Published:Updated:

`பணம் இல்ல; போன் இல்ல; ஊருக்குத் திரும்ப முடியல!’ - வெளிமாநிலங்களில் தவிக்கும் காஷ்மீர் மாணவர்கள்

சத்யா கோபாலன்

சிறப்பு அந்தஸ்து ரத்தால் வெளிமாநிலங்களில் தங்கிப் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மாணவர்கள்
மாணவர்கள் ( AP )

இந்தியாவின் மொத்த கவனமும் கடந்த ஒரு வாரகாலமாக காஷ்மீர் மாநிலத்தின் மீது இருந்தது. `2019 ஆகஸ்டு 5’ இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள், பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த பிரச்னையைக் கையில் எடுத்து நிறைவேற்றியுள்ளது பிரதமர் மோடி தலைமையிலான அரசு.

அமித் ஷா
அமித் ஷா
AP

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு நடைமுறையிலிருந்த சிறப்பு அந்தஸ்து 370, 35A ஆகிய சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுக்கு ஆதரவு ஒருபக்கம் இருந்தாலும் எதிர்ப்புகளும் இருந்து வருகின்றன.

ஆர்டிகிள் 35A ரத்து செய்யப்படுவதன் மூலம் சில அசாதாரண சூழல்கள் என அறிந்த மத்திய அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், அமர்நாத் பக்தர்கள், வெளிமாநில மக்கள், மாணவர்கள், வெளிமாநில பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வெளியேற்றினர்.

காஷ்மீர்
காஷ்மீர்
AP

அதேபோல், வெளிமாநிலங்களில் படிக்கும் ஜம்மு - காஷ்மீர் மாணவர்கள் தங்கள் ஊருக்குச் செல்ல முற்பட்டனர். அவர்கள் தங்களது பண்டிகைக் காலங்களைக் கொண்டாடுவதற்காகவும் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ‘ காஷ்மீரை விட்டு வெளியில் வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், காஷ்மீரைச் சேர்ந்தவர்களான நாங்கள் மீண்டும் எங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப எந்தவித சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சட்டப் பிரிவுகள் 370, 35ஏ! - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இழப்பால் நடக்கப் போவது என்ன?

சண்டிகரைச் சேர்ந்த 24 வயது ஃபாலா நூர் என்ற இளைஞர், “ நான் காஷ்மீரைச் சேர்ந்தவன். எங்கள் ஊரில் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. நானும் சகோதரனும் சண்டிகரில் தங்கிப் படிக்கிறோம்.

வரவுள்ள ஈத் பண்டிகையைக் கொண்டாட ஆகஸ்ட் 10-ம் தேதி காஷ்மீர் செல்வதற்காக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தோம். தற்போது காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாங்கள் எப்படிச் செல்லப் போகிறோம் என்பது தெரியவில்லை.

மாணவர்கள்
மாணவர்கள்
AP

எங்களிடம் உள்ள பணமும் தீர்ந்துவிட்டது. பெற்றோர்கள் பணம் அனுப்பமுடியாத நிலையில் உள்ளனர். தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் பேசக் கூட முடியவில்லை. என் பெற்றோரிடம் பேசி 18 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. எங்களைப் பற்றி நினைத்துப் பெற்றோர்கள் கவலை கொண்டிருப்பார்கள். எனவே எங்கள் நிலையைக் கருத்தில் கொண்டு காஷ்மீர் செல்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்து தரவேண்டும்” என்கிறார்.

காஷ்மீரை சேர்ந்த சுமார் ஆறாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் வெளி மாநிலங்களில் தங்கிப் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.