Published:Updated:

மூன்றே நாளில் இரண்டான காஷ்மீர்!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

அமித் ஷா அதிரடி பின்னணி

மூன்றே நாளில் இரண்டான காஷ்மீர்!

அமித் ஷா அதிரடி பின்னணி

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

கடந்த மூன்று நாள்களாக மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கைகள், காஷ்மீரை இரண்டாகப் பிரித்து... நாடு முழுவதும் எதிர்ப்பும் ஆதரவுமாக பலத்த அதிர்வுகளை கிளப்பியிருக்கின்றன. இந்த நடவடிக்கைகள், சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளன; அதேசமயம், `காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துமா... கிளர்ச்சியைத் தூண்டுமா?’ என்ற கேள்வியையும் எழுப்புகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆகஸ்ட் 5-ம் தேதி... அன்றைய தினமே பதற்றத்துடன்தான் விடிந்தது. முந்தைய நாள் நள்ளிரவே காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார்கள். ராணுவத் துருப்புகள் அதிகரிக்கப்பட்டன.

அமித் ஷா
அமித் ஷா

சரியாக காலை 9 மணிக்கு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் கூட்டப்பட்டது. கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு முகமைத் தலைவர் அஜித் நோவல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாணவர் அமைப்பினர் போராட்டம்
மாணவர் அமைப்பினர் போராட்டம்

அடுத்த இரண்டு மணிநேரத்தில் ராஜ்ய சபாவில் பேசிய அமீத் ஷா, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 370 மற்றும் சட்டப் பிரிவு 35-ஏ ஆகியவற்றை ரத்துசெய்வதாக அறிவித்தார். தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து ஆகஸ்ட் 7-ம் தேதி நாடாளுமன்றத்தில் மோடி பேசுவார் என்றும் தெரிகிறது. இதன்படி மாநில அந்தஸ்தை ஜம்மு காஷ்மீர் இழந்து, யூனியன் பிரதேசமாகியுள்ளது. ஆனால், அங்கு சட்டமன்றம் செயல்படும். அதன் ஆறாண்டு ஆட்சியுரிமை, ஐந்தாண்டு ஆக்கப்பட்டிருக்கிறது. லடாக், காஷ்மீரிலிருந்து பிரிக்கப்பட்டு, சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக்கப் பட்டுள்ளது. இனி, இந்தியாவின் அனைத்து சட்டதிட்டங்களும் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். இதற்கான அறிகுறிகள் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பே கசிந்துவிட்டாலும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவகாசமே கொடுக்காமல் மசோதாவை பி.ஜே.பி நிறைவேற்றிய வேகம்தான் எதிர்க்கட்சிகளைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

மோடி
மோடி

மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மசோதாவின் நகல்களைக் கிழிக்க முயற்சி செய்த பி.டி.பி கட்சியின் எம்.பி-க்கள் மிர் ஃபயாஸ், நஸீர் அஹமது ஆகியோர் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மாநிலங்களவையில் இதைக் கடுமையாக எதிர்த்த வைகோ, “இன்றைய நாள், ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள். இது எமர்ஜென்ஸி” என்றார். அதற்கு பதில் அளித்த வெங்கய்ய நாயுடுவோ, “இது எமர்ஜென்ஸி அல்ல... அர்ஜென்ஸி” என்றார். அதேசமயம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னணி என்ன?

தற்கான அடித்தளத்தை, மோடியும் அமித் ஷாவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே போட்டுவிட்டனர். பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையிலும், ‘காஷ்மீரின் வளர்ச்சிப் பாதையில் குறுக்கிடும் அனைத்து தடைகளையும் உடைத்தெறியவும், அதன் அனைத்து பிராந்தியங்களுக்கும் போதுமான நிதி ஆதாரங்களை வழங்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதற்குத் தடையாக இருப்பது 370, 35-ஏ பிரிவுகள்தான். காஷ்மீர் பண்டிதர்கள் பாதுகாப்பாக மாநிலத்துக்குத் திரும்புவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம். மேற்கு பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாம்ப் பகுதிகளிலிருந்து அகதிகளாக வரும் பண்டிதர்களை மீள்குடி அமர்த்துவதற்கான நிதி உதவியும் நாங்கள் வழங்குவோம்’ என்று கூறியிருந்தனர். அப்போது அதைப் பற்றி யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

போராட்டத்தில் காஷ்மீர் மக்கள்
போராட்டத்தில் காஷ்மீர் மக்கள்

அதேசமயம் 370, 35-ஏ பிரிவுகள் தொடர்பாக பல்வேறு ரிட் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக்கிடக்கின்றன. காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப் பட்டால்தான் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவைக் கொண்டுவர முடியும். அதனாலேயே, காஷ்மீரில் கவர்னர் ஆட்சி வரும் வரை, இந்த வழக்குகளை ஒத்திப்போட்டு வாய்தா வாங்கிவந்தது மத்திய அரசு. இதற்காகவே மோடியும் அமித் ஷாவும் காத்திருந்தனர். அதற்கேற்ற சூழலும் இப்போது வாய்த்தது. கடந்த ஜூலை 31-ம் தேதி மோடி மற்றும் அமித் ஷா இருவரும் சந்தித்து, நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடரிலேயே காஷ்மீர் தொடர்பான சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார்கள். தொடர்ந்து அங்கு இருந்தே இதுகுறித்த உத்தரவு மத்திய உள்துறைச் செயலருக்குச் சென்றது.

மறுநாள் ஆகஸ்ட் 1-ம் தேதி அன்றே அமர்நாத் யாத்திரிகர்களை வெளியேற்ற உத்தரவிட்டது மத்திய அரசு. முதலில் காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரிக்கவே திட்டமிட்டது பி.ஜே.பி. ஆனால், மத்திய உள்துறைச் செயலாளர் தரப்பிலிருந்து, ‘ஜம்முவில் இந்துக்களும் காஷ்மீரில் முஸ்லிம்களும் அதிகமாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் மூன்றாகப் பிரித்தால் அது ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்து - முஸ்லிம்கள் இடையே கலவரமாக வெடிக்கும்’ என்று சுட்டிக்காட்ட... மூன்றாகப் பிரிக்கும் திட்டம் கைவிடப்பட்டு, இரண்டாகப் பிரிக்க முடிவுசெய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தலைமையின் பரிந்துரையின்படி, பி.ஜே.பி-யின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளராக, கர்நாடகத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் வந்த பிறகே மேற்கண்ட நடவடிக்கைகள் வேகமெடுத்தன.

வளர்ச்சி, வேலைவாய்ப்பு மேம்படுமா?

த்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் காஷ்மீர் மாநிலத்தில் செல்வாக்கு பெற்றுள்ள மாநில அரசியல் கட்சிகளுக்கும், அந்த மாநிலத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடிவரும் பிரிவினைவாதிகளுக்கும் சிக்கல் ஏற்படும். `ஒரே பிரதேசம் இரண்டாக உடைந்தால், எந்தப் பகுதிக்காகப் போராட முடியும்?’ என்கிற கேள்வி எழும். தவிர, அந்த மாநிலத்தில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளும் பிரியும். காஷ்மீரில் பல ஆண்டுகளாக நீடித்துவரும் பிரச்னைக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.

காஷ்மீரில் குவிக்கப்பட்ட ராணுவத்தினர்
காஷ்மீரில் குவிக்கப்பட்ட ராணுவத்தினர்

இதுகுறித்து பி.ஜே.பி சார்பில் பேசுபவர்கள், “உலகம் முழுவதுமே தேசியவாதமும் பாதுகாப்புவாதமும் தலைதூக்கிவருகின்றன. இஸ்ரேலின் பாலஸ்தீனம் மீதான நிலைப்பாடு, இலங்கையின் தனி ஈழம் மீதான நிலைப்பாடு, மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான நிலைப்பாடு, சீனாவின் திபெத் நிலப்பகுதி மீதான மற்றும் ‘உய்குர்’ பகுதி முஸ்லிம்கள் மீதான நிலைப்பாடு... இவையெல்லாம் தேசியவாதத்தையும் தங்கள் நாட்டின் பெரும்பான்மையினர் மீதான ஆதரவு நிலைப்பாட்டையுமே முன்வைக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் பலவும் தங்கள் நாடுகளில் அகதிகளுக்கான கதவுகளை அடைத்ததையும் இங்கே பொருத்திப்பார்க்கலாம். ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிப்பதாகக் கூறும் அமெரிக்காவும்கூட பாதுகாப்பு வாதத்தை முன்னிறுத்தி, குடியேறிகளிடம் கடுமையாக நடந்துகொள்கிறது. நாட்டின் தேசியவாதத்தைக் காக்க அண்டைநாடுகளான மெக்ஸிகோ மற்றும் ஹோண்டுராஸ் மீதும் கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

மூன்றே நாளில் இரண்டான காஷ்மீர்!

இந்தச் சூழலில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கைகள் எல்லாம் ஒன்றுமேயில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு நம் நாட்டில் தனிநாடாக இயங்கிய மாநிலங்களை, இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால்தான் இணைத்தோம். ஹைதராபாத், ராணுவ நடவடிக்கை மூலமாகவே இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதம், துப்பாக்கிமுனையில்தான் ஒடுக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா மட்டுமே மண்ணின் மைந்தர்களுக்கு வருவாய் கொடுத்துவந்தது. ஆனால், 1980-களுக்கு மத்தியில் அங்கு தலைதூக்கிய பயங்கரவாதத்தால் நிலைமை தலைகீழாக மாறிப்போனது. இதன் பின்னணியில் அரசு மற்றும் ராணுவத்தினரின் அடக்குமுறைகளும் அதிகரித்தன. இதையெல்லாம் சரிசெய்யும்விதமாகவே மத்திய பி.ஜே.பி அரசு இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இதனால் காஷ்மீரின் அமைதி, சுற்றுலா உள்ளிட்ட தொழில்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும்” என்கிறார்கள்.

கலவர பூமியாகுமா காஷ்மீர்?

னால், எதிர்க்கட்சிகள் தரப்பிலோ, “மத்திய அரசின் இந்த நடவடிக்கை, காஷ்மீரை நிரந்தரமான கலவர பூமியாக மாற்றிவிடும். பிரிவினைவாதக் குழுக்கள் அதிகரிக்கும். பாகிஸ்தான் இந்த நிலைப்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. எனவே, பிரிவினைவாதக் குழுக்களுக்கு அந்த நாட்டிலிருந்து நிதியுதவி வருவதும் அதிகரிக்கும். இதுநாள் வரை காஷ்மீர் மாநிலம் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. அரசு வேலைவாய்ப்புகளும் அவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன. அதனாலேயே அவ்வப்போது எழும் கல்வீச்சுச் சம்பவங்களையும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்தது. சொந்த மண்ணும் வேலைவாய்ப்புகளும் தாரைவார்க்கப்பட்டால், கல்வீச்சுச் சம்பவங்களை இனி கட்டுப்படுத்த முடியாது.

காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனை
காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனை

வெளியாள்களை காஷ்மீரில் நிலம் வாங்க அனுமதிக்காததால் மட்டுமே அந்த நிலம் பாழ்படாமல் இயற்கைவளங்களுடன் அதன் பேரழகை இழக்காமல் இருக்கிறது. எனவே, எதிர்காலத்தில் காஷ்மீரில் அமைதி திரும்பினாலும் அதன் அடையாளமாக இருக்கும் இந்த இயற்கைப் பேரழகு மட்டுமே சுற்றுலா வருவாயைக் கொடுக்கும். மாறாக, ``காஷ்மீரில் அனைவரும் தொழில் செய்யலாம்; நிலங்களை வாங்கிக் குவிக்கலாம்’ என்றால், காஷ்மீரின் கணிசமான இடங்களை, பன்னாட்டு பெரும்நிறுவனங்கள் வளைத்துப்போடும். சுற்றுலா வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் அனைத்தும் கான்கிரீட் கட்டடங்கள் ஆகும். எதிர்காலத்தில் நிலக்கரி, ஹைட்ரோ கார்பன் போன்ற கனிமவளங்களுக்காக காஷ்மீர் சூறையாடப்பட்டாலும் ஆச்சர்யமில்லை’’ என்று சொல்பவர்கள், ‘`நாடு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளது. பெரியளவில் வளர்ச்சியில்லை. உன்னாவ் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட விவகாரங்கள் பி.ஜே.பி-க்கு எதிராக உள்ளன. இவற்றை யெல்லாம் திசைதிருப்பவே காஷ்மீர் விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்’’ என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.

மோடியின் காஷ்மீர் மீதான அதிரடி ஆபரேஷன் காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துமா, கிளர்ச்சிகளைத் தூண்டிவிடுமா என்று, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முதல்முறையாக நிறுத்தப்பட்ட யாத்திரை!

டந்த 2008-ல் ஹர்கத் உல் அன்சர் தீவிரவாத குழு வெளிப்படையாக யாத்திரிகர்களைத் தாக்குவதாக அறிவித்தபோதும், 2010-ம் ஆண்டில் பதற்றம் நிலவியபோதும்கூட அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படவில்லை. 2016-ல் புர்ஹன் வாணி கொல்லப்பட்டபோதுகூட யாத்திரை தொடர்ந்தது. காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை நிறுத்தப்படுவது இதுதான் முதல்முறை.

இரும்புத்திரை!

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, வரலாறு காணாத நெருக்கடியை காஷ்மீர் மக்கள் சந்தித்துவருகிறார்கள். இன்டர்நெட் வசதி முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி, அலைபேசி இணைப்புகளும் சரிவர இயங்கவில்லை. மாநிலம் முழுவதுமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களுக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் நிலவரத்தை அறிய அங்கு இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டோம். “பிறகு பேசுகிறேன்” என்று தொடர்பைத் துண்டித்துவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக எதுவும் பேசக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் இரும்புத்திரைகொண்டு காஷ்மீரத்தை மூடிவிட்டது பி.ஜே.பி!

மூன்றே நாளில் இரண்டான காஷ்மீர்!

ந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ``காஷ்மீர் நிலவரத்தால் பிராந்திய அளவில் கடும் நெருக்கடி ஏற்படும். காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தையை மூன்றாவதாக ஒருவர் மத்தியஸ்தம் செய்வதே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வழிவகுக்கும். மேலும், இந்த விஷயத்தில் இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்திய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ராணுவம் அதிகளவில் குவிக்கப்படும் சூழலில் ட்ரம்ப் கூறியபடி பேச்சுவார்த்தையை நடத்த, இதுவே சிறந்த தருணம்” என்று சொல்லியிருக்கிறார்.

370 - என்ன சொல்கிறது?

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 என்பது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தற்காலிக சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ளது.

அதன் அம்சங்கள்:

  • இந்திய நாடாளுமன்றத்தில் எந்தச் சட்டம் இயற்றப்பட்டாலும், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஒப்புதல் தந்தால்தான் அங்கே அது அமலுக்கு வரும்.

  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலம் உள்ளிட்ட அசையாச் சொத்துகளை, பிற மாநிலத்தவர் வாங்க முடியாது. ஆனால், அந்த மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துகள் வாங்கலாம். அந்த மாநிலப் பெண்களை வேறு மாநிலத்தவர் திருமணம் செய்தாலும், அந்தப் பெண் மற்றும் அவரின் வாரிசுகள் அங்கு நிலம் வாங்கும் உரிமையை இழக்கிறார்கள்.

  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே தனிக்கொடி வைத்துக்கொள்ளும் உரிமையுள்ளது. தனி அரசியல் சாசனமும் இருக்கிறது. ஜம்மு -காஷ்மீர் மாநில முதல்வரின் ஒப்புதலின் பேரில் மட்டுமே அங்கு கவர்னரை நியமிக்க முடியும்.

  • அந்த மாநிலத்தின் சட்டமன்றப் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆளுமை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செல்லும்.

  • இந்திய அரசியல் சாசனத்தின் 238-வது பிரிவின்படி இந்தியாவில் எந்த மாநிலத்தின் எல்லையையும் கூட்டவோ, குறைக்கவோ மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் இந்தச் சட்டப்பிரிவு செல்லாது.

35 A - என்ன சொல்கிறது?

1954-ல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டப் பிரிவு, ஏற்கெனவே இருந்த 370 உடன் இணைக்கப்பட்டது. அதாவது மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் யார், அவர்களுக்கு என்ன உரிமை என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் சம உரிமை, சமத்துவம் ஆகியவற்றை பாதிக்காத வகையிலான எந்தவொரு சட்டத்தையும் அந்த மாநிலச் சட்டப்பேரவை இயற்றிக்கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism