Published:Updated:

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம்: அதானிக்கு எதிர்ப்பு வலுப்பதன் பின்புலம் என்ன?

சென்னை, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம் குறித்த மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டமே வரும் ஜனவரி 22-ம் தேதிதான் நடைபெறவிருக்கிறது. அதற்குள், இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமா?

``சென்னை, எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும்'' எனத் தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் முழங்கிவருகின்றன. வரும் 22-ம் தேதி, இதற்கான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்,

``82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும், 35 லட்சம் மக்களுக்கு வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கான, மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் பூவுலகின் நண்பர்கள் போன்ற சூழலியல் பாதுகாப்பு இயக்கங்களும் மீனவர் சங்கங்கள், அந்தப் பகுதிவாழ் மக்கள் எனப் பலதரப்பிலிருந்தும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு குரல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே இந்தத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, காட்டுப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காட்டுப்பள்ளி துறைமுகம்
காட்டுப்பள்ளி துறைமுகம்
க.சுபகுணம்

``'330 ஏக்கர் பரப்பளவில் தற்போது இருக்கும் அந்தத் துறைமுகத்தை 6,200 ஏக்கர்களுக்கு விரிவாக்கம் செய்வதே அவர்களின் திட்டம். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும், இயற்கைச் சூழலும் அடியோடு அழிந்துவிடும்'' என்பதே திட்டத்தை எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டாக இருக்கிறது. அதேவேளையில், ``எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்கின்றனர். இன்று இந்தத் திட்டத்தை எதிர்க்கும் கட்சிகள் அல்லது அந்தக் கட்சிகளின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் இருந்தபோது, அமைதியாக இருந்தவர்கள் தற்போது வேண்டுமென்றே பிரச்னையைக் கிளப்புகின்றனர்'' என்றும் மத்தியில், மாநிலத்தில் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாகவும் குரல்கள் ஒலிக்கின்றன.

அதானிக்கு எதிராக கிராம சபைத் தீர்மானம்... காட்டுப்பள்ளி மக்களின் அடுத்த அதிரடி!

இந்தநிலையில், துறைமுக விரிவாக்கத் திட்டம் குறித்த கருத்துக்கேட்புக் கூட்டமே வரும் ஜனவரி 22-ம் தேதிதான் நடைபெறவிருக்கிறது. அதற்குள், இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமா?

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வெற்றிச் செல்வனிடம் பேசினோம்.

``எண்ணூர் பகுதியின் இயற்கைச் சூழல் என்பது இயல்பாக உயிர்பன்மைச் சூழல் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி. ஆனால், அந்தப் பகுதியில் பெருமளவு தொழிற்சாலை மயமாகிவிட்டபடியால் அதிக அளவில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்திருக்கிறது. இந்தநிலையில், தற்போது இந்தத் துறைமுகத்தையும் விரிவாக்கம் செய்தால், சூழலியல் பாதிப்பு இன்னும் அதிகமாகும். இந்தத் திட்டத்துக்காக, நில மீட்பு என்ற பெயரில் கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, களாஞ்சி சேறு, கோட சேறு போன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6 கி.மீ நீளத்த்துக்கு 2,000 ஏக்கர் பரப்பளவுக்கு மணல் கொட்டப்படும். கடல் பகுதியை மணல்கொட்டி நிரப்பி, அதை அதன் இயல்பிலிருந்து மாற்றுவது மிகப்பெரிய சூழலியல் பாதிப்புகளை உண்டாக்கும்.

வெற்றிச் செல்வன்
வெற்றிச் செல்வன்

அடுத்ததாக, மழைக் காலங்களில் பழவேற்காடு ஏரியும், கொற்றலை ஆறும், எண்ணூர் கழிமுகமும்தான் சென்னையின் வெள்ள வடிகாலாகச் செயல்பட்டுவருகின்றன. இந்தத் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால் மீதமிருக்கும் கடற்கரையும் அரிக்கப்பட்டு, கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயமிருக்கிறது. அதன் பிறகு, சென்னை வெள்ளத்தில் மிதப்பதை யாராலும் தடுக்க முடியாது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 35 லட்சம் மக்கள் வெள்ள அபாயத்தில் தள்ளப்படுவார்கள். தற்போதிருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகம் மட்டும் அறிவித்தவாறு 20 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டால், பல மீனவ கிராமங்கள் கடலுக்குள் போவதோடு, பழவேற்காடு பகுதியே கடல் அரிப்பால் கடுமையாக பாதிக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தில் இதுவரை நடந்த எந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்திலும் மக்கள் தெரிவித்த கருத்துகளுக்கு உரிய மதிப்பளிக்கப்பட்டது இல்லை. மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை, எத்தனை பேர் ஏற்றுக்கொண்டார்கள், எத்தனை பேர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மாவட்ட ஆட்சியர் அறிக்கையாக, `Expert appraisal committee'-க்கு அனுப்புவார். அந்தக் குழு ஆராய்ந்த பிறகு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குப் பரிந்துரைப்பார்கள். பிறகு அமைச்சகம் அனுமதி தரும். கூடங்குளம் அணு உலை மூன்று மற்றும் நான்காவது உலைகளுக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் 95 சதவிகித மக்கள் அணு உலை வேண்டாம் என்றுதான் கருத்து தெரிவித்தார்கள். ஆனால், மாவட்ட ஆட்சியர், மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று அறிக்கை கொடுத்தார். கருத்துக்கேட்புக் கூட்டங்கள் வெளிப்படையாக நடப்பதில்லை என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அதனால்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது'' என்கிறார் அவர்.

ஜெயபிரகாஷ் நாராயணன்
ஜெயபிரகாஷ் நாராயணன்

``சென்னை துறைமுகம், தூக்துக்குடி துறைமுகம் ஆகியவை ஏற்கெனவே அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனங்களாகத்தான் இருந்தன. பிறகு, அவை கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்கு விற்கப்பட்டன. சென்னை துறைமுகமும் தனியார் துறைமுகமாக கிட்டத்தட்ட மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு துறைமுகத்தை தனியார் முதலாளிக்கு விற்கும்போது, அது ஏற்கெனவே இருக்கிற துறைமுகங்களின் வருவாய்க்கும் பாதிப்பை உருவாக்கும். ஒருவேளை ஏற்கெனவே இருக்கிற நிறுவனம் துறைமுகத்தை விற்க முன்வந்தாலும் அதை அரசுதான் கையகப்படுத்த வேண்டுமே தவிர மீண்டும் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது. இந்திய அரசும் நீண்டகால கடன் திட்ட அடிப்படையில் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

``அ.தி.மு.க அரசும் - மத்திய பா.ஜ.க அரசும் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தின் நலன்களை அதானி குழுமத்துக்குத் தாரை வார்க்காமல் சூழலியல் நலனைப் பெரிதும் பாதிக்கும் இந்தத் திட்டத்துக்குச் சுற்றுப்புறச்சூழல் அனுமதியோ அல்லது திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் எவ்வித நடவடிக்கையையோ எடுக்கக் கூடாது."
மு.க.ஸ்டாலின், தலைவர், தி.மு.க

துறைமுகம், விமான நிலையம், ரயில்வே நிலையம் ஆகியவற்றை தனியாரிடம் விற்பனை செய்ய மோடி தலைமையிலான மத்திய அரசு முயன்றுவருகிறது. எப்படி என்.எல்.சி-யில் குறிப்பிட்ட பங்குகளை தமிழக அரசு கையகப்படுத்தியிருக்கிறதோ அதேபோல, இது போன்ற அரசு சார் நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு ஒப்படைக்க முன்வரும்போதும் கையகப்படுத்த வேண்டும். அதானிக்கு எப்படி இந்திய அரசு கடனுதவி அளிக்கிறதோ, அதேபோல தமிழக அரசுக்கும் உதவி செய்ய வேண்டும். தனியார் முதலாளிகள் லாபம் கொழிப்பதைவிட அரசுசார் வணிகம் பெருகுவதே மக்களுக்கு நன்மை பயக்கும்'' என்கிறார் வழக்கறிஞரும், தமிழர் முன்னணி அமைப்பின் தலைவருமான ஜெயபிரகாஷ் நாராயணன்.

அதானி
அதானி
vikatan

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து, பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,

``ஒரு திட்டத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் எதற்கெடுத்தாலும் முட்டுக்கட்டை போடுவதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை. எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் என்பது பல வருடங்களாக இயங்கிவருவதுதான். அதை இன்னும் விரிவாக்கம் செய்வது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்துக்கும்தான் நல்லது. தமிழகத்தில் எந்தத் துறையில் தனியார் இல்லை... அதிலும் தமிழக அரசியல்வாதிகள் முதலாளிகளாக இல்லாத தனியார் துறை எது... தனியார் பங்களிப்பு என்பது தவறான விஷயம் கிடையாது. அரசாங்கத்தின் வேலை தொழில் செய்ய வேண்டியது அல்ல நிர்வாகம் செய்ய வேண்டியது மட்டும்தான். பெருநிறுவனங்கள் இல்லாவிட்டால் நாடு எப்படி வளர்ச்சியடைந்திருக்கும்... வேலைவாய்ப்புகள் எப்படிக் கிடைத்திருக்கும்...

மரபு சமையல் மூலம் அதானி கொண்டுவரும் திட்டத்தை எதிர்க்கும் பழவேற்காடு மீனவப் பெண்கள்! 

இந்தத் திட்டம் பா.ஜ.க அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்டதா... அதற்குத் தமிழகத்தில் நிலம் ஒதுக்கப்பட்டது 2010 தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான். அதேபோல, சுற்றுப்புறச்சூழல் அனுமதி கொடுத்தது தி.மு.க அங்கம்வகித்த காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான். அப்போது அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்காக ஆதரித்தார்கள். இனி வரும் கால்ங்களில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் தற்போது எதிர்க்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது ஒரு மாதிரியும் இல்லாதபோது ஒரு மாதிரியும் நடந்துகொள்வது தி.மு.க-வின் இயல்பாகிவிட்டது''என்றவரிடம்,

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

``அரசியல் கட்சிகள் சரி, சூழலியல் அமைப்புகள், மீனவர் அமைப்புகள் அந்தப் பகுதி மக்கள் எதிர்க்க என்ன காரணம்?'' எனக் கேட்க,

``தமிழகத்தில் செயல்படும் சூழலியல் அமைப்புகள் பெரும்பாலும் கட்சி சார்ந்துதான் இயங்கிவருகின்றன. அதேவேளையில், சுற்றுப்புறச்சூழல் பாதிக்காத வகையில் சட்டப்படிதான் திட்டங்கள் செயல்படுத்தப்படும். காட்டுப்பள்ளி மக்கள் தங்களின் வாழ்வாதாரம் போய்விடுமோ என்கிற அச்சத்தில் போராடுகிறார்கள். அவர்களுக்குச் சரியான மாற்று ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துதர வேண்டும். அதற்காக துறைமுக விரிவாக்கமே நடக்கக் கூடாது என்று சொல்வதை ஏற்க முடியாது'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு