருவது, நமது பகிரப்பட்ட பாரம்பர்யம் பற்றிய புரிதலை உருவாக்குவது, இரு பகுதி மக்களுக்கு இடையேயான பிணைப்பை ஆழமாக்குவது ஆகியவை ஆகும்" என்றார்.

'காசி தமிழ் சங்கமம்' - தமிழ்நாட்டில் கிளம்பிய எதிர்ப்பும் பாஜக பதிலும்!

இதன்படி தொடங்கிய நிகழ்ச்சி அடுத்த மாதம் 16-ம் தேதிவரை ஒரு மாத காலத்துக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாட்டிலிருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 2,000-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்கிறார்கள். இந்த நிலையில், காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி 19-ம் தேதி (இன்று) முறைப்படி தொடங்கிவைக்கிறார். மறுபுறம் இந்த நிகழ்ச்சிக்குத் தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், "ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழ்நாட்டில் மிக முக்கியக் கல்வி நிலையங்களிலுள்ள மாணவர் மத்தியில், ஊடுருவும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருக்கிறது. சென்னை ஐஐடி-யில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, தற்போது செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இது மாநில உயர்கல்வித்துறை அல்லது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறையில் விவாதிக்கப்படவில்லை. மாநில அரசின் எந்த ஒரு பங்களிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. மாநில அரசும் இத்தகைய நிகழ்ச்சி மீது எந்த ஒரு கருத்தும் வெளியிடாதது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆள்பிடிக்கும் நோக்குடன் நடைபெறும் இந்த காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி உண்மையில் கலாசாரம், இதர நல்லெண்ண நிகழ்வுகளுக்காக அல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

இந்த வகுப்புவாத நோக்கிலான நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த கல்வித்துறையும், தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறையும், தமிழ்நாடு அரசும் உரிய தலையீடு செய்ய வேண்டும். இதர ஜனநாயக சக்திகளும் இந்த நிகழ்ச்சி பாதிப்பை உணர்ந்து, தடுத்து நிறுத்தும் வகையில் செயலாற்ற சிபிஐ (எம்) மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது’’ என்று பதிவிட்டிருக்கிறார். இதேபோல் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "இந்த நிகழ்ச்சி ஆர்.எஸ்.எஸ்-ஸின் கொள்கையைப் போன்றுதான் இருக்கிறது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. தேசியம், தெய்விகம் என்ற இரண்டும்தான் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை. ஆனால் தேசியமும் கூடாது, தெய்விகமும் கூடாது என்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கை.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

அவர்கள் இப்படிப் பேசுவது ஒன்றும் வியப்பளிக்கவில்லை. இந்த நாட்டின் கலாசாரம், பண்பாடு, தொன்மை இவையெல்லாவற்றையும் இணைக்கக்கூடிய காசி மற்றும் ராமேஸ்வரத்தை நாம் இணைப்பது கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கவலை தரத்தான் செய்யும். அது குறித்து நாங்கள் கவலைகொள்ளவில்லை. இவர்கள், சீனாவில் இந்த நிகழ்ச்சியை நடத்தியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்கள்" என்றார்.