Published:Updated:

`ஜெகத்ரட்சகன் எங்கே போனார்... கதிர் ஆனந்த் ஏன் வந்தார்..?' - காட்பாடி கவுன்சில் கூட்டச் சர்ச்சை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கதிர் ஆனந்துடன் ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகன்
கதிர் ஆனந்துடன் ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகன்

வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியக்குழு அலுவல் கூட்டத்தில் கலந்துகொண்டது, அதிகார துஷ்பிரயோகம் என எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு கவுன்சிலர்களின் `முதல்’ அலுவல் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளிமலை வேல்முருகன் தலைமை வகிக்க, துணைத் தலைவர் சரவணன் வரவேற்று பேசினார். இந்தக் கூட்டத்துக்குச் சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் கலந்துகொண்டதுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கதிர் ஆனந்த், எந்த அடிப்படையில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

கதிர் ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டம்
கதிர் ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டம்

இது தொடர்பாக, நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``அரக்கோணம் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி, அரக்கோணம் மக்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஜெகத்ரட்சகன், வெளியூரைச் சேர்ந்தவர் என்றபோதும், அரக்கோணம் மக்கள் மூன்றாவது முறையாக அவரைத் தேர்ந்தெடுத்தனர். வெற்றிபெற்ற பின், கடந்த காலங்களைப் போன்றே தொகுதிப் பக்கம் தலைகாட்டாமல் இருக்கிறார். காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் எம்.பி என்ற முறையில் ஜெகத்ரட்சகன்தான் கலந்துகொண்டிருக்க வேண்டும்.

பொதுவாகவே, ஒன்றியக்குழுக் கூட்டங்கள் நடைபெறுவதற்கு முன்பு தொகுதி எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதன்படி, எம்.பி ஜெகத்ரட்சகனுக்கும், தொகுதி எம்.எல்.ஏ-வான துரைமுருகனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும். இருவரும் கலந்துகொள்ளாத நிலையில், அவர்களுக்கு பதில் வேறொருவர் கலந்துகொள்ளவும் கூடாது. ஒருவேளை ஜெகத்ரட்சகனும் கலந்துகொண்டிருந்தால் இந்த விமர்சனம் ஏற்பட்டிருக்காது.

ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்

காட்பாடி மக்கள் ஜெகத்ரட்சகனுக்கு ஓட்டுப்போட்டார்களா அல்லது கதிர் ஆனந்துக்கு ஓட்டுப்போட்டார்களா? தொகுதியைக் கடந்து நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கதிர் ஆனந்த் கலந்துகொள்வதற்கு இது ஒன்றும் அவர் சார்ந்த கட்சிக் கூட்டம் கிடையாது. இது, அத்துமீறல். அதிகார துஷ்பிரயோகம்’’ என்றனர் காட்டமாக.

இது குறித்து, காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரகுவிடம் கேட்டபோது, ‘``எம்.பி என்ற முறையில்தான் கதிர் ஆனந்த் கலந்துகொண்டார்’’ என்றவரிடம், ``உங்கள் தொகுதி எம்.பி கலந்துகொள்ளாத நிலையில், கதிர் ஆனந்துக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்கியது ஏன்?’’ என்று கேட்டோம். அதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக, காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகனிடம் கேட்டபோது, ``மரியாதை நிமித்தமாக, எங்களுடைய அழைப்பை ஏற்றுத்தான் கதிர் ஆனந்த் சிறப்பு விருந்தினராக வந்தார். எங்களுடைய எம்.பி ஜெகத்ரட்சகனும் வருவதாகத்தான் இருந்தது. வேறு பணி காரணமாக, கடைசி நேரத்தில் அவரால் வர முடியவில்லை. எதிர்க்கட்சியினர் எழுப்பும் குற்றச்சாட்டுகளில் அர்த்தமே இல்லை. கதிர் ஆனந்த் வந்ததில் எந்தத் தவறுமில்லை. அவர் சென்ற பின்னர்தான் தீர்மானம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசினோமே தவிர, அவர் முன்னிலையில் மன்றக் கூட்டத்தை நடத்தவில்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு