Published:Updated:

வாரணாசியில் `காசி தமிழ்ச் சங்கமம்’ - பாஜக-வுக்குக் கிடைத்த அரசியல் லாபம் என்ன?

'காசி தமிழ்ச் சங்கமம்' நிகழ்ச்சி

``அரசியல் லாபம் என்ன என்பது வருகிற தேர்தலில்தான் தெரியும்.” - மூத்த பத்திரிகையாளர் பிரியன்.

வாரணாசியில் `காசி தமிழ்ச் சங்கமம்’ - பாஜக-வுக்குக் கிடைத்த அரசியல் லாபம் என்ன?

``அரசியல் லாபம் என்ன என்பது வருகிற தேர்தலில்தான் தெரியும்.” - மூத்த பத்திரிகையாளர் பிரியன்.

Published:Updated:
'காசி தமிழ்ச் சங்கமம்' நிகழ்ச்சி

இந்திய விடுதலையின் 75-ம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் 'விடுதலையின் அமுதப் பெருவிழா'-வின் ஓர் அங்கமாக 'காசி தமிழ்ச் சங்கமம்' நிகழ்வை உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் இந்திய அரசு ஒரு மாத காலம் நடத்தி முடித்திருக்கிறது. நவம்பர் 17 தொடங்கிய இந்த நிகழ்வு, டிசம்பர் 16-ல் முடிவுற்றிருக்கிறது. வாரணாசியில் இந்திய கல்வி அமைச்சகம் நடத்திய இந்த ஒரு மாத கால நிகழ்வு நவம்பர் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் முறைப்படி தொடங்கிவைக்கப்பட்டது. தொடக்கவிழாவில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இளையராஜா
இளையராஜா

தொடக்கவிழா நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி., "காசியில் நடைபெற்றுவரும் தமிழ்ச் சங்கமம் விழாவை எண்ணி வியந்து மகிழ்கிறேன். வாரணாசியில் பாரதியார் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். காசியில் தமிழ்ச் சங்கமம் நடைபெற யோசனை செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி" என்றார். அதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரின் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கடுத்து, "வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு" என்று தனது உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, "காசியும் தமிழ்நாடும் கலாசாரத்தில் சிறந்து விளங்குகின்றன. காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் நீண்ட பந்தம் இருக்கிறது. காசியை வளர்த்ததில் தமிழர்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்தச் சங்கமமே சாட்சி. காசிக்கு துளசிதாசர் என்றால், தமிழகத்துக்குத் திருவள்ளுவர்" என்றார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம்

கடந்த ஒரு மாதமாக தமிழகத்திலிருந்து பிரதிநிதிகள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் கருத்தரங்குகள், விவாத அரங்குகள், கலாசார-பாரம்பர்ய நிகழ்ச்சிகள், கோயில் தரிசனங்கள் எனப் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். இவ்வாறாக நடந்து முடிந்த ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்வின் இறுதி நிகழ்ச்சி பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் , கலாசாரத்துறை அமைச்சர் கிஷான் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய அமித் ஷா, ‘உலகின் முதல்மொழி தமிழ் என்பதை வாரணாசி மட்டுமல்லாமல் வடஇந்தியாவின் பல்வேறு பகுதி மக்களும் தெரிந்துகொண்டனர்’ என்றார். தமிழக ஆளுநர் ரவி தனது உரையைத் தமிழில் தொடங்கினார். காசி தமிழ்ச் சங்கமம் நிறைவுவிழாவை சென்னை ஐஐடி-யும், வாரணாசியிலுள்ள பனாரஸ் ஹிந்துப் பல்கலைக்கழகமும் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளைச் செய்தன.

’காசி தமிழ்ச்  சங்கமம்’ அமித் ஷா, எல்.முருகன், அண்ணாமலை
’காசி தமிழ்ச் சங்கமம்’ அமித் ஷா, எல்.முருகன், அண்ணாமலை
Twitter

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வை ஒட்டி ‘இது தமிழ்நாட்டுக்கும் வாரணாசிக்கும் இருக்கும் நீண்டகாலப் பண்பாட்டுத் தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சி’ என ஒரு தரப்பினரும், ‘மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்கள், போட்டித் தேர்வுகள், அலுவல்பூர்வ தொடர் பாடல்கள் உள்ளிட்டவற்றில் இந்தியை முன்னிறுத்தும் நரேந்திர மோடி அரசு தமிழை வைத்து பாரதிய ஜனதா கட்சிக்கு அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக’ இன்னொரு தரப்பினரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதோடு, பாஜக அரசின் `ஒரே நாடு, ஒரே கல்விக் கொள்கை’யின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது என பாரதிய பாஷா சமிதி தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

பிரியன்
பிரியன்

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பிரியன், “அரசியல் லாபம் என்ன என்பது வருகிற தேர்தலில்தான் தெரியும். தமிழுக்குத் தாங்கள் ஆர்வம் காட்டுவதுபோலவும், அதன் வளர்ச்சிக்கு ரொம்ப ஈடுபாடு காட்டியது மாதிரியும் தோற்றத்தைக் கொடுத்தார்கள். ஆனால், தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான கருத்தரங்கோ, அதற்கான தமிழ் அறிஞர்களோ அங்கு யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது அடிப்படையான விஷயம். எனவே, பா.ஜ.க தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கான விழாவாகத்தான் இந்தத் தமிழ்ச் சங்கமம் நடந்து முடிந்திருக்கிறது” என்றார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

“வெளிப்படையாக மக்கள் பங்கேற்போடு நடந்த இந்த விழா, இதற்கு கிடைக்கிற வரவேற்பைப் பார்த்து இந்த மாதிரி விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்” என்கிறார் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன். மேலும் தொடர்ந்தவர், “உண்மையான தமிழர்கள் அவர்கள் மட்டுமல்ல; நாங்களும் உண்மையான அக்மார்க் தமிழர்கள்தான். `ஒரே இந்தியா உன்னத இந்தியா’ என்கிற திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது. காசிக்கும் தமிழகத்துக்கும் வரலாற்றுரீதியாக, இலக்கியரீதியாகத் தொடர்புகள் நிறைய உண்டு. அதேபோல் ஆன்மிகரீதியாகப் பார்த்தால் காசிக்கும், பல தமிழ் மடங்களுக்கும் தொடர்புகள் இருந்திருக்கின்றன; இப்போதும் இருக்கின்றன. இந்துக்களுக்கு காசி என்பது மிகப்புனிதமான ஸ்தலம். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாருங்கள் என பிரதமர் அழைத்தார். யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவோ, கட்சிக்காரர்களை வைத்தோ, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முன்னெடுத்தோ இந்த நிகழ்வு நடக்கவில்லை. எனவே, இதன் மூலமாகத்தான் தமிழக பாஜக அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்கிற நிலையும் இல்லை” என்றார்.