Published:Updated:

`ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி' - அரசியல் நெருக்கடிகளுக்கிடையே முன்னாள் அமைச்சர் தொடங்கிய புதிய கட்சி

முன்னாள் அமைச்சர் அல்தாஃப் புகாரி
முன்னாள் அமைச்சர் அல்தாஃப் புகாரி

மத்திய அரசின் சட்டப்பிரிவு ரத்து முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காஷ்மீரின் பல அரசியல் தலைவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் புகாரி ஆரம்பித்துள்ள கட்சி பா.ஜ.க-வின் ஆதரவுடன் தொடங்கியுள்ளதாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்து அறிவித்தது. ஜம்மு மற்றும் காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் அரசு அறிவித்தது. இதை அறிவித்து சுமார் ஏழு மாதங்கள் ஆன நிலையில் பி.டி.பி கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் புதிதாக அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளது, காஷ்மீர் அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்தாஃப் புகாரி
அல்தாஃப் புகாரி

மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றின் கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தவர், அல்தாஃப் புகாரி. 2018-ம் ஆண்டு ஆட்சி கவிழ்ந்த பிறகு கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சி தொடர்பான செயல்பாடுகளிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் தற்போது `ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்தக் கட்சியில் பி.டி.பி மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் உட்பட பல உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

விவாதிக்கப்பட்ட காஷ்மீர், டெல்லி வன்முறைகள்... மறக்கடிக்கப்பட்ட 10 பிரச்னைகள் - ஒரு பார்வை!

புதிய கட்சியைத் தொடங்கியபின் செய்தியாளர்களிடம் பேசிய புகாரி, ``நாங்கள் மக்களிடம் அடைய முடியாத கனவுகளைப் பற்றிப் பேசப்போவதில்லை. ஆனால், அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கப்போகிறோம். தேர்தல் எப்போது நடக்கும் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு வருடம் ஆகலாம் அல்லது அதற்கு மேலும் ஆகலாம். அதுவரை நாங்கள் மக்களுக்காக உழைப்போம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தைக் குறைத்ததோடு யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது. இதனால், கடந்த 70 ஆண்டுகளில் ஏற்படாத மற்றும் கற்பனை செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``சட்டப்பிரிவு 370 -ஐ ரத்து செய்வது தொடர்பான விவகாரங்கள் அப்னி கட்சியில் இருக்காது. இதுதொடர்பான வழக்குகள் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களின் சுயமரியாதையையும் பெருமையையும் மீட்டெடுப்பதற்கான பணிகளில் அப்னி கட்சி ஈடுபடும். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் அரசியல் தளத்தை உருவாக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். மக்கள் விரக்தியான மனநிலையில் உள்ளனர். சுற்றுலாத்துறை மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. உள்ளூர் தொழில்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, சவால்களும் பெரிய அளவில் இருக்கின்றன. இவற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்" என்று பேசியுள்ளார்.

அல்தாஃப் புகாரி
அல்தாஃப் புகாரி

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து அங்கு எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. மத்திய அரசின் சட்டப்பிரிவு ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காஷ்மீரின் பல அரசியல் தலைவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். முன்னாள் முதலமைச்சர் ஃபாரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் உள்ளனர். இவர்கள் இன்னும் விடுவிக்கப்படாதது குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், புகாரி ஆரம்பித்துள்ள கட்சி பா.ஜ.க-வின் ஆதரவுடன் தொடங்கியுள்ளதாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

பி.டி.பி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான குலாம் ஹசன் மிர், பி.டி.பி-யின் பொதுச் செயலாளர் தில்வார் மிர் உட்பட பல முன்னாள் அமைச்சர்களும் இக்கட்சியில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

`காஷ்மீர் விவகாரத்தில் பேச வேண்டியது இது மட்டும்தான்!'- ஐ.நா கோரிக்கையை நிராகரித்த இந்தியா
அடுத்த கட்டுரைக்கு